
மேலதிகாரி கொடுத்துவைத்திருந்த பணத்தை தொலைத்துவிட்டதால் திருட்டுப்பட்டம் சுமத்தப்பட்ட அப்பா கே.எஸ்.ரவிகுமார் தற்கொலை செய்துகொள்கிறார்… அதற்காக மகன் தனுஷ் ஆவேசமாக யாரையும் பழிவாங்க கிளம்பவில்லை. ஒரே நாளில் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடுகிறது, அதன்பின் ஒரே பாடலில் கோடீஸ்வரனாகும் மாயாஜால வித்தைள் இல்லை..
காதலி எமி ஜாக்சனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காதலில் பிரிகிறார். ஆனால், தாடிவைத்துக்கொண்டு திரியவில்லை.. சமந்தாவை திருமணம் செய்துகொண்டாலும் முன்னாள் காதலியின் நினைவால் துளி கூட வாடவில்லை. சொந்தக்காரனே துரோகம் செய்தாலும் அவனுக்கு பாடம் புகட்டுகிறாரே தவிர பழிவாங்கவில்லை. குறிப்பாக தேவையற்ற பன்ச் டயலாக் எதுவும் பேசவே இல்லை..
குறை, நிறைகள் எல்லாம்.. அப்புறம்.. முதலில் இப்படி ஒரு முடிவு எடுத்து இந்த தங்கமகன் படத்தில் நடித்ததற்காகவே தனுஷை பாராட்டலாம். விடலைப்பையன், பக்குவ இளைஞன் என்கிற இரு பரிமாணங்களையும் வெகுவாக வித்தியாசப்படுத்தி இருக்கிறார் தனுஷ். இந்தமுறை சிகரெட்டை நிறுத்திவிட்டு, தன் பங்கிற்கு தனுஷும் ‘குடி’ பாடம் எடுத்திருக்கிறார். அரசாங்கம் மது விற்பதை நிறுத்தும் வரை மது குடிக்கும் காட்சிகள் சினிமாவில் இடம்பெறுவதை மட்டும் குறைசொல்லி என்ன பயன்..?
செல்வராகவன் பட எபக்ட்டில் எமி ஜாக்சனுடன் லிப் கிஸ் எல்லாம் சர்வசாதாரணமாக அடித்து ரயில்வே ட்ராக்கில் பயணிக்கும் வண்டியை, பெற்றோரை விட்டுக்கொடுக்கமுடியாது என காதலியை பிரியும்போது ‘ஆனந்தமாய்’ குடும்பம் என்கிற தார்சாலையில் தடம் புரளாமல் இறக்கியுள்ளார் இயக்குனர் வேல்ராஜ். குமரனின் ஒளிப்பதிவும், அனிருத்தின் இசையும் இந்த இரண்டு தடத்திலும் கூடவே இணைந்து பயணிக்கின்றன.
எமி, சமந்தா இரு நாயகிகள், இருவித காதல் ரசங்கள்.. எமியுடன் கொஞ்சம் விரசம் என்றால், சமந்தாவுடனான காதலில் சரசம் இழையோடுகிறது.. இருவரும் அந்தந்த பாத்திரங்களாக மாறியுள்ளார்கள்.. நட்பு, காமெடிக்கு சதீஷ், நம்பிக்கை துரோகத்துக்கு ஆதித், வில்லத்தனத்துக்கு ஜெயபிரகாஷ், பாசத்துக்கு கே.எஸ்.ரவிகுமார்-ராதிகா-சீதா என படத்துக்கு பக்க பில்லர்கள் அமைத்து இந்த தங்கமகனுக்கு உறவுப்பாலம் கட்டியிருக்கிறார் இயக்குனர் வேல்ராஜ்.
Comments are closed.