நடிகர்கள் : கங்கை அமரன், ரோஜா, தர்ஷன் கணேசன், அர்ச்சனா, யுகேந்திரன், போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியன்
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு : எட்வின் சாகே
இயக்கம் : டி.டி.பாலச்சந்திரன்
தயாரிப்பு : சத்ய ஜோதி பிலிம்ஸ்
மணல் கொள்ளைக்கு எதிராக முதியவர் கங்கை அமரன் குரல் கொடுக்கிறார். அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்தும் வி.ஏ.ஓ அர்ச்சனா, ஆதாரங்களுடன் மணல் கொள்ளை லாரிகளை பிடிக்க, பின்னணியில் இருப்பவர்கள் அவரை கொலை செய்கிறார்கள். இதையடுத்து கங்கை அமரன் நீதிமன்றத்தை நாடுகிறார். வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவதோடு, கங்கை அமரனின் கோரிக்கையை ஏற்று அவருக்கு ஆயுதம் ஏந்திய காவலர் பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
உயர் அதிகாரிகளால் பெரிதாக மதிக்கப்படாத காவலர் தர்ஷனுக்கு கங்கை அமரனுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் சாதாரண பணியாக நினைக்கும் தர்ஷன், பிறகு வழக்கின் பின்னணி மற்றும் அதன் தீவிரத்தை உணர்ந்து கங்கை அமரனை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் பொறுப்பை திறம்பட செய்ய தொடங்குகிறார். மணல் கொள்ளை கும்பலுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தும் கங்கை அமரன், அவர்களை சட்டம் முன் நிறுத்தினாரா ?, மணல் கொள்ளை கும்பலிடம் இருந்து கங்கை அமரனை காக்கும் பொறுப்பை திரம்பட செய்ய முயற்சிக்கும் தர்ஷன், அதை வெற்றிகரமாக செய்தாரா ? என்பதை விறுவிறுப்பாக சொல்வதே ‘லெனின் பாண்டியன்’.
தான் வளர்த்த ஆடு இறப்புக்கு நியாயம் கேட்கும் அப்பாவியாக அறிமுகமாகி, பிறகு சமூகப்பிரச்சனைக்கு எதிராக போராடும் முதியவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கங்கை அமரன், இயல்பாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
கங்கை அமரனின் மனைவியாக நடித்திருக்கும் ரோஜா, தனது வேலையை சரியாக செய்து சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.
அறிமுக நாயகன் தர்ஷன் கணேசன், பொறுப்பை உணராத சாதாரண காவலராக பயணிக்கும் போது சரி, பொறுப்பை உணர்ந்து தன் கடமையை திறம்பட செய்ய முயற்சிப்பதிலும் சரி, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான முகமாகவும், அந்த கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் மனதில் பதிய வைப்பதற்கான நடிப்பையும் சரியான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியான், யுகேந்திரன், அர்ச்சனா, ஆடுகளம் நரேன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் எட்வின் சாகே கிராமத்து பின்னணியை இயல்பாகவும், அழகாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளை எதார்த்தமாக படமாக்கியிருப்பவர், பரபரப்பான காட்சிகளை பார்வையாளர்கள் பதட்டம் அடையும் விதத்தில் படமாக்கியிருக்கிறார்.
இளையராஜாவின் இசை கதைக்களம் மற்றும் கதை மாந்தர்களுடன் பயணித்த அனுபவத்தை கொடுக்கிறது. பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன் முதல் பாதியை விறுவிறுப்பாகவும், வேகமாகவும் நகர்த்திச் சென்றது போல் இரண்டாம் பாதியையும் நகர்த்தியிருந்தால், அவரது பணி பேச வைத்திருக்கும்.
மணல் கொள்ளைக்கு எதிரான விவசாயின் போராட்டத்தையும், காவலரின் பொறுப்பையும் மையமாக கொண்டு எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன், சில உண்மை சம்பவங்களை இரத்தமும், சதையுமாக சொல்லி கவனம் ஈர்த்திருக்கிறார்.
கதாபாத்திரங்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பு, நேர்மையான அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைகள், சாதாரண மனிதனின் போராட்டம் உள்ளிட்ட பல அம்சங்களுடன் முதல் பாதி படம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் பயணித்தாலும், இரண்டாம் பாதியில் அவை இல்லாதது படத்தின் குறை. இருந்தாலும், இயக்குநரின் சமூகப் பார்வை அந்த குறைகளை மறந்து படத்தை பாராட்ட வைக்கிறது.
ரேட்டிங் 3.5/5
Comments are closed.