நடிகர்கள் : கிஷோர், சார்லி, வின்செண்ட் நகுல்
இசை : பிஜிபால்
ஒளிப்பதிவு : ஷினோஸி
இயக்கம் : அஜூ கிழுமலா
தயாரிப்பு : சசிகலா புரொடக்ஷன்ஸ்
கிராமம் ஒன்றில் இருக்கும் காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர், ஐந்து ஆண் காவலர்கள் இருக்கிறார்கள். புதிதாக வரும் சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தின் தலைமை பொறுப்பை ஏற்கிறார். காவல் நிலைய சிறைக்குள் கைதி ஒருவர் இருக்கிறார். இதற்கிடையே காவல் நிலைய மின்பொருட்களை பழுது பார்க்க இரண்டு பேர் வருகிறார்கள். சில நேரத்திற்கு பிறகு காதல் ஜோடி ஒன்று பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்திற்குள் நுழைகிறது.
இந்த சமயத்தில், சப்-இன்ஸ்பெக்டரின் காதலி தனது பிறந்தநாளை காவல்நிலைத்தில் கேக் வெட்டி கொண்டாடுகிறார். அப்போது சில நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட, அந்த சமயத்தில் காவலர் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையை செய்தது யார்? என்பதை கண்டுபிடிக்க வரும் போலீஸ் உயர் அதிகாரியான கிஷோர், கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதை சிறுவர்களின் மேடை நாடகத்தை விட மோசமாக சொல்லியிருப்பதே ‘ட்ராமா’.
படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவருமே புதுமுகங்களாக இருப்பதோடு, ஆர்வகோளாறு நடிகர்களாகவும் இருக்கிறார்கள். 100 ரூபாய்க்கு நடிக்க சொன்னால் 1000 ரூபாய்க்கு நடித்து, படம் பார்ப்பவர்களை துவைத்து தொங்க விட்டுவிடுகிறார்கள்.
படத்தில் தெரிந்த முகமாக வரும் கிஷோர், இந்த படத்தில் எப்படி நடிக்க ஒப்புக்கொண்டார் என்பது கடைசி வரைக்கும் புரியவில்லை. அவர் கொடுத்த வேலையை குறை இல்லாமல் செய்திருந்தாலும், அவரை சுற்றி இருக்கும் கதாப்பாத்திரங்களின் ஓவர் ஆக்டிங் நம்மை ரம்பமாக அறுத்துவிடுகிறது.
கிஷோரை தவிர்த்து நடிகர் ஷார்லி தனது அனுபவம் வாய்ந்த நடிப்பால் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்.
காவல் நிலையத்திற்குள் நடக்கும் கதையை மிக சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறது ஷினோஸின் ஒளிப்பதிவு. பிஜிபால் இசையும் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது.
ஒரு காவல் நிலையத்தில் முழு படமும் நடப்பது போன்ற கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் அஜூ கிழுமலா, அதை ஒரே ஷாட்டில் எடுப்பதற்கு கடினமாக உழைத்திருந்தாலும், அந்த உழைப்பு படத்தில் தெரியாமல் போனது பெரும் சோகம்.
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்பதால் படக்குழுவின் உழைப்பை பாராட்டினாலும், படமாக பாராட்டும்படி இல்லை என்றால் கூட குறைந்தபட்சம் பார்க்க வேண்டிய படமாக இருந்திருக்கலாம். ஆனால், அப்படி இல்லாமல் படம் பார்ப்பவர்களை படாதபாடு படுத்தும் இந்த ‘ட்ராமா’ ரொம்ப போருமா…ரகமாக உள்ளது.
ரேட்டிங் 2/5
Comments are closed.