சண்டியர் விமர்சனம்

288

அரசியல் கொலைகள் நடப்பதை அடிக்கடி நடப்பதை பேப்பரில் பார்த்திருப்பீர்கள்.. ஆனால் அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது சம்பந்தப்பட்டவர்களோடு அமுங்கிப்போய்விடும். ஆனால் சோழதேவன் இயக்கத்தில் வெளியான ‘சண்டியர்’ திரைப்படம் அதன் அடி முதல் நுனி வரை வரையிலான காரணங்களை அலசியிருக்கிறது.

கிராமத்தில் சண்டியராக சுற்றித்திரியும் ஜெகனுக்கு சேர்மன் ஆகவேண்டும் என ஆசை. ஊர்க்காரியங்களில் தலையிட்டு சேர்மனாக இருக்கும் நாயகத்திற்கு அடிக்கடி குடைச்சல் கொடுக்கிறார். ஆனால் இவர்கள் இருவரின் தந்தையும் நண்பர்கள் என்பதால் பிரச்சனை பெரிதாகாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஆனால் ஒருகட்டத்தில் நிலைமை கைமீறி ஒருவரை ஒருவர் போட்டுத்தள்ள ஆட்களை ஏவும் நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.  சூழல் மாற தந்திரமாக காய் நகர்த்தி, சேர்மன் பதவியை கைப்பற்றுகிறார் ஜெகன்.. ஆனால் தனது தந்தையின் கோரிக்கைக்கு இணங்குவதுபோல நடித்து பதவியை விட்டுக்கொடுத்து, மீண்டும் பதவியேற்க வரும் நாயகத்தை போட்டுத்தள்ளுகிறார்..

அடுத்து ஒன்றியச்செயலாளர் பதவி தேடிவர, மாவட்ட செயலாளர் பதவிக்கும் குறிவைக்கிறார். இவரைப்போலத்தானே மற்ற இடங்களிலும் இருப்பார்கள். அப்படி யாரோ ஒருவர் ஏவிய கூலிப்படை ஜெகனையும் போட்டுத்தள்ள அவரது இறுதி ஊர்வலத்துடன் படம் முடிகிறது.

ஊருக்குள் அரசியல் என்ற பெயரில் சண்டியர்த்தனம் பண்ணிக்கொண்டு திரியும் இளவட்டங்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.. சண்டியரான ஜெகன் வில்லன், ஹீரோ என கலவையான கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். மேலும் கதாநாயகி கயல், சேர்மனாக நடித்திருக்கும் நாயகம், நண்பனாக வரும் ஆடுகளம் முருகதாஸ், இரண்டு ஊர்ப்பெரிய தலைக்கட்டுகளாக வரும் இரண்டு நண்பர்கள் என அனைவருமே இயல்பான பாத்திரப்படைப்புகள் தான்..

இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி தரும் விதமாக தஞ்சை கதைக்களத்தில் விறுவிறுப்பாக இந்தப்படத்தை இயக்கிய இயக்குனர் சோழதேவன் பாராட்டுக்குரியவரே.

 

Comments are closed.