
போலீஸ் சித்தரவதை, விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் மர்ம சாவு என வாரத்திற்கு இரண்டு செய்திகளாவது நம் கண்களில் படமால் போகாது.. அப்படி நிஜத்தில் கோவையை சேர்ந்த ஆட்டோ ட்ரைவர் ஒருவர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு பயங்கரத்தை இரண்டுமணி நேரம் படமாக எடுத்து நம்மை உறைய வைத்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
ஆந்திராவில் கடை ஒன்றில் வேலைபார்ப்பவர் ‘அட்டகத்தி’ தினேஷ். ஒருநாள் திடீரென மூன்று இளைஞர்களுடன் இவரையும் சேர்த்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்கிறது போலீஸ்.. ஆனால் அங்கே சென்றபிறகு இவர்கள் செய்யாத ஒரு குற்றத்தை இவர்கள் மேல் சுமத்தி அதை ஒப்புக்கொள்ளும்படி அவர்களை சித்தரவதை படுத்துகிறது போலீஸ்..
அவ்வளவு அடி, உதை நரகவேதனையை தாங்கிக்கொண்டு உண்மையை சொல்ல மறுப்பதுடன் உண்ணாவிரதத்திலும் ஈடுபடுகின்றனர் இந்த நால்வரும். அதையும் தங்களது சூழ்ச்சியால் முறியடிக்கும் போலீஸார் இன்னும் உக்கிரமாக அவர்களை பிரித்து மேய்கின்றனர்.. எதிர்பாராதவிதமாக ஆந்திராவுக்கு வழக்கு விஷயமாக வரும் தமிழ்நாட்டு போலீஸ் அதிகாரி சமுத்திரக்கனியின் உதவியால் அந்த கொடூர சித்தரவதையில் இருந்து விடுதலை ஆகின்றனர்..
ஆனால் கிடைத்தது உண்மையான விடுதலை அல்ல.. தங்களுக்கு தாங்களே போட்டுக்கொண்ட முள்வேலி என்பதை சமுத்திரக்கனியின் செயல்கள் நிரூபிக்கின்றன. அப்பாவி இளைஞர்களின் முடிவு என்ன ஆனது என்பதே க்ளைமாக்ஸ்.
பொல்லாதவனில் பைக் திருட்டு, ஆடுகளம் படத்தில் சேவல் சண்டை என தான் எடுத்துக்கொள்ளும் கதைக்களத்தின் அனைத்து பகுதிகளையும் அதன் ஒவ்வொரு சாத்திய கூறுகளையும் மிக நுட்பமாக அலசும் வெற்றிமாறன், இதில் போலீஸாருக்குள் ஒளிந்திருக்கும் மிருகம், விசாரணை என்கிற பெயரில் எப்படி கட்டவிழ்த்து விடப்படுகிறது என்பதை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறார்.. படம் பார்க்கும் நாமும் விசாரணையில் சிக்கிக்கொண்ட பயத்தை, ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் ஏற்படுத்தி விடுகிறார் வெற்றிமாறன்.
அப்பாவி இளைஞர்களாக தினேஷ், முருகதாஸ் மற்றும் இருவர். இவர்கள் விசாரணை என்கிற பெயரில் அனுபவிக்கும் சித்தரவதையையும் வலியையும் அப்படியே பார்வையாளர்களுக்கும் கடத்தி அவர்களையும் அனலில் தகிக்க வைத்திருக்கிறார்கள்.. அவ்வளவு அடி உதைகளையும் தாங்கிக்கொண்டு செய்யாத தப்பை ஒத்துக்கொள்ள மறுக்கும் இவர்களின் நெஞ்சுரம் நம்மை மனம் கனக்க வைக்கிறது..
போலீஸ் அதிகாரியாக சமுத்திரக்கனி.. இதற்கு முன் பல படங்களில் நாம் போலீஸ் அதிகாரியாக பார்த்துவந்து சமுத்திரகனி வேறு.. இவர் வேறு.. அந்த அளவுக்கு தனது கதாபாத்திரத்தில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.. படத்தின் இன்னொரு பக்கபலம் கிஷோரின் நடிப்பு.. கொஞ்ச நேரமே வந்தாலும் நெகிழவைக்கும் நடிப்பு ‘கயல்’ ஆனந்தியுடையது.
அரசியலும் போலீஸ் அதிகாரமும் கூட்டு சேர்ந்தால் சாமான்யனின் கதி என்ன ஆகும் என்பதை பதைபதைப்போடு சொல்லியிருக்கும் அதே வேளையில் நீதிமன்றம் என்கிற கலங்கரை விளக்கம் நமக்காக இருக்கிறது என்கிற நம்பிக்கையையும் பார்வையாளர்கள் மனதில் பதியவைத்து படத்தில் சித்தரவதைக்கு ஆளான கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் ஆசுவாசம் தருகிறார் இயக்குனர் வெற்றிமாறன்..
படத்திற்கு ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை பக்கபலம் என்றால் சவுன்ட் இன்ஜினியர் உதயகுமாரின் நேர்த்தியான ஆடியோகிராபி அதை சிறப்பாக உள்வாங்கி காட்சிகளுக்கு ஏற்றவாறு கச்சிதமாக பொருத்தி காட்சிகளின் வீரியத்தை கூட்டியுள்ளது. ஒளிப்பதிவாளர் ராமலிங்கமும் தன் பங்குக்கு லாக்கப் காட்சிகளில் மிரட்டுகிறார்.
போலீஸ் லாக்கப், அதற்குள் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் ஜீவ மரண போராட்டம்,. லாக்கப் கொடூரங்கள் என் இவளவு டீடெய்லாக இதுவரை தமிழில் எந்தப்படமும் சொன்னதே இல்லை.. அதேபோல மொழி வேறாக இருந்தாலும் போலீசுக்கு மட்டும் முகம் ஒன்றுதான் என்பதையும் ஆணியடித்த மாதிரி பதிவுசெய்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
விசாரணை – தவிர்க்கவே முடியாத, தவிர்க்க கூடாத முக்கியமான படம்.
Comments are closed.