‘தி கிராண்ட் மாஸ்டர்’ விமர்சனம்

7

நடிகர்கள் : அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு
இசை : தினேஷ் ஆண்டனி
ஒளிப்பதிவு : அர்ஜுன் ரவி, ஞானசேகர்.ஆர்.எஸ்
இயக்கம் : வெற்றி செழியன்
தயாரிப்பு : வேலாயுதம்

துப்புரவு தொழிலாளியான அபர்ணதி, தன் ஒரே மகனை நன்றாக படிக்க வைத்து வழக்கறிஞராக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். சதுரங்க விளையாட்டின் மீது ஆர்வமாக இருக்கும் அவரது மகன் அப்போட்டியில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், இந்த சமூகம் அவரது அம்மா செய்யும் வேலையை காரணம் காட்டி அவரை புறக்கணிக்கிறது. மகனின் ஆசையை அறிந்துக் கொள்ளும் அபர்ணதி, நிராகரிக்கப்பட்ட தன் மகனுக்கு தானே சதுரங்க விளையாட்டை பயிற்றுவித்து, நிராகரித்தவர்கள் முன் தலைநிமிர்ந்து நிற்க வைக்க முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா ? , துப்புரவு தொழிலாளியான அபர்ணதிக்கும் சதுரங்க விளையாட்டுக்கும் என்ன தொடர்பு ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதி, தொடர்ந்து இத்தகைய கதாபாத்திரங்களில் நடிப்பது அவருக்கு சலிப்பு ஏற்படுகிறதோ இல்லையோ, பார்வையாளர்களுக்கு நிச்சயம் சலிப்பு ஏற்படுகிறது. இருந்தாலும், தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும்படி ஒப்பனை மற்றும் நடிப்பு இரண்டையும் திறம்பட செய்திருக்கிறார்.

அபர்ணதியின் கணவராக நடிக்கும் லிங்கேஷுக்கும் இதுபோன்ற கதாபாத்திரம் புதிதல்ல என்பதால், தனது வேலையை குறையின்றி செய்திருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் சுரேஷ் மேனன், அபர்ணதியின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் அஸ்வின், தமிழரசி, அன்பு என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திக்கும் அனைவரும் கதாபாத்திரங்களுங்கு பொருத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் அர்ஜுன் ரவி மற்றும் ஞானசேகரன்.ஆர்.எஸ், கதை மாந்தர்களின் வாழ்வியல் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் அருவருக்கத்த விசயங்களை பார்வையாளர்கள் கண் முன் நிறுத்தியிருக்கிறார்கள்.

தினேஷ் ஆண்டனியின் இசையில் பாடல்கள் கதைக்களத்தையும், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும் பார்வையாளர்களித்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது. அளவான பின்னணி இசை தனித்து பயணிக்காமல் காட்சிகளின் இயல்புத்தன்மை மாறாமல் பயணித்து திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு எழுதப்பட்ட திரைக்கதை என்பதால், உண்மைக்கு நெருக்கமான காட்சிகளை பார்வையாளர்கள் மனம் கனக்க செய்யும் விதத்தில் தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் ரஞ்சி.சி.கே, கதையை கமர்ஷியாலாக நகர்த்தி படத்தை தொய்வின்றி பயணிக்க வைத்திருக்கிறார்.

விளையாட்டு என்பது திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்று பொதுவாக நம்பப்பட்டாலும், வரலாற்று ரீதியாகவும் தற்போதும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த வீரர்கள் பல தடைகளையும் பாகுபாடுகளையும் எதிர்கொண்டு வருகின்றனர், என்பதை கற்பனையாக மட்டும் இன்றி, தான் பார்த்த உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் வெற்றி செழியன், பள்ளி முதல் பொது விளையாட்டு மைதானங்கள் மற்றும் பயிற்சிக் கூடங்களை அணுகுவதில் தற்போது சாதிய ரீதியான கட்டுப்பாடுகளும், பாகுபாடுகளும் எப்படி மறைமுகமாக இயங்குகின்றன என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

விளையாட்டுத் துறையில் இருக்கும் சாதி ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பொருளாதார பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பற்றி பேசும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பல வந்திருந்தாலும், அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, உண்மை சம்பவங்களை உண்மைக்கு நெருக்கமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் வெற்றி செழியனின் இந்த ‘தி கிராண்ட் மாஸ்டர்’ நிச்சயம் சாம்பியன் பட்டம் வெல்வார்.

ரேட்டிங் 3.5/5

Comments are closed.