‘ஜிகர்தண்டா’ படம் வெளியாவதற்கான வேலைகளில் தீவிரமாக இயங்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். நேற்று மாலை இதற்காக பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடத்தினார். அதில் சித்தார்த், லட்சுமிமேனன் உட்பட படத்தின் தொழிநுட்ப கலைஞர்களும் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பில் சுப்பராஜ் பேசும்போது, “இது தான் நான் முதலில் எடுக்க நினைத்த படம். அனால் பட்ஜெட் என்ற அளவில் நான் தயாரிப்பாளர்களுக்காக முடிவெடுக்க வேண்டி வந்தபோது, உருவானது தான் ‘பீட்சா’. அது என் முதல் படமாக முந்திக்கொண்டது. இந்தக்கதை மதுரை பின்னணியில் எடுக்கப்பட்டிருந்தாலும் எந்த மண்ணுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றுதான். எனது ஊர் மதுரை என்பதால் அதன் பின்னணியில் சொல்லியிருக்கிறேன்” என்றார்.
பின்னர் பேசிய சித்தார்த், “ நான் இதுவரை கேட்டதுலேயே கேவலமா கதை சொல்லகூடிய ஆள்னா அது கார்த்தி சுப்பராஜ் தான். அவருக்கு கதை சொல்லத்தான் வரமாட்டேன் என்கிறது.. ஆனால் ஸ்கிரிப்ட்டை மட்டும் பக்காவாக வைத்திருக்கிறார். அதனால் ஸ்கிரிப்ட்டை வாங்கி படித்தேன்.. பொதுவாக முதல் படம் ஹிட் கொடுப்பவர்கள் அடுத்த படத்தில் சறுக்குவதுதான் பெரும்பாலும் நடந்து வருகிறது. ஆனால் இந்தப்படம் பற்றி எனக்கு தைரியம் இருக்கிறது. காரணம் இதுதான் கார்த்திக் சினிமாவில் நுழைவதற்காக எழுதிய முதல் ஸ்கிரிப்ட். அப்படிப் பார்த்தால் இதுதான் அவர் முதல் படமாக வந்திருக்க வேண்டியது. ஆகவே ‘பீட்சா’வை விட கார்த்திக்கின் உழைப்பு இதில் கூடுதலாகவே இருக்கும் எனவே படத்தின் வெற்றி பற்றி கவலைப்பட மாட்டேன்” என்று நம்பிக்கையுடன் கூறினார்.
சித்தார்த் கார்த்திக்கின் கதைசொல்லும் திறமையை பப்ளிக்காக கிண்டல் செய்துவிட்டாரே என்றுதானே நினைக்கிறீர்கள்.. இந்த கமெண்ட்டை முதன்முதலில் தன்னைத்தானே கலாய்த்துக்கொண்டவர் கார்த்திக் சுப்பராஜ் தான். அதை வழிமொழிந்தவர்தான் சித்தார்த். அதனால் இது ஒரு ஜாலி கலாட்டாதான்.