இந்த உலகத்தில் மனிதனுடைய எல்லா குணாதிசயங்களுக்கும் காதல் தான் அடிப்படையாக இருக்கிறது. ஆனால் அதற்கும் கூட ஒரு எல்லைக்கோடு உண்டு. அந்த எல்லைக் கோட்டை தாண்டும் போது அது மனிதனின் வாழ்க்கையில் பல சிக்கல்களை உருவாக்கி விடுகிறது.
அந்த சிக்கல்களால் ஏற்படும் விளைவுகளைத் தான் ‘சூறையாடல்’ என்ற பெயரில் காமெடி, செண்டிமென்ட், சஸ்பென்ஸ் கலந்த கிராமத்து கமர்ஷியல் படமாக விறுவிறுப்புடன் டைரக்டர் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் தாமரை கண்ணன். இவர் 28 வருடங்களாக மலையாள திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் ஐ.வி.சசி மற்றும் சாஜன் ஆகியோரிடம் இணை, துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.
இந்தப்படத்தில் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்ற ஹீரோவான ஸ்ரீ பாலாஜி அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மலையாள வரவான காயத்ரி மற்றும் ‘மதராசப்பட்டணம்’, ‘நர்த்தகி’ உட்பட பல தமிழ்ப்படங்களில் நடித்த லீமா நடித்துள்ளார். கம்பம், தேனி, குமுளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்துள்ளது.
குறிப்பாக கம்பத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆட்டுப்பாறை என்ற கிராமத்தில் யாருமே இதுவரை படப்பிடிப்பு நடத்தியதில்லை. அந்த கிராமத்தில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் ‘சூறையாடல்’ தான். அதனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பையே அந்த கிராமத்து மக்கள் ஒரு திருவிழா போல கொண்டாடி அமர்க்களப்படுத்தி விட்டார்களாம்.