இதற்கு முன்னால் எந்த வருடமும் இருந்தது இல்லை என்பதுபோல 2014ஆம் வருட ஆரம்பமே அமர்க்களமாகத்தான் இருக்கப்போகிறது. திரையுலகின் ஐந்து முக்கிய ஜாம்பவான்களின் படங்கள் ஒரே மாதத்தில் ரிலீஸாக இருக்கின்றன என்றால் அது சாதாரண விஷயமா என்ன?
‘சுற்றி நில்லாதே பகையே.. துள்ளி வருகுது வேல்..’ என்ற பாரதியின் வாக்கிற்கேற்ப இசைவெளியீட்டை டிசம்பர்-12ஆம் தேதி நடத்தி முடித்துவிட்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளுக்கு புயலென வர இருக்கிறான் ‘கோச்சடையான்’.
இந்த மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு, தற்போது ஜனவரி-26ல் அதாவது குடியரசு தினத்தன்று தியேட்டர்களில் விஸ்வரூபம் (இரண்டாவது முறையாக) எடுக்கிறார் உலகநாயகன்.
இதற்கிடையே தைப்பொங்கல் தினத்தன்று அஜீத்தின் ‘வீரம்’, இன்னொரு பக்கம் விஜய்யின் ‘ஜில்லா’ என இரண்டும் ஒரே நாளில் வெளியாகின்றன. இந்தப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் வேறு விஜய்யுடன் கைகோர்த்து களத்தில் குதிக்கிறார்.
பொங்கலுக்கு வெளியாகும் விஜய், அஜீத்தின் படங்களின் ஓப்பனிங் வசூலை தடை செய்யாமல் இருக்க, ஐந்து நாட்கள் முன்னதாகவே எண்ட்ரி கொடுக்கிறார் ரஜினி.. அதே காரணத்துக்காகவே பெருந்தன்மையுடன் பொங்கல் முடிந்து பத்து நாட்கள் கழித்து வர்ணஜாலம் காட்ட வருகிறார் கமல்.
சபாஷ் சரியான போட்டி தான்.. ஆனால் ஆரோக்கியமான போட்டி.. புது வருட ஆரம்பத்திலேயே ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடப் போகிறார்கள். தியேட்டர்காரர்கள் தான் திணறப்போகிறார்கள்.