இன்னும் காலேஜ் போகும் வாலிபன் மாதிரிதான் இருக்கிறார் விஜய். ஆனால் அவர் கல்லூரி செல்லும் ஒரு ஹீரோவாக தமிழ்சினிமாவில் நுழைந்து 21வருடங்கள் ஆகிவிட்டன என்பதை நம்பத்தான் முடிகிறதா? ஆனால் இத்தனை வருடங்களில் விஜய் தொட்டிருக்கும் உயரம், அவருக்கு ரசிகர்களும் தமிழ்சினிமாவும் கொடுத்திருக்கும் இடம் நிச்சயம் அவரது கடின உழைப்புக்கு கிடைத்த மணிமகுடம் தான்.
‘நாளைய தீர்ப்பு’ படம் மூலம் விஜய்யை கதாநாயகனாக்கிய அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தொடர்ந்து அவருக்கு ‘ரசிகன்’, ‘தேவா’, ‘விஷ்ணு’ என போட்டுத்தந்தது எல்லாம் கல்லும் முள்ளும் நிறைந்த முரட்டுப்பாதை தான். ஆனால் ‘பூவே உனக்காக’ படம் மூலம் விக்ரமன் அவருக்கு பூப்பாதை போட்டுக்கொடுக்க, அவரது பயணம் தடம் மாறியது. தொடர்ந்து ஃபாசில் டைரக்ஷனில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’ இளம் ரசிகர்களின் சிம்மாசனத்தில் அமர சிகப்புக் கம்பளம் விரித்துக்கொடுத்தது. ‘திருமலை’, போக்கிரி’ அவர் போகவேண்டிய சிங்கப்பாதைக்கு அடிப்போட்டுக் கொடுத்தன.
அன்றிலிருந்து ஹிட், சூப்பர் ஹிட் என தொடர்ந்த விஜய்யின் வெற்றிப்பயணத்தில் சில சறுக்கல்களும் இல்லாமல் இல்லை. ஆனால் அதையெல்லாம் தனது வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றும் திறமை விஜய்யிடம் இருந்தது. இப்போதும் இருக்கிறது. தமிழ்சினிமாவில் 21 வருடங்களாக முன்னணி ஹீரோவாக முதல் ஆளாக இன்றைய இளம் தலைமுறையினரின் மனதில் இடம்பிடித்திருக்கும் விஜய்யின் வெற்றிப்பயணம் தொடரட்டும்.