முன்பெல்லாம் ஒரு படம் ரிலீஸாவதற்கு முன் பத்திரிக்கையாளர்களை அழைத்து பிரஸ்மீட் வைப்பதோடு முடித்துக்கொள்வார்கள் படக்குழுவினர். ஆனால் இந்த போட்டாபோட்டி யுகத்தில் அதெல்லாம் யானைப்பசிக்கு சோளப்பொறி மாதிரி. தங்களது படத்தை ரசிகர்களுக்கு அடிக்கடி வித்தியாசமான முறையில் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.
அதற்கு படக்குழுவினர் கண்டுபிடித்த வழிதான் படத்தை புரமோட் பண்ணுவது. அதாவது விளம்பரப்படுத்துவது. ஒருவகையில் இதை படத்திற்கான மார்க்கெட்டிங் என்றும் சொல்லலாம். ஷாருக்கான் நடித்து சமீபத்தில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படம் வசூலை அள்ளியதற்கு இந்த புரமோஷனும் முக்கியமான காரணம்.
இந்த பாணியை பின்பற்றித்தான் தற்போது தனது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை ஊர் ஊராகப்போய் படக்குழுவினருடன் சேர்ந்து புரமோட் செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் இந்தப்படத்திறகாக, நேற்று கோவை, சேலம், திருச்சி என ஒரே நாளில் மூன்று ஊர்களில் படத்தின் புரமோஷன் சம்பந்தமான விழாவில் கலந்துகொண்டவர், இன்று திருநெல்வேலிக்கு விசிட் அடித்திருக்கிறார்.
அதேபோல மதகஜராஜா படமும் செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீஸாகிறது. சுந்தர்.சி, விஷால், சந்தானம் என கியாரண்டியான கூட்டணி என்றாலும் ரிலீஸுக்காக தீயாக வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார் விஷால். இந்தப்படத்திற்கு கேரளாவிலும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளதால் செப்டம்பர் 2ஆம் தேதி கொச்சினில் நடக்கும் புரமோஷன் விழாவில் சுந்தர்.சி, வரலட்சுமி ஆகியோருடன் கலந்துகொள்கிறார். இதை தொடர்ந்து ஹைதராபாத்திற்கும் பெங்களூருக்கும் செல்ல ஒரு திட்டமும் வைத்திருக்கிறார் விஷால்.