’டீன்ஸ்’ விமர்சனம்

149

நடிகர்கள் : பார்த்திபன், யோகி பாபு, விஷ்ருதா, டி.அம்ருதா, ஃபிராங்கிஸ்டன், அஸ்மிதா, டி.ஜான் பாஸ்கோ, சில்வென்ஸ்டென், பிரசிதா, தீபஸ்வரன், உதய்பிரியா, கே.எஸ்.தீபன், ரோஷன், எல்.ஏ.ரிஷி ரத்னவேல், அஸ்மிதா மகாதேவன்
இசை : டி.இமான்
ஒளிப்பதிவு : கேவ்மிக் யு.ஆரி
இயக்கம் : பார்த்திபன்
தயாரிப்பு : ரஞ்சித் தண்டன்பானி, கீர்த்தனா பார்த்திபன், பார்த்திபன் ராதாகிருஷ்ணன், பின்ஜி ஸ்ரீனிவாசன், பாலா சுவாமிநாதன், கால்ட்வெல் வேல்நம்பி

பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்திருக்கும் சிறுவர்களுக்கான ‘டீன்ஸ்’ சிறுவர்களையும் தாண்டி அனைத்து தரப்பினரையும் கவர்கிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.

ஒரே குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் சிறுவர்கள் சிலர் ஒன்றுக்கூடி பெரியவர்கள் போல் அனைத்து விசயங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சிறுமி ஒருவர் தனது பாட்டி வசிக்கும் கிராமத்தின் அழகு மற்றும் அங்கு பேய் இருப்பதாக சொல்கிறார். அந்த பேயை நேரில் சென்று பார்க்கலாம், என்று முடிவு செய்யும் சிறுவர்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் அந்த கிராமத்திற்கு செல்கிறார்கள்.

சாலையில் நடக்கும் போராட்டத்தால் சிறுவர்கள் செல்லும் பேருந்து தொடர்ந்து பயணிக்க முடியாமல் போக, சிறுவர்கள் காட்டுப்பாதையில் நடந்து செல்கிறார்கள். அப்போது அவர்களில் ஒருவர் திடீரென்று காணாமல் போக, அவரை தேடும் போது ஒவ்வொருவராக மாயமாகிறார்கள். என்ன நடக்கிறது என்று புரியாமல் பயத்தில் அங்கும் இங்குமாக சிறுவர்கள் ஓடிக்கொண்டிருக்க, மறுபக்கம் ஒவ்வொருவராக மாயமாவது தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. இவர்களின் இந்த திடீர் மாயத்தின் பின்னணி என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.

சிறுவர்கள் ஒவ்வொருவராக காணாமல் போவதற்கு காரணம் அமானுஷ்யமா அல்லது மனிதர்களா? என்ற கேள்வியையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தும் படத்தின் ஆரம்பம், அதற்கான காரணத்தை சொல்லும் போது, ”அடடா… அருமையான ஐடியா” என்று சொல்ல வைக்கிறது. ஆனால், அந்த அடடாவை, ”ஆஹா…சூப்பர்…”, என்று சொல்லும் விதமாக திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைக்க தவறியிருக்கிறார் இயக்குநர் பார்த்திபன்.

படத்தின் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் சிறுவர், சிறுமியர்கள் நடிப்பு, வசன உச்சரிப்பு மற்றும் உடல்மொழி அனைத்தும் நச்சுனு இருக்கிறது. சிறியவர்களாக இருந்தாலும் பெரியவர்களுக்கு சமமாக தங்களை ஒப்பிட்டு பேசுவது, நடந்துக் கொள்வது போன்றவை சிலருக்கு சற்று நெருடலாக இருந்தாலும், தற்போதைய தொழில்நுட்ப உலகத்தில் சிறுவர்களின் இத்தகைய செயல் மிக சாதாரணம் என்ற உண்மையை அவர்கள் மூலமாகவே படம் உரக்கச் சொல்லியிருக்கிறது.

நக்கலும் நையாண்டியும் கலந்த தனது பாணியின் சாயலை முடிந்த அளவு தவிர்த்திருக்கும் அல்லது நவீனப்படுத்தியிருக்கும் இயக்குநர் பார்த்திபன், நடிகராக வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். அதிலும் அடக்கி வாசித்து அளவாக நடித்திருந்தாலும் அவரது கதாபாத்திரம் ஏதோ பூச்சாண்டி போல தெரிகிறதே தவிர நாசா விஞ்ஞானி என்று நம்பமுடியவில்லை.

இசையமைப்பாளர் டி.இமானின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக இளசுகளுக்கு இடையே காதல் பிறக்கும் காட்சியிலும், காதலை வெளிப்படுத்தும் காட்சியிலும் மெல்லிசை மனதை வருடுகிறது. பின்னணி இசையிலும் அதிகம் மெனக்கெட்டிருக்கும் இமான், கதைக்களத்திற்கு ஏற்ப வித்தியாசமான பீஜியங்களால் கவனம் ஈர்க்கிறார்.

ஒளிப்பதிவாளர் கேவ்மிக் யு.ஆரி குறைந்த பட்ஜெட்டையும் தாண்டி காட்சியில் பிரமாண்டத்தை புகுத்த முயற்சித்திருக்கிறார். எளிமையான மற்றும் குறிப்பிட்ட ஒரே லொக்கேஷனில் காட்சிகள் நகர்ந்தாலும், தனது கேமரா யுக்தி மற்றும் கோணத்தின் மூலம் சில காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.

குறிப்பிட்ட ஒரே இடத்தில் சிறுவர்களை ஓட வைத்திருப்பது, யோகி பாபுவை தேவையில்லாமல் திணித்திருப்பது, மேக்கிங் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது, போன்றவை திரைக்கதையை தொய்வடைய செய்தாலும், மலைபாம்பின் வயிற்றை கிழிப்பது, அறிவியல் உலகத்தின் அதிசயங்கள் பற்றி சிவர்கள் பேசுவது, அறிவியலைப் பற்றி சிறுவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று கதையில் வலியுறுத்தியிருப்பது, சிறுவர்களின் பெயர்கள் மற்றும் அதன் குணாதியசங்களை கொண்டு உருவாக்கப்பட்ட பாடல் ஆகியவை படத்தை ரசிக்க வைக்கிறது.

ரேட்டிங் 2.5/5

Comments are closed.