நடிகர்கள் : கிஷோர் கடம், இஷிதா தேஷ்முக், யோகேஷ் சோஹோனி, நிஷாத் போஹிர், அஞ்சு பிரபு
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு : அமலேந்து செளத்ரி
இயக்கம் : சந்தோஷ் தேவகர்
தயாரிப்பு : சந்தோஷ் தேவகர், திக்ஷா தேவகர்
மனிதர்களின் மனதுக்குள் புதைந்திருக்கும் ஆசைகள், வன்மம், பொறாமை, துரோகம் போன்ற உணர்வுகள் எந்தச் சூழலில் வெடித்துச் சிதறும் என்பதைச் சொல்லும் திரைப்படங்கள் எப்போதும் தனித்துவமான அனுபவத்தைத் தரும். அந்த வகையில், மகாராஷ்டிராவின் பாரம்பரிய கிராமியச் சடங்கை மையமாக வைத்து, மனித மனங்களின் இருண்ட பக்கங்களைத் திரில்லர் பாணியில் வெளிப்படுத்தியிருக்கும் திரைப்படம் ‘கோந்தல்’.
2025-ல் மராத்தி மொழியில் வெளியான இப்படம் தற்போது அதே பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிர கிராமங்களில் திருமண நிகழ்வுடன் தொடர்புடைய பாரம்பரியச் சடங்குதான் கோந்தல். இந்தச் சடங்கை வெறும் கலாச்சாரப் பின்னணியாக மட்டும் பயன்படுத்தாமல், பல மனிதர்களின் ரகசியங்களும் திட்டங்களும் ஒன்றோடொன்று மோதும் களமாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் தேவகர்.
1970-களின் மகாராஷ்டிர கிராமம். விருப்பமில்லாத திருமணத்தில் மணமகளாகும் இஷிதா தேஷ்முக், புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்குப் பதிலாக வேறொரு கனவுடன் இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு நடைபெறும் கோந்தல் சடங்கில் கிராமமே திரண்டு நிற்கிறது. இரவு முழுவதும் நடைபெறும் அந்தக் கொண்டாட்டத்தின் பின்னணியில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கிறது.
மணமகளின் அழகில் மயங்கிய ஊர்த் தலைவரின் மகன், அவளைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளத் துடிக்கிறார். ஆனால் இஷிதாவோ தனது முன்னாள் காதலனுடன் வெளியேறுவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். இவற்றையெல்லாம் அறியாத அப்பாவிக் கணவன், தனது மனைவியுடன் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையைத் தொடங்கும் கனவில் இருக்கிறார்.
இதற்கிடையில், கடந்த காலத்தில் ஊர்த் தலைவரால் ஏற்பட்ட பாதிப்பால் தனது மகனை இழந்த முதியவர் ஒருவர், பல ஆண்டுகளாக மனதுக்குள் வளர்த்த பழிவாங்கும் உணர்வை வெளிப்படுத்தச் சரியான தருணத்திற்காகக் காத்திருக்கிறார்.
இப்படி ஒரே இடத்தில் கூடும் மனிதர்களின் மனங்களில் வெவ்வேறு எண்ணங்கள். வெளியே கடவுளுக்கான வழிபாடும் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்க, உள்ளுக்குள் ஆசை, அதிகாரம், பழிவாங்குதல், காதல் எனப் பல உணர்வுகள் மோதுகின்றன.
இரவு ஆழமாக ஆழமாக எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேறுகின்றன. யார் யாரை ஏமாற்றுகிறார்கள், யாருடைய திட்டம் வெற்றி பெறுகிறது, இறுதியில் வெளிப்படும் உண்மை என்ன என்பதுதான் படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை.
கதையின் மையக் கதாபாத்திரமான கணவன் வேடத்தில் நடித்திருக்கும் யோகேஷ் சோஹோனி, ஆரம்பம் முதல் அப்பாவித்தனமும் அன்பும் நிறைந்த மனிதராகவே வலம் வருகிறார். மனைவியின் மீது மற்றவர்கள் கொண்டிருக்கும் தவறான எண்ணங்களைக்கூடப் புரிந்துகொள்ளாமல் அவர்களிடம் அன்பாகப் பழகும் அவரது கதாபாத்திர வடிவமைப்பு ரசிக்க வைக்கிறது.
ஆனால், இறுதிப் பகுதியில் அவரது கதாபாத்திரம் எடுக்கும் திருப்பம் முற்றிலும் எதிர்பாராதது. அதுவரை வெளிப்படுத்திய மென்மையான உடல்மொழிக்கு நேர்மாறாக, தனது பார்வையிலேயே கோபத்தையும் ஆளுமையையும் வெளிப்படுத்தும் காட்சிகளில் அசத்துகிறார். குறிப்பாக இறுதிக்காட்சிகளில் அவரது நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலமாக மாறுகிறது.
மணமகளாக நடித்திருக்கும் இஷிதா தேஷ்முக், அழகும் தன்னம்பிக்கையும் கலந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு. தன்னைச் சுற்றியிருக்கும் ஆண்களின் ஆசைகளை நன்கு அறிந்திருந்தும், அவற்றை அலட்சியமாக எதிர்கொள்ளும் விதம் கவனிக்க வைக்கிறது. அதேசமயம், முன்னாள் காதலனுடன் இணைவதற்காகத் திட்டமிடும் காட்சிகளில் காதலும் பிடிவாதமும் கலந்த தனது உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
தெருக்கூத்துக் கலைக்குழுவின் மூத்தவராக பிவாபா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிஷோர் கடம், அமைதியான நடிப்பின் மூலம் கதைக்குள் ஒருவிதமான பதற்றத்தைத் தொடர்ந்து உருவாக்குகிறார். தனது மனதுக்குள் இருக்கும் பழிவாங்கும் எண்ணத்தை வெளிக்காட்டாமல், சரியான தருணத்திற்காகக் காத்திருக்கும் அவரது நடிப்பு கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது.
ஊர்த் தலைவரின் மகனாக வரும் நிஷாத் போஹிர், முன்னாள் காதலனாக நடித்திருக்கும் அஞ்சு பிரபு, ஊர்த் தலைவராக நடித்திருக்கும் சுரேஷ் விஸ்வகர்மா உள்ளிட்ட அனைவருமே தங்களது கதாபாத்திரங்களுக்கு இயல்பான உயிரூட்டியிருக்கிறார்கள்.
படத்தின் முக்கியமான பல காட்சிகள் இரவு நேரத்தில், குறைந்த வெளிச்சத்தில் நடைபெறுகின்றன. தீபங்கள், பூஜை விளக்குகள் மற்றும் சடங்குகளுக்கான ஒளி ஆகியவற்றை மட்டுமே நம்பி நகரும் காட்சிகளை ஒளிப்பதிவாளர் அமலேந்து சௌத்ரி மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார்.
கிராமியச் சடங்கின் சூழல், மனிதர்களின் முகபாவனைகள், இரவின் மர்மமான தன்மை என அனைத்தையும் கேமரா மூலம் அழகாகக் கடத்தியிருக்கிறார். சில இடங்களில் ஒளிப்பதிவே கதாபாத்திரமாக மாறி பார்வையாளர்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
இளையராஜாவின் இசை படத்திற்கு மற்றொரு சிறப்பம்சம். மராத்திய கிராமியப் பாரம்பரிய இசை, சடங்குப் பாடல்கள், தெருக்கூத்துக் கலைக்கான இசைக்கருவிகளின் ஓசை எனப் படத்தின் பின்னணிச் சூழலோடு ஒன்றிணைந்த இசையை வழங்கியிருக்கிறார். குறிப்பாக இடம்பெறும் மெலடிப் பாடல் உணர்வுப்பூர்வமாக அமைந்து மனதில் நிற்கிறது.
ஆஷிஷ் மாட்ரேவின் படத்தொகுப்பு படத்தின் மெதுவான நகர்வுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. நீண்ட நேரக் காட்சிகள், ஒரே ஷாட்டில் நகரும் காட்சிகள், அதிக வசனங்கள் எனப் பல சவால்கள் இருந்தாலும், அவை சலிப்பை ஏற்படுத்தாத வகையில் காட்சிகளைத் தொகுத்திருப்பது பாராட்டுக்குரியது.
எழுதி இயக்கியிருக்கும் சந்தோஷ் தேவகர், ஒரு கிராமியத் திருமணச் சடங்கை மையமாக வைத்து சாதாரணமான காதல் கதையைச் சொல்லாமல், பல்வேறு கதாபாத்திரங்களின் உளவியல் போராட்டங்களை ஒன்றிணைத்து வித்தியாசமான கிரைம் திரில்லரை உருவாக்கியிருக்கிறார்.
படத்தின் வேகம் சில இடங்களில் மெதுவாக இருந்தாலும், அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பைத் தொடர்ந்து தக்கவைத்திருக்கிறார். குறிப்பாக, கதாபாத்திரங்களின் உண்மையான நோக்கங்கள் படிப்படியாக வெளிப்படும் விதமும், இறுதிப் பகுதியில் ஏற்படும் திருப்பங்களும் திரைக்கதைக்கு வலு சேர்க்கின்றன.
மராத்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கதையாக இருந்தாலும், அதன் உணர்வுகளும் மனிதர்களின் பிரச்சினைகளும் மொழி எல்லைகளைக் கடந்தவை. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இப்படத்தில் பரிச்சயமில்லாத நடிகர்கள் நடித்திருந்தாலும், அவர்களது இயல்பான நடிப்பும் கதையின் சுவாரஸ்யமும் அந்தக் குறையை உணர விடுவதில்லை.
ஒரு கிராமத்தின் இரவுப் பொழுதில் நடைபெறும் சடங்குக்குள் எத்தனை விதமான மனித மனங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதை வித்தியாசமான திரைக்கதை மூலம் உணர்த்தியிருக்கும் ‘கோந்தல்’, வழக்கமான திரில்லர் படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தைத் தருகிறது.
கலாச்சாரத்தின் வெளிச்சத்தில் மனித மனங்களின் இருளைப் படம்பிடித்திருக்கும் ‘கோந்தல்’, வித்தியாசமான கதைகளையும் எதிர்பாராத திருப்பங்களையும் விரும்பும் ரசிகர்கள் ரசிக்கக்கூடிய திரைப்படம்!
ரேட்டிங் 4.5/5
Comments are closed.