இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் மறைவு தமிழகம் மட்டுமல்ல இந்திய விவசாயிகளுக்கே மிகப்பெரிய இழப்பு தான். சென்னையில் நடைபெற்றுவரும் புத்தக கண்காட்சியில் நம்மாழ்வார் அவர்களின் கொள்கைகளை முன்னெடுத்து செல்லும் ஒரு பாடலை நேற்று பென் டிரைவில் வெளியிட்டார்கள் அவரது அபிமானிகள்.
அவருக்கு மரியாதை செய்யும் விதமாக இசையமைப்பாளர் தாஜ்நூர் இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ‘பூவுலகின் நண்பர்கள்’ ஸ்டாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாடல் அடங்கிய பென் டிரைவ்வை சாகித்ய அகடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் வெளியிட மயன் ரமேஷ் பெற்றுக்கொண்டார். இந்தப்பாடலை பென் டிரைவில் பாடிய வேல்முருகனே, இந்தவிழாவில் தன் கணீர் குரலில் மீண்டும் அந்தப்பாடலை, புத்தக திருவிழாவே சிலிர்த்துப்போனது.
இந்தப்பாடலுக்கு இசையமைத்த தாஜ்நுர் அந்த பாடல் உருவான விதம் பற்றி என்ன சொல்கிறார் என்பதையும் கேட்போம். “இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உண்டு. அவரது மறைவு எனக்குள் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்த சமயத்தில்தான் சேலத்தை சேர்ந்த என் நண்பரான ஈசன் இளங்கோ மருத்துவர் சசியுடன் இணைந்து எழுதிய இந்த பாடல் வரிகளை எனக்கு செல்போனில் அனுப்பி வைத்தார். அதை படித்தவுடன் இதற்கு இசைவடிவம் கொடுத்தால் என்ன என தோன்றியது.
உடனே பாடகர் வேல்முருகனை வரவழைத்து பாட வைத்தேன். அவரது கணீர் குரலில் பாடப்பட்ட அந்தப்பாடலை பொங்கல் தினத்தன்று சேலம் வீதிகளில் ஒலிபரப்பி கொண்டாடிவிட்டார்கள் ஈசன் இளங்கோவும் அவரது நண்பர்கள் குழுவினரும். மதங்களையெல்லாம் தாண்டி எப்படி கிறிஸ்துமஸ் தாத்தாவை ரசிக்கிறோமோ, அதுபோல உழவன் தாத்தவாக கொண்டாடப்பட வேண்டியவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். இனி ஒவ்வொரு பொங்கலுக்கும் இந்தப்பாடல் தெருவெங்கும் ஒலிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்” என்கிறார்.
தமிழகத்திலேயே முதன் முறையாக பென் டிரைவில் வெளியிடப்பட்ட பாடல் வெளியீட்டு விழா இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாடல் உருவான போது எடுக்கப்பட்ட வீடியோ தொகுப்பின் யூ ட்யூப் லிங்க் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.