“இந்த நகரத்தை எத்தனை பேர் கவனிக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் இந்த நகரம் ஏதோ ஒரு வகையில் அனைவரையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நகரத்துக்கு கழுகு கண்கள். இங்கு எல்லோரும் சுவராஸ்யமாக, வாழ்கிறோம்.. ஆனால் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ்கிறோமா’..? ‘மெல்லிசை’ படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி சொல்லும்போதே நமக்கு திக்’கென்று இருக்கிறது.
இயக்குனர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய இவரின் நகரம் பற்றிய கோணமும் புதிதாக இருக்கிறது. வித்தியாசமான கதை களங்களில் ஜொலிக்கும் விஜய்சேதுபதி விடுவாரா இதை.. ‘கப்’பென்று பிடித்துக்கொண்டதோடு சமீபத்தில் தான் கேட்டு வியந்த கதை என்று எல்லோரிடமும் பாராட்டியும் வருகிறார்.. விஜய் சேதுபதி ஜோடியாக ‘ப்ப்ப்பா.. யாருடா அது’ புகழ் காயத்ரி நடித்துள்ளார்.
கிட்டத்தட்ட முக்கால்வாசிப் படப்பிடிப்பை நடத்தி முடித்தும் விட்டார்கள். சரி..அது என்ன மெல்லிசை என பெயர் வைத்திருக்கிறீர்களே என இயக்குனரிடம் கேட்டால், “மெல்லிசை என்பது மேலும் மேலும் கேட்க தூண்டும் சுகமான இசை வடிவம், மேலும் இந்தப்படத்தின் கதாபாத்திரங்கள் இசை சம்பந்தப்பட்டவர்கள். அதுவே ‘மெல்லிசை’ என விளக்கம் அளிக்கிறார் ரஞ்சித். இசை பற்றிய படம் என்றாலும் படத்திற்கு இசை அமைப்பது சி.எஸ்.சாம் என்கிற அறிமுக இசை அமைப்பாளர் தான்.