‘ராஜபீமா’ விமர்சனம்

83

நடிகர்கள் : ஆரவ், ஓவியா, ஆஷிமா நர்வால், நாசர், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, ஜெயக்குமார்
இசை : சிமோன் கே.கிங்
ஒளிப்பதிவு : எஸ்.ஆர்.சதீஷ் குமார்
இயக்கம் : நரேஷ் சம்பத்
தயாரிப்பு : சுரபி பிலிம்ஸ் – மோகன்

‘பிக் பாஸ்’ பிரபலம் ஆரவ், ஆஷிமா நர்வால், ஓவியா ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ராஜபீமா’ பிரமாதமாக இருக்கிறதா? அல்லது ரசிகர்களுக்கு பிடிக்காமல் போகிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.

சிறு வயதில் அம்மாவை இழந்ததால் நாயகன் ஆரவ் மனதளவில் பாதிக்கப்படுகிறார். அப்போது வனப்பகுதியில் இருந்து வழிதவறி விளை நிலங்களுக்குள் புகுந்த யானை ஒன்றை ஊர் மக்கள் விரட்ட முயற்சிக்கிறார்கள். அந்த இடத்திற்கு தன்னை அறியாமல் செல்லும் ஆரவ், தன் அம்மாவின் பரிசத்தை அந்த யானையிடம் உணர்வதால், யானையை தானே வளர்க்க விரும்புகிறார். யானை வந்த நேரம் அவரது குடும்பத்தில் நல்ல விசயங்கள் நடக்க, அவரது அப்பா உள்ளிட்ட அனைவரும் யானையை பாசமாக வளர்க்கிறார்கள்.

இதற்கிடையே, ஆரவ் வளர்க்கும் யானையை அரசு சார்பில் நடத்தப்படும் யானை முகாமுக்கு அழைத்துச் செல்வதாக கூறி வனத்துறை அழைத்துச் செல்கிறது. ஆனால், அங்கு சென்று பார்க்கும் ஆரவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், அவரது யானை என்று வேறு ஒரு யானையை அதிகாரிகள் காண்பிக்கிறார்கள். ஆனால், இங்கு இருப்பது தன்னுடைய யானை இல்லை, என்பதில் உறுதியாக இருக்கும் ஆரவ், தனது யானையை தேட தொடங்குகிறார். அவரது யானை கிடைத்ததா?, யானையின் திடீர் மாயத்தின் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஆரவ், ஆக்‌ஷன், நடிப்பு இரண்டிலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். அவரது காதலி உடனான காட்சிகளை விட, அவர் வளர்க்கும் யானை உடனான காட்சிகள் அதிகமாக இருப்பதால், அவருக்கும் யானைக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி நன்றாகவே வேலை செய்திருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் ஆஷிமா நர்வால், ஆரவை காதலிப்பது, ஒரு பாடல், சில காட்சிகள் என்று தனக்கு கொடுக்கப்பட்ட குறைவான வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

அமைச்சராக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் வில்லன் வேடத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் நாசர் கொங்கு தமிழ் பேசி நச்சென்று நடித்திருக்கிறார்.

யாஷிகா ஆனந்த், யோகி பாபு, பாகுபலி பிரபாகர், ஓவியா, சாயாஜி ஷிண்டே, ராகவன், ஜெயக்குமார் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதைக்கு ஏற்ப பயன்பட்டிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சிமோன் கே.கிங் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஒகே ரகம்.

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதிஷ் குமார் கதைக்கு ஏற்ப காட்சிகளை படமாக்கியிருக்கிறார். யானையின் காட்சிகளை சிறுவர்களுக்கு பிடித்த வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் நரேஷ் சம்பத், விலங்குகளிடம் இருக்கும் அன்பையும், மனிதர்களுக்கு செல்ல பிராணிகளிடத்தில் இருக்கும் அன்பையும் வெளிக்காட்டும் வகையில் படத்தை இயக்கியிருக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு யானையை மையமாக கொண்ட கதைக்களத்தை சிறுவர்களுக்கு மட்டும் இன்றி இளைஞர்களுக்கும் பிடித்த வகையில் காதல், ஆக்‌ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களை சேர்த்து அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் நரேஷ் சம்பத்.

ரேட்டிங் 3/5

Comments are closed.