உயிருக்கு உயிராக படத்தின் இயக்குனர் விஜய மனோஜ்குமாரை தெரியுமா உங்களுக்கு? இப்படிச்சொன்னால் கண்டுபிடிப்பது சிரமம்தான். சாமுண்டி, கட்டபொம்மன், வானவில் என சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய அதே மனோஜ்குமார்தான். இப்போது நியூமராலஜிப்படி தனது பெயரை விஜய மனோஜ்குமார் என மாற்றி வைத்துக்கொண்டு யூத்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் களம் இறங்கியிருக்கிறார்.
விஜயகாந்த், சரத்குமார், அர்ஜூன் என ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து இயக்கிய விஜய மனோஜ்குமார் இப்போது சஞ்சீவ், நந்தனா, ப்ரீத்தி என கிட்டத்தட்ட புதுமுகங்களை வைத்து இந்தப்படத்தை முடித்திருக்கிறார். ஷாந்தகுமார் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் பிரபு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங் படிப்பை மையமாக வைத்து இதுவரை யாரும் சொல்லாத கதையை படமாக்கியிருக்கிறாராம் விஜய மனோஜ்குமார்.
முதலில் இந்தப்படத்திற்கு பீஸ்கட்டை ரெங்கசாமி மூணாம் கிளாஸ் என பெயர் வைத்திருந்த விஜய மனோஜ்குமார் பிறகு உயிருக்கு உயிராக என டைட்டிலை யூத்ஃபுல்லாக மாற்றிவிட்டார். மண்ணுக்குள் வைரம் படத்தின் மூலம் விஜய மனோஜ்குமாரை இயக்குனராக தமிழ்சினிமாவில் அறிமுகப்படுத்திய கோவைத்தம்பி தான், தனது மதர்லேண்ட் பிக்சர்ஸ் மூலம் இந்தப்படத்தை தயாரிக்கிறார். வேந்தர் புரொடக்ஷன்ஸ் இந்தப்படத்தை வெளியிடுகிறது.