மதுரைப் பின்னணியில் நடக்கும் இன்னொரு அடிதடி படம் தான் ‘தகராறு’. ஆனால் அதை க்ரைம் த்ரில்லராக கொடுத்திருப்பதில் தான் நம் கவனம் ஈர்த்து உட்காரவைக்கிறார்கள்.
அருள்நிதி உள்ளிட்ட நான்கு நண்பர்களும் மதுரைக்குள் நடமாடும் ‘களவாணிகள்’. பீரோ புல்லிங் கொள்ளையர்கள். இதில் ஒருத்தர் திடீரென கொலை செய்யப்படுகிறார். திருட்டில் பங்குபிரிக்கும்போது இவர்களால் அவமானப்படுத்தப்பட்ட அருள்தாஸா, அல்லது தன் மகளான பூர்ணாவை இவர்களில் ஒருவரான அருள்நிதி காதலிப்பது பிடிக்காத கந்து வட்டிக்காரரான ஜெயபிரகாஷா, இல்லை இவர்களை என்கவுண்டரில் போட்டுத்தள்ள துடிக்கும் போலீஸ்காரரா? இவர்களில் யாராவது ஒருத்தர் இதை செய்திருப்பார்களோ என குழப்பத்துடன் கொலையாளியை தேடினால் க்ளைமாக்ஸில் அட..இவரா? என ஆச்சர்யப்படுத்தும் ட்விஸ்ட்டுடன் முடிக்கிறார்கள்.
அருள்நிதி தான் ஹீரோ என்றாலும் எந்த இடத்திலும் மற்ற நண்பர்களை டாமினேட் செய்யாமல் நான்கு பேரில் ஒருவராக நடித்திருக்கிறார். காதல், ஆக்ஷன் என இரண்டிலும் ட்வெண்ட்டி 20 மேட்ச் ஆடியிருக்கிறார் அருள்நிதி.
வாவ்..பூர்ணாவா இது? நம்பமுடியவில்லை.. பாவாடை பாவணியில் பாந்தமாக வலம் வரும் பூர்ணாவுக்கு இந்தப்படமும் அவரது கேரக்டரும் நிச்சயம் ஒரு திருப்புமுனை தான். கேரக்டரை மீறாத நடிப்பை சரியாக பிரதிபலித்திருக்கிறார்.
நண்பர்களாக வரும் பவன், முருகதாஸ், தருண் மூன்று பேருமே ஹீரோக்கள் போலத்தான் வேலை பார்த்திருக்கிறார்கள். நண்பர்களில் ஒருவர் கொலையாவதுதான் பரிதாபம். கந்துவட்டிக்காரர் ஜெயபிரகாஷ், அருள்தாஸ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் என இந்த மூன்றுபேருமே கதையை விறுவிறுப்பாக நகர்த்த உதவி இருக்கிறார்கள்.
தரண் மற்றும் பிரவீண் சத்யாவின் இசையும் தில்ராஜுவின் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு உக்கிரம் ஏற்றுகின்றன. அடிதடி ரவுடியிச கதைதான் என்றாலும் அதை ரசிகர்களுக்கு பிரசண்ட்’ பண்ணும் முறையில் ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குனர் கணேஷ் விநாயக். குறிப்பாக இறுதிவரை கொலைகாரன் யார் என கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிவிட்டு இறுதியில் அவர் கொலையாளி யார் என்ற முடிச்சை அவிழ்த்திருக்கும் விதம் அருமை.
இரண்டு மணி நேர படத்தை எந்த இடத்திலும் தொய்வில்லாமல் படமாக்கியிருக்கும் கணேஷ் விநாயக் நிச்சயமாக பாராட்டுக்குரியவர் தான்.. எனவே தாரளமாக ஒருமுறை ‘தகராறை’ வேடிக்கை பார்த்துவிட்டு வாருங்கள்.