சௌகார்பேட்டை – விமர்சனம்

215

sowkarpettai review 1

முதன்முறையாக ஸ்ரீகாந்த் இரட்டை வேடங்களில் அதிலும் பேயாக நடித்துள்ள படம் என்பதால் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது இந்த ‘சௌகார்பேட்டை’.. படம் அந்த எதிர்பார்ப்புக்கு தீனி போட்டு இருக்கிறதா..? பார்க்கலாம்

சௌகார்பேட்டை சேட் சுமனிடம் வட்டிக்கு பணம் வாங்குகிறார் தலைவாசல் விஜய். வட்டி கட்டமுடியாத சூழலில் அவரது பங்களாவை தனது பெயருக்கு எழுதி வைக்கச்சொல்கிறார் சுமன். இதற்கு மறுக்கும் அவரையும் அவரது மனைவி மற்றும் திருமணத்திற்கு தயாராக இருக்கும் மகன் ஸ்ரீகாந்த், அவரை திருமணம் செய்ய இருக்கும் ராய்லட்சுமி என அனைவரையும் கொன்று குவிக்கிறார் சுமன்..

அதன்பின் பேயாக மாறும் ஸ்ரீகாந்தும் ராய் லட்சுமியும் அந்த வீட்டை விற்க முயற்சிக்கும் சுமனுக்கு தொந்தரவு தருவதோடு, அவரையும் அவரது மூன்று மகன்களையும் கொன்று பழி வாங்குகின்றனர். ஆனால் இந்த இரண்டு பேய்களுக்கும் மந்திரவாதி ஒருவனால் சிக்கல் வருகிறது. யார் அந்த மந்திரவாதி..? அந்த சிக்கல் என்ன.? என்பதற்கு விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்..

சாக்லேட் பாய் ஸ்ரீகாந்துக்கு சௌகார்பேட்டை பேயாக புரமோஷன்.. கூடவே டபுள் ஆக்சன் வேறு.. புகுந்து விளையாடியிருக்கிறார் மனிதர்.. அதிலும் இரண்டுவித கெட்டப்புகளுக்கும் அவர் மேக்கப்பில் மெனக்கெட்டிருப்பதும், முகத்தை விகாரமாக மாற்றிக்கொள்ள சம்மதித்திருப்பதும் அவரது துணிச்சலை காட்டுகிறது. ஆனாலும் இருவரில் மந்திரவாதியாக வரும் வில்லன் ஸ்ரீகாந்த் ஓவர்டேக் பண்ணுகிறார்.

ஜாடிக்கேத்த மூடியாக தானும் பேயாக மாறி அசால்ட் பண்ணுகிறார் லட்சுமிராய்.. கிளுகிளுப்பிற்கும் குறைவைக்கவில்லை.. அதேசமயம் இதில் ஒரு சண்டைக்காட்சியும் அவருக்கு உண்டு.. ஆனால் இவர்கள் இருவரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் வலுவில்லாத கதையாலும் மோசமான திரைக்கதையாலும் வீணாக்கப்பட்டு இருப்பதுதான் கொடுமை.

கோத்ரா சேட்டாக வரும் சுமன் சில நேரங்களில் மிரட்டுகிறார்.. பேய் வரும் காட்சிகளில் கோமாளியாக மாறிவிடுகிறார்.. அதனால் அவரை முழுவதும் ரசிக்க முடியாமல் போய்விடுகிறது.. வடிவுக்கரசியின் கூன் விழுந்த நடையும் மேனரிசமும் சூப்பர்.. சித்தப்பு சரவணன், சிங்கம் புலி, பவர்ஸ்டார் மூவரும் சேர்ந்து நமக்கு கிச்சுகிச்சு மூட்டியும் கூட சிரிப்பு வருவேனா என்கிறது.

ஜான் பீட்டரின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக இருந்தும் பயனில்லாமல் போய்விட்டது.. ‘பயம் பயம்’ பாடல் மிரட்டல் ரகம்.. ஸ்ரீகாந்தின் பிளாஸ்பேக் கதையும் கிளைமாக்ஸ் காட்சிகளும் ஓரளவு நம்மை ரிலாக்ஸ் செய்கின்றன.. பேய்க்காட்சிகளில் பயமே வரவில்லையே சார்.. திரைக்கதையில் மாற்றமும் காட்சிகளில் சீரியஸ்னெஸ்ஸும் செய்திருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.

பேய்ப்படங்களில் புதுமைகளை புகுத்தலாம் தவறில்லை. ஆனால் அதற்கென உள்ள ரெகுலர் பார்முலாவை மாற்றினால் சிக்கல் தான். குறிப்பாக பேய்ப்படங்களின் பிளாஸ்பேக் எப்போதும் இடைவேளை சமயத்திலோ அல்லது அதற்குப்பின்னரோ தான் சொல்லப்பட வேண்டும். இயக்குனர் வடிவுடையான் அதை மீறியது இந்தப்படத்திற்கு மைனஸ் பாயின்ட..

Comments are closed.