இளைஞர்கள் மத்தியில் பிரபலமான குரல் பாடகர் வேல்முருகனின் குரல் அடுத்தடுத்து ஹிட் பாடல்களை கொடுத்தவருக்கு நிறைவேறாத ஆசை இருந்து வந்தது. ஒன்று ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடுவது. அடுத்து இளையராஜா இசையில் பாடுவது. இந்த வாய்ப்பிற்காக காத்திருந்தவருக்கு ’மரியான்’ படத்தில் ‘கொம்பன் சுறா வேட்டையாடும்’ பாடலை பாட ஏ.ஆர்.ரகுமானிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனால் அதை ட்ராக் பாடலாக வைத்துக்கொண்டு யுவன் குரலில் பாடலை பதிவு செய்து விட்டனர். குரல் வரை வந்த வாய்ப்பு திரைக்கு வராமல் போனது.
சமீபத்தில் ’ஒரு ஊர்ல’ என்ற புதிய படத்திற்கு இசையமைத்து கொண்டிருந்த இளையராஜா படத்தின் இயக்குனரிடம் ”படத்தின் டைட்டில் பாடலை நான் பாடலாம்னு இருக்கேன் நீங்க யாரையாவது மனசுல வெச்சுருக்கீங்களா” என்று கேட்டிருக்கிறார். இயக்குனரும் வேல்முருகன் பெயரை சொல்ல, “உடனே வேல்முருகனை வரச்சொல்லுங்க” என்று ராஜாவும் பெருந்தன்மையோடு ஒத்துகொண்டு வேல்முருகனை பாடவைத்து பதிவு செய்திருக்கிறார்.