ஜூலி-2 விமர்சனம்

104

julie 2 review

ஒரு நடிகையின் கதை என சாதாரணமாக கடந்து போய்விட முடியாத படம் தான் ராய்லட்சுமி நடித்துள்ள ‘ஜூலி-2’.

அம்மா, வளர்ப்பு தந்தை ஆகியோரின் கொடுமைகளை சகிக்காமல், வீட்டை விட்டு வெளியேறும் ஜூலி, சினிமாவில் மேக்கப் கலைஞராக பணிபுரியும் நல்ல மனம் கொண்ட பெண்ணிடம் அடைக்கலம் ஆகிறாள். அவர் மூலமாக ஒரு இயக்குனரின் அறிமுகம் கிடைத்து, ஹீரோயினாக மாறி புகழ் பெறுகிறாள்.. ஆனால் சிலரின் ஆசைக்கு இணங்க மறுத்ததால் வாய்ப்பின்றி வீட்டில் இருக்க நேரிடுகிறது ஜூலிக்கு.

தங்கைகளை படிக்க வைக்கவும், வாழ்க்கை வண்டியை ஓட்டவும், ஒரு சிலருக்கு தன்னை இரையாக்கி வாய்ப்புகளை பெற்று மீண்டும் உச்சம் செல்கிறாள் ஜூலி. இடையில் ஒரு ஹீரோ, ஒரு கிரிக்கெட் வீரர் ஆகியோருடன் காதல் என்கிற மாயையில் விழுந்து ஏமாறுகிறாள். அண்டர் வேர்ல்ட் டான் ஒருவனின் ஆசை நாயகியாக மாறும் அவலத்தையும் சந்திக்கிறாள்.

இறுதியாக சமூக சேவகியும் அரசியல் தலைவியுமான ஒரு பெண்ணின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறார். படம் முடிவடிய சில நாட்களே இருக்கும் நிலையில், நகைக்கடை ஒன்றில் நகை எடுக்க செல்லும் ஜூலி, அங்கே வரும் முகமூடி கொள்ளைக்கும்பலின் துப்பாக்கி சூட்டிற்கு ஆளாகிறாள். ஜூலி பிழைத்தாளா..? ஜூலி சுடப்பட்ட நிகழ்வு ஏதேச்சையானதா அல்லது உள்நோக்கம் கொண்டதா என்பது க்ளைமாக்ஸ்.

ஜூலியாக நடித்துள்ள ராய்லட்சுமி நிச்சயமாக இதற்கு முன் நாம் பார்த்த ராய்லட்சுமி அல்ல.. தனது அபாரமான நடிப்பால் மொத்தப்படத்தையும் தாங்கி பிடிக்கிறார். முன்னணி நடிகையாவதில் சந்திக்கும் சங்கடங்களையும், நடிகை என்றாலும் தானும் ஆசாபாசங்கள் கொண்ட ஒரு சராசரி பெண் தான் என்பதையும் அவர் வெளிப்படுத்த தவறவில்லை. இதில் இன்னொரு கேரக்டரிலும் சஸ்பென்ஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார்

படத்தில் உதார்விட்டு தொடை நடுங்கும் ஹீரோவாக நடித்துள்ள ரவி கிஷன், லட்சுமிராயுடன் நேர்மையான நட்பு பாராட்டும் இயக்குனராக நிஷிகாந்த் காமத், அரசியல்வாதியாக வரும் பங்கஜ் திரிபாதி, போலீஸ் அதிகாரியாக வரும் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா, ராய்லட்சுமியின் காட் மதராக வரும் நம்ம முரட்டுக்காளை ரதி அக்னிஹோத்ரி மற்றும் அந்த அப்பாவி டச்சப் பையன் என படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்களும் கதையின் மீதான நம்பகத்தன்மையை தங்களது நடிப்பால் மெருகேற்றியுள்ளார்கள்.

படத்தின் கதையை கவனித்து பார்க்கும்போது, இங்கு ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம்வந்த ஒருவரின் வாழ்க்கை சாயல் தெரியவே செய்கிறது. வெறும் நடிகையின் கதையாக இல்லாமல், அதற்குள் ஒரு க்ரைம், இன்வெஸ்டிகேஷன் என விறுவிறுப்பான படமாகவும் இதை இயக்கியுள்ளார் இயக்குனர் தீபக் ஷிவ்தாசனி.. ஆக மொத்தத்தில் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் தருபவளாகவே இருக்கிறாள் இந்த ஜூலி..

Comments are closed.