வேல்முருகன் போர்வெல்ஸ் – விமர்சனம்

211

 

கஞ்சா கருப்பு சொந்தமாக வேல்முருகன் போர்வெல்ஸ் வைத்து நடத்துபவர்.. அதில் வேலை பார்ப்பவர் தான் கதாநாயகன் மகேஷ் மற்றும் பிளாக் பாண்டி, தீப்பெட்டி கணேசன் குழுவினர். மகேஷுக்கு டி.வி நிகழ்ச்சி ஒன்றில் பார்த்த பக்கத்து ஊர்த்தலைவரின் மகள் ஆருஷி மீது காதல் ஏற்படுகிறது.

கஞ்சா கருப்பு ஆந்திரா போன சமயத்தில், கிராமம் கிராமமாக போர் போட கிளம்பும் இந்த குரூப் ஆருஷியின் ஊர் வழியாக வருகிறார்கள். தண்ணீர்ப்பஞ்சம் உள்ள அந்த ஊரில் ஆருஷி மனதில் இடம்பிடிப்பதற்காக யாரையும் கேட்காமல் கோவில் நிலத்தில் போர் போட்டு அடிபம்ப்பும் மாட்டுகிறார் மகேஷ்..

ஆனால் நினைத்ததற்கு மாறாக, தண்ணீர் பிடிக்கும் மக்களுக்குள் அடிதடி சண்டை வர, தப்பியோடும் மகேஷ் & கோ-வை பிடித்து காயம்பட்டவர்களுக்கு சரியாகும் வரை ஊர் வேலைகளை செய்ய உத்தரவிடுகிறார் ஆருஷியின் அப்பா.. அங்கே வேலை செய்யும்போது அந்த ஊரில் காதலுக்கு தடை இருப்பது தெரியவர, தன காதலை சொல்லாமல் மனதுக்குள் அழுத்துகிறார் மகேஷ்.

இந்நிலையில் காணாமல் போன லாரியையும் தன் வேலையாட்களையும் தேடி ஆருஷியின் கிராமத்துக்கு வரும் கஞ்சா கருப்பு, ஊர் எதிர்ப்பை மீறி லாரியை மீட்க முயற்சி செய்கிறார். அனைவரும் சேர்ந்து லாரியை மீட்டார்களா ? மகேஷின் காதலுக்கு வழி பிறந்ததா என்பதற்கு கடைசி நேர பரபரப்பில் விடை சொல்லியிருக்கிறார்கள்.

தயாரிப்பாளரான கஞ்சா கருப்புவே காமெடி நடிகர் என்பதால் படத்தையும் காமெடியாக எடுக்க முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளார்கள்.. நல்ல கதைக்களம்.. போர்வெல்ஸ் ஓனராக கஞ்சா கருப்பு கச்சிதம்.. ஆரம்பத்தில் காமெடி, க்ளைமாக்ஸ் நெருங்கும்போது செண்டிமெண்ட் என சரிபாதியாக நடிப்பை பிரித்து மிரட்டுகிறார். அதிலும் க்ளைமாக்ஸிற்கு முன் உடையப்போகும் மதகை அடைக்க எடுக்கும் முயற்சியில் மனித நேயம் காட்டும்போது நடிப்பில் உயர்கிறார்.

அங்காடி தெரு மகேஷ்.. குருட்டுத்தனமான காதலுக்காக முட்டாள்தனமான முயற்சிகளில் ஈடுபடும் கதாபாத்திரத்தில் ஓரளவு பொருந்துகிறார். அவரது நண்பர்களாக வரும்  பிளாக் பாண்டி, தீப்பெட்டி கணேசன் உட்பட மொத்த குழுவினரும் முரட்டுத்தனமான முட்டாள்களாக இருப்பதுபோல காட்டியிருப்பது கதையோட்டத்தில் எரிச்சலையே ஏற்படுத்துகிறது.

கதாநாயகி ஆருஷிக்கு கிராமத்து காதலி வேடம்.. அதில் என்ன ஸ்கோர் பண்ணமுடியுமோ, அதற்கு முயற்சி செய்திருக்கிறார்.. இமான் அண்ணாச்சி, பாவா லட்சுமணன் இருவரும் காமெடிக்கு சப்போர்ட் பண்ண திணறியுள்ளார்கள்.

காமெடிப்படம் தான் என்றாலும், போர்வெல் லாரியை துருப்பிடிக்கும் அளவுக்கு நிறுத்தி வைக்கும் மகேஷ் மற்றும் கஞ்சா கருப்பு, அதை மீட்பது குறித்து கிராமத்து தலைவரிடம் பேசுவது போன்ற காட்சியமைப்பு எதுவும் இல்லாததால், இயக்குனர் எம்.பி.கோபி எழுதிய ஸ்கிரிப்ட்டின் இஷ்டப்படி செயல்பட்டிருப்பது லாஜிக்காக ஒத்துவரவில்லை.

போர்வெல்ஸ் என்கிற புதிதான கதைக்களத்தில் கதையை மெருகேற்றி, நடிகர்களை நெறிப்படுத்தி, காட்சிகளை முறைப்படுத்தி எடுத்திருந்தால் படம் இன்னும் சுவராஸ்யமாக வந்திருக்குமே என்கிற எண்ணம் தான் படம் முடிந்து வரும்போது நமக்குள் எழுகிறது.

Comments are closed.