’ரிங் ரிங்’ விமர்சனம்

61

நடிகர்கள் : விவேக் பிரசன்னா, ஸ்வயம் சித்தா, டேனியல் அன்னி போப், ஜமுனா , பிரவீன் ராஜா, சாக்‌ஷி அகர்வால், அர்ஜுனன், சஹானா ஜோடிகள்
இசை : வசந்த் இசைப்பேட்டை
ஒளிப்பதிவு : பிரசாந்த்,DFTech
இயக்கம் : சக்திவேல்
தயாரிப்பு : ஜெகன் நாராயணன்

காதலர்களின் செல்போன் மாற்றத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை பார்த்த ரசிகர்களுக்கு, கணவன் – மனைவி செல்போன் மாற்றத்தினால் என்னவாகும்? என்பதை வெளிக்காட்டும் வகையில் வெளியாகியிருக்கும் ‘ரிங் ரிங்’ ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறதா? அல்லது நிற்க மறுக்கிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.

நான்கு நண்பர்கள் தங்களது இணைகளுடன் பிறந்தநாள் நிகழ்வு ஒன்றில் சந்திக்கிறார்கள். கேலி, கிண்டல் என்று ஜாலியாக இருக்கும் அவர்கள் திடீரென்று தங்களது செல்போன்களை வைத்து ஒரு விளையாட்டு விளையாட முடிவு செய்கிறார்கள். அதன்படி, அனைவரும் தங்களது செல்போன்களை மேஜை மீது வைக்க வேண்டும். யார் செல்போனில் அழைப்புகள் வந்தாலும் அதை ஸ்பீக்கரில் போட்டு அனைவரும் கேட்பது போல் பேச வேண்டும். அதேபோல், மெசஜ் மற்றும் வாட்ஸ்-அப் மெசஜ் என எது வந்தாலும் அதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

மனிதர்களின் மனங்களில் மறைந்திருக்கும் பல ரகசியங்கள் அவர்களது செல்போன்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில் ஒருவரது செல்போனை மற்றொருவர் பார்த்தால் என்னவாகும்?, அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அனைவரும் சிக்குகிறார்கள். அவர்கள் எதிர்பார்க்காத அவர்களுடைய ரகசியங்கள் மற்றவர்களுக்கு தெரிய வர, அதனால் ஏற்படும் பிரச்சனைகளால் நண்பர்களின் வாழ்க்கையில் எத்தகைய விளைவுகள் ஏற்படுகிறது, அதில் இருந்து அவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்பதை திக்…திக்…பாணியில் சொல்வதே ‘ரிங் ரிங்.

விவேக் பிரசன்னா – ஸ்வயம் சித்தா, டேனியல் அன்னி போப் – ஜமுனா , பிரவீன் ராஜா – சாக்‌ஷி அகர்வால், அர்ஜுனன் – சஹானா ஜோடிகள் தான் படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். நான்கு ஜோடிகளும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் ஒரு உணவு மேஜையில், முழுக்க முழுக்க வசனக் காட்சிகளாக இருந்தாலும், நடிகர்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பால், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் கடக்கிறது. செல்போன்கள் மூலம் அனைவரது ரகசியங்களும் கசியும் போது, அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் முழிப்பது, சமாளிப்பது என நேர்த்தியான எக்ஸ்பிரஷன்கள் மூலம் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

ஒரு வீட்டுக்குள் அதிலும் பெரும்பாலான காட்சிகள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் நடந்தாலும், சலிப்பு ஏற்படாத வகையில் அந்த காட்சிகளை படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசாந்த்,DFTech.

இசையமைப்பாளர் வசந்த் இசைப்பேட்டையின் இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டே இருந்தாலும், அவர்களது ரியாக்‌ஷன்கள் மற்றும் அவற்றின் மூலம் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை கச்சிதமாக தொகுத்து படத்தை விறுவிறுப்பாக பயணிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பி.கே.

எழுதி இயக்கியிருக்கும் சக்திவேல், சிறு யோசனையை வைத்துக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட இடத்தில் முழு படத்தையும் நேர்த்தியாக இயக்கியிருக்கிறார்.

நண்பர்களின் செல்போன்கள் மூலம் கசியும் ரகசியங்களின் பின்னணி என்னவாக இருக்கும்? மற்றும் அதனால் எப்படிப்பட்ட பிரச்சனைகள் வெடிக்கப் போகிறது? போன்ற கேள்விகளை பார்வையாளர்கள் மனதில் எழுப்பி படத்தை விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் நகர்த்திச் செல்லும் இயக்குநர் சக்திவேல், இறுதியில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கி, ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருக்க வேண்டும், என்ற மெசஜுடன் படத்தை முடித்திருக்கிறார்.

ரேட்டிங் 3/5

Comments are closed.