பக்கத்து வீட்டு பணக்கார தோழியிடம் இரவல் வாங்கிய விலையுயர்ந்த நகை தொலைந்துபோனால் அடுத்து என்ன நடக்கும்..?. அது தான் இந்த ‘வெண்நிலா வீடு’ படம். இன்றைய வாழ்க்கையில் அத்தியாவசிய ஆடம்பர பொருளாகிவிட்ட தங்கம், ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை எப்படி சீர்குலைக்கிறது என்பதை உறை(யவை)க்கிற மாதிரி சொல்லியிருக்கிறார்கள்.
செந்தில்குமார் (மிர்ச்சி செந்தில்) தான் கதாநாயகன்.. இயல்பாக, அமைதியாக போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கை தடம் புரண்டால் ஒரு குடும்பத்தலைவன் எப்படி நொடிந்துபோவான் என்பதை இடைவேளைக்கு பின்னான காட்சிகளில் வாழ்ந்தே காட்டியிருக்கிறார். க்ளைமாக்ஸில் அவர் காட்டும் உக்கிரம் சாதாரணமாக எந்த ஒரு சராசரி மனிதனுக்கும் அந்த நொடியில் ஏற்படக்கூடியதே.
எளிமையான நடுத்தர வர்க்க பெண்மணியாக விஜயலட்சுமி. செந்திலின் மனைவியாக வரும் விஜயலட்சுமிக்கும் பக்கத்து பிளாட்டில் குடிவரும் பணக்கார பெண்ணான சிருந்தா ஆஷாப்புக்கும் ஏற்படும் நட்பு தான் பிரதானம்.. மிக உயர்ந்த விலையுள்ள நகையை சிருந்தாவிடம் இரவல் வாங்வதும் அது தொலைந்து போனதும் அவர் படும் மான நஷ்ட அவஸ்தைகளும் என படத்தின் பிரதான தூணே விஜயலட்சுமியின் நடிப்பு தான்.
பிடிவாதக்காரியாக இருந்தாலும்கூட அவளுக்குள்ளும் எளியவர்களிடம் பழகும் குணம் இருக்கிறது என்பதற்கும் ஆனால் சூழ்நிலை அப்படிப்பட்ட பெண்ணைக்கூட குணக்கேடானவளாக மாற்றிவிடுகிறது என்பதற்கும் சிருந்தா கேரக்டர் நல்ல உதாரணம். மலையாள நடிகை என்பதாலோ என்னவோ நடிப்பும் இயல்பாக இருக்கிறது.
சிருந்தாவின் தந்தையாக, வார்த்தைகளில் எந்நேரமும் அமிலத்தை உமிழும் கந்துவட்டி கொடூரனாக ‘வழக்கு எண்’ முத்துராமன், நடப்பு வாழ்க்கையில் வெள்ளையுடை தரித்து உலாவரும் ஓநாயை கண்முன்னே நிறுத்துகிறார். அவரது முடிவும் தங்கத்தாலேயே நிகழ்வது ‘நச்’.
கிராமத்து நண்பர்களாக பிளாக் பாண்டி, டாடி ஒரு டவுட்டு சரவணன்-செந்தில் மூவரும் காமெடி பண்ணினாலும் அவ்வளவாக சிரிப்பு வர மறுக்கிறது. பிளாக் பாண்டி அவரது அப்பா ‘சித்தன்’ மோகனுக்கு கொடுக்கும் ட்ரீட்மென்ட் மட்டும் குபீர் ரகம்.. செந்திலின் மாமனாக வரும் ஐந்துகோவிலானின் நடிப்பு அசத்தலோ அசத்தல். அவர்தான் வசனமும் எழுதியிருக்கிறார்.
கிட்டத்தட்ட சீரியலுக்குண்டான கதை போல தோன்றினாலும் இடைவேளைக்குப்பின் திரைக்கதையில் முட்டுக்கொடுத்து நிமிர்த்தி இருக்கிறார் இயக்குனர் வெற்றி மகாலிங்கம். முதல்பாதியில் கதை செத்தேன கிராமத்துக்கு தாவுவது கதையில் இடிக்கிறது. இனி யாராவது இரவல் நகை வாங்கும்போது சின்னதாக ஒரு பயம் வந்தால்கூட, அதுதான் இந்தப்படத்தின் வெற்றி.
Comments are closed.