சில கேள்விகளுக்கு விடையே இருக்காது… சினிமாவிலும் பல நிகழ்வுகள் அதுபோலத்தான். சிவாஜியை வைத்து பதினேழு படங்களை தயாரித்த பாலாஜி எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்கூட தயாரிக்கவில்லை என்பது ஆச்சர்யம் தரும் செய்தி.
அதேபோல எம்.ஜி.ஆரை வைத்து 16 படங்களை எடுத்து தள்ளிய சாண்டோ சின்னப்ப தேவர், நடிகர் திலகம் சிவாஜியை வைத்து ஒரு படம்கூட எடுக்கவில்லை என்பது திரையுலகம் இன்றுவரை வியக்கும் ஆச்சர்யங்களில் ஒன்று.
அவ்வளவு ஏன்..? எம்.ஜி.ஆரின் புகழுக்கு காரணமான பாடல்களை தந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தேவர் ஃபிலிம்ஸின் படம் ஒன்றிற்குகூட இசை அமைக்கவில்லை என்பதும் இன்னொரு சரித்திர ஆச்சர்யம்.
எதற்கு பழைய சரித்திரங்களை புரட்டுகிறோம் என்றுதானே நினைக்கிறீர்கள்.. விஷயம் இருக்கிறது. கிட்டத்தட்ட இருபது வருடங்கள் தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத நபராக, சூப்பர்ஸ்டாரின் ஆஸ்தான நடிகராக இருந்த ரகுவரன், உலகநாயகன் கமலுடன் இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை..
இதேநிலை தான் நடிகர் விவேக்கிற்கும். அவரும் இதுவரை கமலுடன் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. இந்தப்பட்டியலில் இன்னும் ஒருவர் இருக்கிறார். அவர்தான் நதியா.. எண்பது, தொன்னூறுகளில் கொடிகட்டி பறந்த நதியாவும் கமலுடன் ஜோடி சேரவே இல்லை..
இப்போது முக்கியமான விஷயத்துக்கு வருகிறோம். மோகன்லால் நடித்து சூப்பர்ஹிட்டான ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் கமல் நடிக்க இருக்கிறார் என்பது தெரியும். அவருக்கு ஜோடியாக மலையாளத்தில் நடித்த மீனாவே நடிக்கலாம் என்று முதலில் சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது அந்த வாய்ப்பு நதியாவிற்கு போகும்போல தெரிகிறது. விரைவில் இது உறுதிப்படுத்தப்பட்டால், 25 வருடங்களுக்கு முன் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திய கமல்-நதியா ஜோடி இப்போது அதற்கு பரிகாரம் செய்த மாதிரியும் இருக்கும்.