தோழா – விமர்சனம்

222

thozha-poster

அன்பை மட்டுமே பரிமாறிக்கொள்ளும் இரண்டு ஆண்களை பற்றிய கதைதான் ‘தோழா’..

ஜெயிலில் இருக்கும் கார்த்தியை நான்கு மாத பரோலில் வெளியே கொண்டுவரும் விவேக், நன்னடத்தைக்காக அவரை கோடீஸ்வரர் நாகர்ஜூனாவின் வீட்டில் அவரது உதவிக்காக சேர்த்துவிடுகிறார்.. பார்க்க, பேச, சாப்பிட மட்டுமே முடிகின்ற நாகார்ஜுனாவுக்கு மற்றபடி நடமாட்டம் அனைத்துமே வீல் சேரில் தான். அனைவரும் நாகார்ஜுனாவை இரக்கத்துடன் கவனிக்க, கார்த்தி மட்டும் அவரை தனக்கே உரிய இயல்பான அலட்சியத்துடனே கையாள்கிறார்.. அதுவே நாகார்ஜுனாவுக்கு கார்த்தியை பிடித்துப்போகவும் காரணமாகிறது.

கார்த்தியின் ஜெயில்வாசத்தால் தடைபட்டு நிற்கும் அவரது தங்கையின் காதல் திருமணத்திற்கு மறைமுகமாக உதவும் நாகார்ஜுனா, தீய வழியில் செல்லும் கார்த்தியின் தம்பியை போலீஸ், வழக்கிலிருந்து விடுவித்து அவனது நல்வாழ்வுக்கும் உதவுகிறார். இதன்மூலம் ஆரம்பத்திலிருந்தே கார்த்தியின் மீது வெறுப்பை காட்டும் அவரது அம்மாவின் பாசம் கார்த்திக்கு கிடைக்கிறது.

அதேபோல விபத்துக்குப்பின் நடைப்பிணமாக மாறிய நாகார்ஜுனா தன் காதலை ஒதுக்கியதையும், தற்போது முகமறியா பெண்ணுடன் கடித காதலில் ஈடுபட்டுள்ளதையும் அறிகிறார் கார்த்தி. தான் நாகர்ஜூனாவின் வாழ்வில் இருந்து விலகவேண்டிய சூழல் உருவானதால், தன்னை விட மகிழ்ச்சி தரக்கூடியது இந்த இருவரில் யாரோ ஒருவர் தான் என நினைக்கும் கார்த்தி இறுதியில் என்ன முடிவெடுத்தார் என்பது நெகிழவைக்கும் க்ளைமாக்ஸ்.

பொதுவாக வேற்று மொழியில் இருந்து, குறிப்பாக வெளிநாட்டு மொழியில் இருந்து தமிழுக்கு படங்களை ரீமேக் செய்வது என்பது கத்தி மேல் நடப்பது போலத்தான். பலரும் ரத்தக்காயம் வாங்கியிருக்கிறார்கள். ஆனால் கத்திமேல் நடப்பதை கச்சிதமாக செய்துள்ளார் தெலுங்கு இயக்குனரான வம்சி.. ஒரு படம் முழுவதும் ஒரே சமயத்தில் தொடர்ந்து நம்மை சிரிக்கவும் நெகிழவும் வைக்க மட்டுமே முடியுமா என்றால் ‘தோழா’ படம் அதை அழகாக செய்து காட்டியுள்ளது..

இளமைக்குறும்புடன் எப்போதும் துள்ளிவரும் கார்த்திக்கு இதிலும் அதே கேரக்டர்தான் என்றாலும், கேரக்டரின் தன்மை உணர்ந்து அவர் காட்டியுள்ள பக்குவம், நடிப்பில் கார்த்தியை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.. நான்கு காட்சிகளில் சிரிக்க வைத்து, ஒரு காட்சியில் நெகிழவைத்து, மொத்தத்தில் அனைத்து காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார் கார்த்தி.

சக்கர நாற்காலியிலேயே அமர்ந்து படம் முழுக்க நடிக்க ஒப்புக்கொண்ட சூப்பர் ஹீரோ நாகார்ஜுனாவின் தைரியத்திற்கும் கதைமீதும் தன்மீதும் அவர் வைத்த நம்பிக்கைக்கும் ஒரு ராயல் சல்யூட்.. உட்கார்ந்தபடியே தனது முகபாவங்களால் அனைவரையும் வசீகரித்து விடுகிறாரே இந்த புன்னகை மனிதர். கங்க்ராட்ஸ் அன்ட் வெல்கம் சார்.

தனது காதலியை பார்க்க வந்துவிட்டு கடைச நிமிடத்தில் எழுந்து செல்வது, ஈபில் தவறை நிமிர்ந்து பார்க்கமுடியாத விரக்தியில், கோபத்தில் மனம் புழுங்குவது என கிடைத்த இடத்தில் எல்லாம் ஸ்கோர் பண்ணுகிறார் நாகர்ஜுனா. கார்த்திக்கும் இவருக்குமான காட்சிகள் எந்த இடத்திலும் போரடிக்கவே இல்லை என்பதுதான் படத்தின் பிளஸ் பாயின்ட்.

அழகுப்பதுமை, அழகுப்புயல் இப்படி என்ன பட்டங்கள் கொடுத்தாலும் அதற்கு கச்சிதமாக பொருந்துகிறார் நாகார்ஜுனாவின் செக்ரட்டரியாக வரும் தமன்னா. கார்த்தியுடனான செல்ல குறும்புகளிலும் சீண்டல்களிலும் இளமை துள்ள ரசிக்க வைக்கிறார். படம் பார்க்க வருபவர்களை சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்து திக்குமுக்காட வைக்கிறார்கள் அனுஷ்காவும் ஸ்ரேயாவும்.

நாகார்ஜுனாவின் நண்பனாக அவரது நலம் விரும்பியாக வரும் பிரகாஷ்ராஜ் அவருக்கே உரிய ட்ரேட் மார்க் நடிப்பால் நம் மனதில் ஒட்டிக்கொள்கிறார். குறிப்பாக கார்த்தி வரைந்த ஓவியத்தை வாங்கி தனது வீட்டில் மாட்டி, அதற்குரிய விளக்கத்தை கார்த்தியிடமே சொல்வது செம கலாட்டா. கொஞ்ச நேரமே வந்தாலும் களைகட்ட வைக்கிறார் விவேக்.. மறைந்த கல்பனா, ஜெயசுதா, தணிகலபரணி என இன்னும் சிலர் படத்தை இனிமையாக நகர்த்த உதவியிருக்கிறார்கள்..

பி.எஸ்.வினோத்தின் ஒளிப்பதிவில் காருக்குள் இருந்தபடி அந்த ஈபிள் டவரை காட்டும் ஒரு காட்சி போதும் அவருக்கு பதக்கம் மாட்டிவிட. அதன்பின் பாரிஸ் கார் சேசிங், பாரா கிளைடிங் என பின்னியிருக்கிறார் வினோத். கோபி சுந்தரின் இசையில் நாகார்ஜுனா ரசித்து பார்க்கும் குத்துப்பாட்டு அசத்தல்.. மற்றபடி, அவரது இசையால் படத்துக்கு பலம் இல்லை என்றாலும் பலவீனமும் இல்லைஎன்று தாரளமாக சொல்லலாம்.

இதற்குமுன் முந்தைய சில படங்களில் தெலுங்கு இயக்குனர்களின் கைங்கர்யத்தை பார்த்து, அந்த அச்சத்தோடு தியேட்டருக்குள் நுழையு நம்மை, நான் உங்க ஆள்தான் என படம் ஆரம்பித்த கொஞ்ச நிமிடங்களிலேயே அரவணைத்துகொள்கிறார் இயக்குனர் வம்சி.. தேவையான இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கவும், கண்கலங்கவைக்கவும் அவருக்கு நன்கு தெரிந்திருக்கிறது.. குறிப்பாக கார்த்தி ஓவியம் வரையும் காட்சியை வைத்து அவர் நகைச்சுவை காட்சியை வளர்த்தியிருப்பது ரியலி சூப்பர்ப்.

வசனங்கள் வழியே உணர்வுகளை கடத்தியிருக்கும் ராஜு முருகன் – முருகேஷ் பாபு இரட்டையர்களுக்கு ஒரு சபாஷ் சொல்லிவிடுவோம். ஒருவருக்கொருவர் அன்பை மட்டுமே பரிமாறுங்கள் என்கிற அழகிய கருத்தை, அற்புதமான படமாக இயக்கியுள்ளார் வம்சி. அதற்கு பக்கபலமாக தோள்கொடுத்திருக்கிறார்கள் கார்த்தி, நாகர்ஜுனா இருவரும்.

தோழா – மிஸ் பண்ணவே கூடாத படங்களில் இதுவும் ஒன்று.

Comments are closed.