
சென்னையில் இருக்கும் சந்தானத்துக்கு கிராமத்தில் தன தந்தை தனக்காக எழுதிவைத்த ஒரு பங்களா ஒன்று இருப்பது தெரியவர, அதை விற்பதற்காக கிராமத்துக்கு கிளம்புகிறார். ரயிலில் பழக்கமாகும் அஸ்னாவின் நட்பை வைத்து கிராமத்தில் இருக்கும் அவரது தந்தையின் உதவியுடன் பங்களாவை விற்க முயற்சி செய்கிறார். ஆனால் தன்னை கொலை செய்ய 27 வருடங்களாக வெறியோடு காத்திருக்கும் குடும்பம் அது என்பது தெரியவருகிறது.
எதிரியாக இருந்தாலும் விருந்தாளியாக வந்தவரை தங்களது வீட்டில் வைத்து கொல்வதில்லை என்பது அந்த குடும்பத்தின் கொள்கை.. அதனால் சந்தானத்தை வெளியேறவைத்து பழிதீர்க்க திட்டமிடுகின்றனர். இதிலிருந்து சந்தானம் எப்படி புத்திசாலித்தனமாக தப்பிக்கிறார் என்பதுதான் மீதிக்கதை.
மற்ற காமெடி நடிகர்கள் முயற்சி செய்தது போல சந்தானமும் ஹீரோவாக ஆவர்த்தனம் செய்திருக்கும் படம் என்ற அளவில் மட்டும் போனால் உங்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருக்கிறது. சந்தானம் தனது புதிய பரிமாணத்தில் நம்மை பரவசப்படுத்தியிருக்கிறார். படத்தில் ஒரு பாடலுக்கு சந்தானம் போடும் டான்ஸ் மூவ்மெண்ட்டுகளுக்கு உங்களை மறந்து கைதட்டி விசில் அடிப்பீர்கள்.
ஒவ்வொரு காமெடி நடிகரும் ஹீரோ என்கிற அந்தஸ்தை தொடுவது என்பது அவ்வளவு எளிதானது இல்லை. ஆனால் சந்தானம் தன்னுடைய முழு சுவாசத்தையும் தனது கேரக்டரில் செலுத்தியிருக்கிறார். வழக்கமான சந்தானமாக ஆங்காங்கே தனது ஆட்டத்தை ஆடினாலும் தேவையான இடங்களில் மற்றவர்களை பேசவிட்டு அண்டர்பிளே செய்யவும் தவறவில்லை.
ஜாடிக்கேத்த மூடிபோல சரியான ஜோடியாக சந்தானத்திற்கு பொருந்துகிறார் கதாநாயகி அஸ்னா. இந்தப்படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமாகி இருக்கும் சோலார்ஸ்டார் ராஜகுமாரனுக்கு இனி வாய்ப்புகள் தேடிவரும். சித்தார்த் விபினின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கும் அளவுக்கு இல்லையென்றாலும் போரடிக்கவும் இல்லை என்பது பெரிய ஆறுதல். சக்தியின் ஒளிப்பதிவில் எந்த குறையும் வைக்கவில்லை.
ஏற்கனவே தெலுங்கில் வெற்றிபெற்ற படம் என்கிற பலத்துடன் களம் இறங்கியுள்ள ஸ்ரீநாத் அதை தமிழுக்கு ஏற்றமாதிரி விறுவிறுப்பாக மாற்றியிருப்பதில் கவனிக்க வைத்திருக்கிறார். ஒரு கதாநாயகனாகவும் சந்தானம் நம்மை கவர்ந்துள்ளார் என்பது(தான்) உண்மை.
Comments are closed.