ஆன்லைனில் லீக்கான ‘உத்தா பஞ்சாப்’ ; பழி தீர்த்த சென்சார் போர்டு..!

230

Udta-Punjab (1)

பாலிவுட்டில் உருவாகியுள்ள ‘உத்தா பஞ்சாப்’ என்கிற படத்திற்கு சென்சார் போர்டு 89 கட்டுகள் கொடுத்த விவகாரம் நாடெங்கிலும் உள்ள சினிமா படைப்பாளிகளையும் சினிமா ஆர்வலர்களையும் கொந்தளிக்க வைத்தது.. தங்களுக்கான அதிகாரத்தில் சென்சார் வரம்பு மீறுவதாக போர்க்கொடி தூக்கிய தயாரிப்பாளர் தரப்பு இதற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இதனால் இந்த சென்சார் விவகாரத்தில் தலையிட்ட மும்பை உயர்நீதிமன்றம் இத்தனை கட்டுகள் கொடுக்கும் அளவுக்கு படத்தில் சர்ச்சையான காட்சிகளோ கருத்தோ இல்லையே எனக்கூறி சென்சார் போர்டுக்கு குட்டுவைத்ததுடன் சில அறிவுரைகளையும் வழங்கியது..

அதன்பின் வேண்டாவெறுப்பாக படத்திற்கு ஒரு சில கட்டுகளை கொடுத்த சென்சார் போர்டு அதிகாரிகள், சொல்லி வைத்தாற்போல ‘ஏ’ சான்றிதழையும் தர தவறவில்லை… அப்பாடா இதையாவது தந்தார்களே என பெருமூச்சுவிட்ட படக்குழுவினர் இன்று படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். இந்தநிலையில் தான் படத்தின் சென்சார் காபி ஆன்லைனில் லீக்கான செய்தி அறிந்து ஸ்தம்பித்து போயுள்ளனர் படக்குழுவினர்.

சுமார் 60 கோடி செலவில் இந்தப்படத்தை தயாரித்துள்ளார் பாலிவுட் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப்.. இந்த சூழ்நிலையில் படம் ரிலீசாவதற்கு முன்பே படத்தின் காபி, அதுவும் சென்சாருக்கு அனுப்பிவைக்கப்பட்ட பிரதி ஆன்லைனில் ரிலீசாகியுள்ளது என்றால், இது நிச்சயம் சென்சார் அதிகாரிகளின் கைங்கர்யமாகத்தான் இருக்கும் என்பது சிறு குழந்தைகளுக்கு கூட தெரியுமே.. இதுகுறித்து படத்தரப்பில் இருந்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படித்தான் மலையாளத்தில் கடந்த வருடம் ‘பிரேமம்’ படத்தின் சென்சார் காபி லீக்காகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின்னணியில் சென்சார் அலுவழக்கத்தில் பணிபுரிந்த இரண்டு ஊழியர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டனர். ஆனால் அந்தப்படம் கூட, தியேட்டர்களில் ரிலீஸாகி மூன்று நாட்கள் கழித்து தான் லீக்கானது.

ஆனால் ‘உத்தா பஞ்சாப்’ படத்தின் சென்சார் காபி படம் ரிலீசாவதற்கு முன்பே ஆன்லைனில் லீக்கானதை பார்க்கும்போது உயர்நீதிமன்ற குட்டுக்கு ஆளான சென்சார் போர்டு அதிகாரிகள், அதற்கு காரணமான இந்தப்படத்தை வேண்டுமென்றே வஞ்சம் வைத்து பழி தீர்த்திருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.

Comments are closed.