வீரம் – விமர்சனம்

102

தான் திருமணம் செய்துகொண்டால் தனக்கு மனைவியாக வருகிறவள் தன் நான்கு தம்பிகளை தன்னிடமிருந்து பிரித்துவிடுவாளோ என பயந்துகொண்டு திருமணம் செய்யாமலேயே வாழ்கிறார் அஜித். தாங்கள் காதலிக்கும் பெண்களை திருமணம் செய்ய வேண்டுமென்பதற்காக அண்ணனுக்கு திருமணம் செய்துவைக்க நினைக்கிறார்கள் அவரது தம்பிகள் பாலா, விதார்த் மற்றும் இருவரும். அவர்களது குடும்ப வக்கீல் சந்தானத்தின் உதவியுடன் காதல் வலை பின்னி, அதில் கிராமத்துக்கு வரும் தமன்னாவுடன் அஜித்தை கோர்த்து விடுகிறார்கள் அவர்கள் திட்டப்படியே அஜித்துக்கும் தமன்னாவுக்கும் காதல் மலர்கிறது.

அமைதியான தமன்னாவுக்காக தன் அடிதடி குணங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு தமன்னாவின் கிராமத்துக்கு செல்கிறார் அஜித். ஆனால் சூழ்நிலை மீண்டும் அவரை அரிவாள் தூக்க வைக்கிறது. ஆனால் இந்தமுறை அவர் கத்தியை எடுப்பது அவருக்காக அல்ல.. அப்படியானால் யாருக்காக அரிவாள் தூக்குகிறார்..? ஏன் என்பதை வீரத்துடன் விவேகம் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

முரட்டுக்காளை ரஜினிகாந்த்தையும் வானத்தைப்போல விஜயகாந்த்தையும் மிக்ஸ் பண்ணினால் அதுதான் ஒட்டன்சத்திரம் விநாயகம். வேறு யாரு நம்ம அஜித் தான். கோட் சூட்டை கழட்டி வைத்துவிட்டு வேட்டியை மடித்துக்கட்டி வீரம் காட்டியிருக்கிறார் அஜித். ஒரு கிராமத்துக் கதையில் அஜித்தை பார்ப்பதே புதுசாக இருக்கிறது.

காமெடி, ஆக்‌ஷன் என இரண்டு ஏரியாவிலும் பிரித்து மேய்கிறார் அஜித். அதிலும் அந்த ரயில் சண்டைக்காட்சியில் ஒவர் ரிஸ்க் எடுத்திருக்கும் அஜித்தை பாராட்ட வேண்டிய அதே நேரத்தில் கேர்ஃபுல் அஜித் என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது. தன் குடும்பத்தில் வேலை செய்யும் அப்புக்குட்டி திருமணம் செய்யும்போது அவருக்கு மார்க்கெட்டில் ஒரு கடையையே எழுதி வைக்கும் காட்சியில் பாட்டாளிகளை நெகிழவைக்கிறார் அஜித்.

பிளாக் டீ குடித்ததால் அஜித்தின் முடி நரைத்திருக்கிறது என இந்தமுறை அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு முன்கூட்டியே லாஜிக் சொல்லிவிடுகிறார்கள். நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் தொடர்ந்து பார்த்தால் போரடித்து விடும் அல்லவா..? அடுத்த படத்தில் அஜித் இந்த லுக்கை மாற்றி விடுவார் என நம்புவோம்.

அஜித்தின் நல்ல குணங்களை பார்த்து பார்த்து படம் முழுக்க பிரமித்துப்போகும் வேலையை இந்தப் படத்திலும் கச்சிதமாக செய்திருக்கிறார் அழகுக்கிளி தமன்னா.

விநாயகம் பிரதர்ஸின் அடிதடி வழக்குகளை கவனிப்பதற்காகவே குடும்ப வக்கீலாக வருகிறார் சந்தானம். அஜித்திக்கும் தமன்னாவுக்கும் காதல் வர இவர் கொடுக்கும் ஐடியாக்கள் எல்லாமே கலாட்டாதான். சரக்குக்கு ஏத்த சை டிஷ் மாதிரி கச்சிதமாக அமைந்திருக்கிறது சந்தானத்தின் காமெடி.

பாசக்கார தம்பிகளாக பாலா, விதார்த், சுஹைல், முனீஸ். படம் முழுக்க அண்ணன் பின்னாடியே சுற்றி வந்து தங்களது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள். இடைவேளைக்குப்பின் எண்ட்ரி ஆகும் தம்பி ராமையா அஜித்திடம் தான் முன்பு அடி வாங்கிய காட்சியை நினைவுக்கு கொண்டுவரும் காட்சிகள் எல்லாம் சிரிப்பு மயம் தான்.

தமன்னாவின் தந்தையாக ஊர்ப்பெரியவராக வருகிறார் நாசர். மிரட்டல் வில்லனாக வரும் பிரதீப் ராவேத்திற்கு ஏற்படும் காமெடியான முடிவு ரசிக்க வைக்கிறது. எதிர்பாராத திடீர் வில்லனாக வரும் அதுல் குல்கர்னி ஜெயிலுக்குள்ளே இருந்துகொண்டே கர்ஜிக்கிறார். க்ளைமாக்ஸில் அஜித்தின் கையால் அடிவாங்கி உயிரை விடுகிறார்.

தேவிஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் என்றால் அதில் வழக்கமாக ஒரு துள்ளல் இருக்கும். அது இந்தப்படத்தில் மிஸ்ஸிங் ஆகிறது. அதேபோல வெளிநாட்டில் படமாக்கப்பட்ட டூயட்களும் மனதில் ஒட்டவில்லை. ஆக்‌ஷன் படம் என்பதால் அந்தக்குறையும் பெரிதாக தெரியவில்லை. அஜித் ரசிகர்களுக்கு ஜனரஞ்சகமான படம் ஒன்றை தருவதற்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில் ‘வீரம்’ ஒரு கிராமத்து திருவிழா கொண்டாட்டம்.

Leave A Reply

Your email address will not be published.