எந்த நேரத்திலும் – விமர்சனம்

225

Yendha-Nerathilum-Movie-review

கன்னிப்பெண் பேயாக வந்து பழிவாங்கும் கதைகளில் 1001வது கதை தான் இந்தப்படம்.. இந்தப்படத்தில் பேய் பழிவாங்கும் காரண காரியங்களில் என்ன வித்தியாசம் காட்டியுள்ளார்கள்…? பார்க்கலாம்..

ஊட்டி, கோத்தகிரி இவைதான் கதைக்களம்.. வசதியான எஸ்டேட் ஓனரின் மகன் சிவராமகிருஷ்ணன், சாதாரண வீட்டு பெண்ணான லீமா பாபுவை காதலிக்கிறார். ஆனால் சிவராமனின் அக்கா சான்ட்ராவும் அவரது அப்பாவும் லீமாவை பார்த்ததுமே ஜெர்க் ஆகிறார்கள்.. சான்ட்ரா லீமா பாபுவை பிடிக்கவில்லை என காரணம் சொல்கிறார்.. அன்றைய தினமே சான்ட்ராவின் தந்தையும் கணவரும் விபத்தில் சிக்கி பலியாகின்றனர்.

ஒரு மாறுதலுக்காக அக்காவையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு கோத்தகிரி பங்களாவுக்கு வருகிறார் சிவராம்.. ஆனால் வந்த தினத்தில் இருந்தே சான்ட்ரா அமானுஷ்ய தாக்குதலுக்கு ஆளாகிறார். ஒரு சாமியாரின் மூலமாக சான்ட்ரா மகள் மீது பேய் புகுந்திருப்பதும் அது சான்ட்ராவை பழிவாங்க துடிப்பதும் சிவராமகிருஷ்ணனுக்கு தெரிய வருகிறது.

இறந்துபோய் பேயாக வந்திருக்கும் பெண்ணும் பார்ப்பதற்கு அசப்பில் சிவராமகிருஷ்ணனின் தற்போதைய காதலி லீமா பாபு போலவே இருந்ததும் அந்த சமயத்தில் சான்ட்ராவுக்கும் (பழைய) லீமாவுக்கும் ஒரு விஷயத்தில் ஏற்பட்ட போட்டி காரணமாக லீமா அநியாயமாக உயிரை விட்டதும் இப்போது சான்ட்ராவை பழிவாங்க பேயாக வந்திருப்பதும் தெரிய வருகிறது.

சான்ட்ராவுக்கும் லீமாவுக்கும் அப்படி என்ன பகை..? சான்ட்ராவை லீமாவின் ஆவி பழிவாங்கியதா..? தனது அக்காவை பேயிடமிருந்து சிவராமகிருஷ்ணன் காப்பாற்றினாரா என்பது க்ளைமாக்ஸ்.

நாயகன் சிவராமகிருஷ்ணன் ஜஸ்ட் லைக் தட் அலட்டிக்கொள்ளாமல், தனக்கு செட்டாவது போல ஒரு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்.. ஆனால் அந்த கேரக்டரில் பல நேரம் ‘தேமே’ என நிற்கிறார். நடிப்பை இம்ப்ரூவ் பண்ண இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.. இன்னொரு நாயகன், சான்ட்ராவின் கணவராக வரும் யஷ்மித்துக்கு ஜென்டில்மென் கதாபாத்திரம்..

கதைநாயகர்கள் ஓரளவு சிறப்பாகவே நடித்திருந்தாலும் படத்தில் அதிகமான பங்களிப்பு கதைநாயகி லீமாபாபு மற்றும் சான்ட்ராவுக்கும் தான். லீமாபாபு நனவுக்கதாபாத்திரத்தை விட பேயாக வரும்போது செம மிரட்டு மிரட்டுகிறார். சான்ட்ராவோ, இதற்கு நேர் எதிர்… நினைவில் செம ஸ்டைல் வில்லியாக மிரட்டிவிட்டு… கூடவே பேய்க்கு பயந்து நடுங்கி கெஞ்சி அழும்போது அய்யோ பாவம் என கலங்கடிக்கிறார். அப்படி அசகாய நடிப்பு. கேரக்டரில் மட்டுமல்ல நடிப்பிலும் சான்ட்ரா வில்லி தான் என நிரூபித்துள்ளார்..

பி.சதீஷின் பின்னணி இசையும் சாலை சகாதேவனின் ஒளிப்பதிவும் படத்திற்கு த்ரில் மற்றும் திகில் மூடை உருவாக்க முயற்சித்திருக்கின்றன. மற்றபடி குழந்தைகள் மீது பேய் புகுந்துகொண்டு டார்ச்சர் செய்யும் இந்த சிஸ்டத்துக்கு யாராவது 144 போடக்கூடாதா பாஸ்..? இருந்தாலும் அந்த குழந்தையின் நடிப்பும் சான்ட்ராவை அது கொடுமைப்படுத்துவதும் குறைசொல்ல ஏதுமில்லை. ஆனால் சான்ட்ராவுக்கு மிகப்பெரிய தண்டனையே அவரது கணவரையும் அப்பாவையும் ஒரே நாளில் பறிகொடுத்தது தான்.. அதற்கு அந்த பேயும் கூட காரணமல்ல… ஆனால் அதற்குப்பிறகு நொந்துபோய் கிடக்கும் அவரை பேய் பழிவாங்க வருவதில் தான் மனது உடன்பட மறுக்கிறது.

வழக்கமான பேய்ப்படங்கள் போலவே இதிலும் இடைவேளை வரை கதையை ஏனோ தானோ என இழுத்து நகர்த்தினாலும் இடைவேளைக்குப்பின் படம் விறுவிறுப்பாக செல்வதென்னவோ உண்மை.. அந்தவகையில் இயக்குனர் முத்துக்குமாரை பாராட்டலாம்.

Comments are closed.