குறையொன்றுமில்லை – விமர்சனம்

56

விவசாயத்தை புறக்கணித்துவிட்டு வேறு வேறு தொழில்களை தூக்கிப்பிடிப்பதால் இழப்பு என்னவோ நமக்குத்தான்.. ஆனால் விவசாயத்தை ஊக்குவித்து ஒரு விவசாயியே தனது உற்பத்திக்கு விலை நிர்ணயிக்கும் சூழல் உருவாக வேண்டும் என்பதை வலியுறுத்தி எடுக்கப்பட்டிருப்பதற்காகவே படக்குழுவினருக்கு நம் பாராட்டுக்கலை முதலில் தெரிவித்துக்கொள்வோம். .

எம்.பி.ஏ படித்தாலும் தனது கவனத்தை எல்லாம் விவசாயத்தை எப்படி மேம்படுத்துவது என சதா சிந்திக்கும் கேரக்டரில் புதுமுகம் கீதன் அழகாக பொருந்தியிருக்கிறார். அதற்காக காதலைக்கூட இரண்டாம் பட்சமாக நினைக்கும்போது அவர் கதாபாத்திரத்தின் மீது இன்னும் மதிப்பு கூடுகிறது.

அவருக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார் கதாநாயகி ஹரிதா. கீதனுடன் ஒட்டாமல் விலகி நடிப்போது போன்ற காதல் உணர்வுகளுடன் அவர் படும் அவஸ்தை, சன்னமாக அவ்வப்போது தலைதூக்கும் ஈகோ என 2௦ வயதில் நன்கு பக்குவப்பட்ட பெண்ணாக நடிப்பை வெளிப்படுத்துகிறார். கிராமத்தில் உலாவரும் கீதனின் நண்பர்களின் நடிப்பும், அவருடன் அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர்களின் நடிப்பும் படு யதார்த்தம்.

இரைச்சல் இல்லாத பாடல்களை தந்திருக்கும் இசையமைப்பாளர் ரமணுவும் தெற்கத்தி கிராமத்தின் அழகியலை படமாக்கியிருக்கும் விதத்தில் ஒளிப்பதிவாளர் அசோக் குமாரும் கவனம் ஈர்க்கிறார்கள்.. மார்க்கெட்டிங் துறையில் உள்ள போட்டி, லாபம் தரும் தொழிலுக்கு மட்டுமே கொடுக்கப்படும் முக்கியத்துவம் என இன்றைய வர்த்தக உலகத்தில் விவசாயம் பின் தங்கியுள்ளதை விரிவாக சித்தரித்துள்ளார் இயக்குனர் கார்த்திக் ரவி..

கூடவே ஒரு மென்மையான காதலையும் லாவகமாக இணைத்துள்ளார். குறிப்பாக நாயகன், நாயகி இருவரின் எதிர் எதிர் குணாதிசயங்களையும் தங்களது சுயத்தை விட்டுக்கொடுக்காத தன்மையையும் இறுதிவரை தூக்கிப்பிடித்துள்ளார் இயக்குனர்.

நாயகன் கிராமத்தில் விவசாயம் சம்பந்தமாக மார்க்கெட்டிங் செய்யப்போவதாக கூறிவிட்டு அங்கே போய் கிராமத்தினருக்கு மருத்துவம் கற்றுத்தருவது உள்ளிட்ட முயற்சிகளில் இறங்குவது அவர் எடுத்துக்கொண்ட வேலையை தடைபோடுவதாக இருப்பதை தவிர்த்திருக்கலாம்.. அதேபோல ஹரிதாவின் வெளிநாட்டுப்பயணமும் வலிந்து திணிக்கப்பட்டதாகாவே தோன்றுகிறது.

இருந்தாலும் புகைபிடித்தல், மது அருந்துதல் என இளைஞர்களை தவறான பாதைக்கு திசை திருப்பும் எந்த ஒரு காட்சியும் இல்லாமலும் அதற்குள் இன்றைய சமூகத்திற்கு தேவையான ஒரு செய்தியையும் சொல்லியிருக்கும் இந்தப்படத்தில் பெரிதாக .குறையொன்றுமில்லை’.

Comments are closed.