தமிழ்சினிமாவை இவ்வளவு காலமாக தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்த முக்கியமான தூண்களில் ஒன்று சரிந்துவிட்டது.. பாலுமகேந்திராவின் இழப்பை இப்படித்தான் நாம் குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது. இளைய தலைமுறையினருக்கு சினிமா எடுக்கும் சூத்திரங்களை கற்றுக்கொடுத்து வந்த அந்த பீஷ்மர், இன்னொரு விஷயத்தையும் மேடைதோறும் தவறாமல் வழியுறுத்தி வந்தார். அதுதான் திரைப்பட காப்பகம் உருவாக்குதல்.
“நம் தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க கோடிகளைக் கொட்டுகிறார்கள், கதாநாயகனுக்கு அள்ளிக்கொடுக்கிறார்கள்.. படம் வெளியான பின்பும் பலர் கோடிகளில் லாபம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் இந்தப்படங்களின் நெகட்டிவ்களை பாதுகாத்து வைப்பதில் மட்டும் யாருமே முனைப்பு காட்ட மாட்டேன் என்கிறார்கள். தங்களது படத்தை என்றாவது திரும்பவும் மறுதிரையீடு செய்யவேண்டியிருக்கும் என்பதை மறந்துவிடுகிறார்கள். இன்று கர்ணன், ஆயிரத்தில் ஒருவன், பாசமலர், வசந்தமாளிகை ஆகிய படங்கள் மறுதிரையிடல் மூலம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியிருக்கின்றன. அதனால் தமிழ்சினிமாவிற்குத் தேவை ஒரு திரைப்பட காப்பகம். இதற்கு தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து தமிழக அரசும் நிதி ஒதுக்கி ஒத்துழைக்கவேண்டும்” – இதுதான் பாலுமகேந்திரா அடிக்கடி நினைவுபடுத்தி வந்த விஷயம்..
பாலுமகேந்திராவின் சிஷ்யர்களான பாலா, அமீர், சசிகுமார் உட்பட சினிமாவை நேசிக்கும் பலரும் பாலுமகேந்திராவின் கனவை நனவாக்க முன்வருவதுதான் அவருக்கு செலுத்தும் காணிக்கையாக இருக்கும்…