அனுஷ்காவுக்கு முப்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்னவோ உண்மைதான். ஆனால் முன்னெப்போதையும் விட இப்போதுதான் கவனமாக கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதற்கேற்ற மாதிரி அவரது நடிப்புக்கு தீனிபோடுவது போல தொடர்ந்து சரித்திரப்படங்களாக அவரைத்தேடி வருகின்றன.
ஏற்கனவே. தெலுங்கில் குணசேகர் இயக்கத்தில் ‘ராணி ருத்ரமாதேவி’ என்ற படத்திலும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ‘பாஹுபாலி’ என்ற சரித்திர படத்திலும் நடித்து வருகிறார் அனுஷ்கா. சினிமாவுக்கு வருவதற்கு முன்பே கத்திச்சண்டை போன்ற, சில தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்த அனுஷ்கா, ‘அருந்ததி’யில் கத்தி சண்டை காட்சியிலும் நடித்து அதிர வைத்தார். அதே போல், ‘இரண்டாம் உலகம்’ படத்திலும், திறமையாக வாள்சண்டை போட்டிருந்தார். இதோ இப்போது ‘பாஹ்மதி’ என்ற வரலாற்றுப்படத்திலும் நடிக்க அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது.
அனுஷ்கா ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கவேண்டும்.. சுலபமான கேரக்டர்களில் நடித்து சம்பாதித்துவிட்டுப் போகலாமே என தன்னைப்பற்றி வெளியே உலவும் கேள்விகளுக்கு அனுஷ்கா சொல்லும் பதில் இதுதான். “நடிப்புங்கிறது காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பார்க்குற ஆஃபீஸ் வேலை மாதிரி இல்ல. அதில் நேரம் காலம் பார்க்க முடியாது. நல்ல படங்கள் தேடிவரும்போது அதற்கான கடின உழைப்பை கொடுத்தே ஆகவேண்டும். இந்த கதாபாத்திரத்திற்கு அனுஷ்கா தான் பொருந்துவார் என நினைத்து என்னைத்தேடி வருபவர்களை நான் ஏமாற்றத் தயாராக இல்லை” என்கிறார் அனுஷ்கா சூடாக.