தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரி காலமானார்

82

தெலுங்கில் வெளியான ‘மகதீரா’ அல்லது தமிழில் ‘மாவீரன்’ படம் பார்த்தவர்களுக்கு அதில் நடித்த ராம்சரண், காஜல் அகர்வாலைத்தவிர மறக்கமுடியாத இன்னொரு நபர் ஷேர்கானாகவும் மீனவனாகவும் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ஸ்ரீஹரி. ஆனால் இன்று அவர் உயிருடன் இல்லை.

சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் ‘ராம்போ ராஜ்குமார்’ என்ற இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்ற அவருக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்படவே, அதையடுத்து மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் பாதிப்புக்கு உள்ளாகி சிச்சைபெற்று வந்தவர் நேற்று ரசிகர்களை மீளாத்துயரத்தில் ஆழ்த்திவிட்டுப் போய்விட்டார்.

தமிழில் விஜய் நடித்த வேட்டைக்காரன் என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்த ஸ்ரீஹரி திருமணம் செய்துகொண்டது 1990களில் தமிழ்சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடி புகழ்பெற்றிருந்த நடிகை டிஸ்கோ சாந்தியைத்தான். இவர்களுக்கு இரண்டு பையன்கள் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் ஸ்ரீஹரி கடைசியாக நடித்திருந்த ‘தூஃபான்’ திரைப்படம் சமீபத்தில்தான் வெளியானது. ஸ்ரீஹரியின் மறைவால் அதிர்ச்சியடைந்து இருக்கும் திரையுலக பிரபலங்கள் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.