‘ஜெயம்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’ என டைரக்டர் ஆர்.கண்ணன் இயக்கியது நான்கு படங்கள் தான். அது நேரடி படமோ அல்லது ரீமேக் படமோ எதுவானாலும் அதில் கட்டாயம் சந்தானம் இருப்பார். ஆனால் இப்போது ஐந்தாவதாக அவர் இயக்கும் படத்தில் சந்தானம் இல்லை. அவருக்கு பதிலாக அந்த இடத்தை தற்போது நிரப்பி இருப்பவர் சூரி.
விமல், பிரியா ஆனந்த் நடிக்கும் இந்தப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பே சில மாற்றங்களை செய்திருக்கிறார் கண்ணன். முதலில் ‘சக்கரை’ என இந்தப்படத்திற்கு பெயர் வைத்திருந்த கண்ணன் தற்போது ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ என மாற்றிவிட்டார். அதேபோல இந்தப்படத்தில் முதலில் காமெடி கதாபாத்திரத்திற்கு ‘மெரினா’, ‘எதிர்நீச்சல்’ புகழ் சதீஷைத்தான் ஒப்பந்தம் செய்ய நினைத்திருந்தார்.
ஆனால் விமல் காம்பினேஷனுடன் சேர்ந்து நடிக்க மொத்தம் 45 நாட்கள் கால்ஷீட் தேவைப்பட்டது. ஆனால் அந்த தேதிகளில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் சதீஷ் கலந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் தற்போது சதீஷுக்கு பதிலாக சூரியை ஒப்பந்தம் செய்து, ரிகர்ஷல் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றனவாம்.
ஏற்கனவே ‘களவாணி’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்குராஜா’ ஆகிய படங்களில் விமல்-சூரி காமெடி கூட்டணி ஒர்க் அவுட் ஆகியிருப்பதால் மீண்டும் இவர்கள் கூட்டணி சேர்ந்திருப்பது தனது படத்திற்கு பலம் தான் என்கிறாராம் கண்ணன்.