நடிகர்கள் : ஷீலா, ஹரி கிருஷ்ணன், மாரிமுத்து, ஜானகி, கர்ணன்
இசை : மணிகண்டன் முரளி
ஒளிப்பதிவு : ஏ.குமரன்
இயக்கம் : ஜஸ்டின் பிரபு
தயாரிப்பு : மஞ்சள் சினிமாஸ் – கோல்டன் சுரேஷ், எஸ்.விஜயலட்சுமி
சிறு வயது முதலே சிலம்பம் சுற்றுவதில் சாதிக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும் நாயகி ஷீலா, அதனால் திருமணம் வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார். ஆனால், அவருக்கு கணவராக வரப்போகும் ஹரிகிருஷ்ணன் மனைவியின் லட்சிய பயணத்திற்கு துணை நிற்பவர் என்பதால், ஷீலா அவரை திருமணம் செய்து கொள்கிறார்.
ஆனால், திருமணத்திற்குப் பிறகு கணவரின் நிலை மாறுகிறது. அவருக்கு துணையாக இருக்க வேண்டிய சூழ்நிலை எற்பட, கணவன், குடும்பம் என்ற இல்லற வாழ்க்கை வளையத்திற்குள் சிக்கிக்கொள்ளும் ஷீலாவின் லட்சியம் என்ன ஆனது? என்பதை பெண் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி சொல்லியிருப்பதே ‘வேம்பு’.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஷீலா, தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். சாதிக்க துடிக்கும் அவரது வாழ்க்கை திடீரென்று தடம் புரண்டு, போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் போது தனது இயலாமையையும், அதே சமயம் விடாமுயற்சியையும் தன் நடிப்பின் மூலம் மிக எதார்த்தமாகவும், வலிமையாகவும் வெளிப்படுத்தி வேம்புவாக பார்வையாளர்கள் மனதில் பதிந்து விடுகிறார்.
ஷீலாவின் கணவராக நடித்திருக்கும் ஹரி கிருஷ்ணன், பலமான கதாபாத்திரத்தை பாராட்டும்படி கையாண்டிருக்கிறார்.
மாரிமுத்து, கர்ணன், ஜானகி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
மணிகண்டன் முரளி இசையில் பாடல்கள் ரசிக்கவும், திரும்ப திரும்ப கேட்கவும் வைக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.
ஏ.குமரன் ஒளிப்பதிவில் கதைக்களமும், கதாபாத்திரங்களின் உணர்வுகளும் பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கச் செய்கிறது.
எளிமையான கதாபாத்திரங்களாக இருந்தாலும் அவர்கள் மூலம் வலிமையான கருத்துகளை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ஜஸ்டின் பிரபு.
தற்காப்புக் கலைகளின் சிறப்புகள் மற்றும் தேவைகள், பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றை பிரச்சாரமாக அல்லாமல் திரை மொழியில் நேர்த்தியாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஜஸ்டின் பிரபு, எத்தனை சோதனைகள் வந்தாலும் நான் நினைத்ததை செய்து முடித்து சாதிக்க வேண்டும், என்பதை சொல்லி தன்னம்பிக்கை கொடுத்திருக்கிறார்.
ரேட்டிங் 3.5/5
Comments are closed.