வீரையன் – விமர்சனம்

113

தஞ்சாவூர் பகுதியில் ஒரு சாதாரண கிராமத்தில் வசிக்கும் வீரையன் (ஆடுகளம் நரேன்) தனது தம்பிகளை கஷ்டப்பட்டு படிக்கவைத்து நல்ல நிலைக்கு ஆளாக்கி விடுகிறார். ஆனாலும் தம்பிகள் அவரை உதாசீனப்படுத்தவே, பிளஸ் டூ படிக்கும் தனது மகனை பெரிய ஆளாக்கி காட்டுவதாக சவால் விடுகிறார். நன்றாக படிக்கவைக்கவும் மெனக்கெடுகிறார்

நன்றாக படிக்க கூடிய அப்பிராணி பையனான அவரது மகனுக்கு அவன் எதிர்பாராத சில சூழல்களால் பள்ளியில் படிப்பதற்கு தடை விழுகிறது.. உடன் படிக்கும் மாணவியின் அப்பாவான கவுன்சிலர் வேல ராமமூர்த்தி, ஊருக்குள் எந்நேரமும் யாரிடமாவது வம்பிழுத்து அடிவாங்கி சண்டியர்த்தனம் பண்ணிக்கொண்டு நண்பர்களிடம் வாழ்க்கையை ஓட்டும் இனிகோ பிரபாகர் ஆகியோரால் அவனது படிப்பிற்கு இடைஞ்சல்கள் ஏற்பட்டு டிசி கொடுத்து வெளியே அனுப்படும் நிலைக்கு ஆளாகிறான்.

அதேசமயம் நரேனின் மகன் படிப்பு தடைப்பட்டதற்கு தானும் ஒரு காரணம் என்பதை உணர்ந்து, அவரை டுடோரியல் மூலமாக கஷ்டப்பட்டு பணம் சேர்த்து படிக்கவைக்கிறார் இனிகோ. இத்தனை விஷயங்களையும் தந்தைக்கு தெரியாமல் மறைத்து வைத்து படிப்பை தொடர்கிறார் நரேனின் மகன்.. ரிசல்ட் வெளியாகும் நாள் நரேனின் மகனுக்கு மட்டுமல்ல, அவரது தந்தை, இனிகோ பிரபாகர் உள்ளிட்ட அனைவரின் வாழ்கையிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொண்டு வருகிறது. அதுதான் க்ளைமாக்ஸ்.

கல்விதான் ஒருவனின் வாழ்க்கையை முன்னேற்றும் என்பதையும், அப்படிப்பட்ட ஒருவனுக்கு படிப்பு வாசனையே இல்லாத ஒருவன் உதவுவதையும் இரண்டு தளங்களாக பிரித்து கதைசொல்லியிருக்கிறார் இயக்குனர் பரீத்..

லுங்கியை மடித்துக்கொண்டு சண்டியர்த்தனம் பண்ணும் கேரக்டர் இனிகோ பிரபாகருக்கு செமையாக செட்டாகியுள்ளது. இன்னும் கொஞ்சம் முகபாவனைகளை கூட்டிக்கொண்டால் வரும்காலத்தில் நன்கு பிரகாசிக்கலாம். கதாநாயகியாக வரும் ஷைனி இயல்புக்கு மாறாக வடிவமைக்கப்பட்ட தனது கேரக்டரில் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் இவரை தேடி வாய்ப்புகள் நிறைய வரலாம்.

இன்னொரு நாயகன் என சொலும் வகையில் தம்பிகளையும் மகனையும் படிக்க வைப்பதற்காக போராடும் சாதாரண தொழிலாளியாக போராடும் ஆடுகளம் நரேனை பார்க்கும்போது, பல அனிதாக்களின் அப்பாக்கள் நினைவுக்கு வந்து போவதை தவிர்க்க முடியவில்லை. நரேனின் மகனாக வரும் அந்த சிறுவனும் யதார்த்தமாக தன்னை வெளிப்படுத்தியுள்ளான். ‘கயல்’ வின்சென்ட், திருநங்கை ப்ரீத்திகா இருவரும் நட்பாக கடந்து போகிறார்கள்.

முருகேஷாவின் ஒளிப்பதிவு வஞ்சகம் இல்லாமல் பட இறுதிவரையிலும் கிராமத்து அழகை அள்ளி வந்திருக்கிறது.. கிராமத்தின் இயல்பான லைட்டிங்கையும் அந்த பாழடைந்த கட்டடங்களையும் அவ்வளவு அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார். கவுன்சிலர் மகள்-ட்ரைவர் காதல் கதையை விட்டு துருத்திக்கொண்டு இருப்பது போல தெரிந்தாலும், க்ளைமாக்ஸில் அதை சிறிய ட்விஸ்ட் மூலம் நேர் செய்திருக்கிறார் இயக்குனர் பரீத்.

ஒரு நல்ல கருத்துள்ள, அழகான கிராமத்து கதையை க்ளைமாக்ஸ் டச்சிங்குடன் எடுக்க முயற்சித்திருக்கும் இயக்குனர் பரீத், அதற்காக திரைக்கதையை குழப்பி அடித்து படத்தை மெதுவாக நகர்த்தியதில் தான் கோட்டை விட்டுள்ளார்.

Comments are closed.