
சென்னையில் அக்கா வீட்டில் தங்கி வேலை தேடுகிறார் ஜெய்.. கூரியர் பாயாக வேலை செய்யும் நண்பன் சந்தானத்திற்கு உதவியாக ஒருமுறை கூரியர் கொடுக்க சென்ற இடத்தில் நாயகி யாமி கௌதமை பாத்தது அவர்மீது காதல் வசப்படுகிறார் ஜெய். காதலுக்காக தானும் கூரியர் வேலையில் சேர்கிறார்.
இந்தநிலையில் சேலத்தில் மருத்துவமனை ஒன்றில் நடக்கும் மோசடி பற்றி அங்கு வேலைபார்க்கும் தம்பி ராமையாவுக்கு தெரியவர, அவர் அதுபற்றிய தகவல்களை ஆதாரங்களுடன் சென்னையில் இருக்கும் சமூக சேவகர் நாசருக்கு கூரியரில் அனுப்பி வைக்கிறார். இந்த விபரம் அறிந்த வில்லன் தரப்பு, தம்பி ராமையாவை தீர்த்துக்கட்டிவிட்டு, கூரியரை கைப்பற்ற முயற்சி எடுக்கிறது.
இந்தநிலையில் அந்த கூரியரை டெலிவரி செய்வதற்காக எடுத்துச்செல்கிறார் ஜெய். இதனால் எதிராபாராத விதமாக எதிரிகளுக்கு இலக்காக மாறுகிறார். மருத்துவமனையில் நடக்கும் மோசடி என்ன, கூரியரை மடக்க வில்லன் தரப்பு தீவிரம் காட்டுவது ஏன், ஜெய்யால் அவர்களிடமிருந்து தப்பிக்க முடிந்ததா என்பது தான் க்ளைமாக்ஸ்.
தயாரிக்கப்பட்டு நீண்ட நாட்கள் கழித்து வெளியாகி இருப்பதால் பல விஷயங்கள் அப்டேட் இல்லாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. முதல் பாதியில் காதலியின் பின்னால் சுற்றிக்கொண்டும், இரண்டம் பாதியில் சமூகப்பொறுப்புள்ள இளைஞனாகவும் ஜெய்யின் நடிப்பிலும் உழைப்பிலும் குறை சொல்ல முடியாது.
சந்தானத்தை மீண்டும் காமெடியனாக பார்க்க முடிவது சந்தோசம் தான் என்றாலும் மிகப்பழைய ஒன்லைனர்களால் சிரிக்கவைக்க சற்றே சிரமப்படுகிறார் சந்தானம். கதாநாயகி யாமி கௌதமிடம் நான்கு நாள் மட்டும் கால்ஷீட் வாங்கியது போல, ‘காதி கிராப்ட்’ கடையில் வைத்தே அவரது போர்ஷனை நகர்த்தியிருக்கிறார்கள். அவர் தரப்பிலான காதல் கட்சிகளில் வலு இல்லை.
விடிவி கணேஷை காமெடிக்கும். தம்பி ராமையாவை சென்டிமென்ட்டுக்கும் பயன்படுத்தி இருக்கிறார்கள். சமூக சேவகராக நாசர் நிறைவு.. ஸ்டெம்செல் என்கிற மெடிக்கல் சம்பந்தப்பட்ட விஷயத்தை ஒரு கூரியருடன் இணைத்து கதை பின்னியிருப்பது நல்ல விஷயம் தான் என்றாலும், அதை வழக்கமான பாணியிலேயே பண்ணியிருப்பதுதான் ‘போங்கய்யா நீங்களும் இப்படித்தானா’ என்கிற அலுப்பை தருகிறது..
ஆனால் ஆக்சன் சேசிங் காட்சிகளில் பரபரப்பை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் பிரேம் சாய். சாதாரண மனிதனின் வாழ்வில் குறுக்கிடும் வில்லன் என்கிற ஐம்பது வருட ரெடிமேட் பிரேமுக்குள் இன்னும் நல்ல கலர்புல் கதையை போட்டாவாக மாட்டியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. போராடிக்காமல் படம் செல்வதால், ரசிகர்கள் பார்ப்பதற்கு தாராளமாக இந்தப்படத்தை சிபாரிசு செய்யலாம்.
Comments are closed.