நடிகர்கள் : ரியோ, வர்டிகா, செத்தன், முனீஷ்காந்த், மாளவிகா, தீபா வெங்கட், மாகாபா ஆனந்த், பாலாஜி தியாகராஜன் தயாளன், தாஃபியா அபு, கவின் ஜிடி
இசை : அன்கிட் மேனன்
ஒளிப்பதிவு : மல்லிகார்ஜுன்
இயக்கம் : ராமச்சந்திரன் கண்ணன்
தயாரிப்பு : டிரைடென்ட் ஆர்ட்ஸ் & எய்வா எண்டர்டெயின்மெண்ட் – ஆர்.ரவீந்திரன், சுதர்சன்
திருமண வயதை தாண்டியும் பெண் கிடைக்காமல் தவிக்கும் நாயகன் ரியோவுக்கு திடீரென்று ஒருவர் நண்பராகிறார். அவரது ஐடியாவின்படி ‘அலைபாயுதே’ மாதவன் போல் சென்னை புறநகர் ரயிலில் பயணித்து, தனக்கானவளை தேடுகிறார் ரியோ. சில மாதங்கள் கடந்தும் ரியோவின் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், திடீரென்று அவரே அதிர்ச்சியடையும் விதத்தில், பேரழகியான நாயகி வர்டிகா, அவரை காதலிப்பதாக சொல்கிறார். அதே சமயம், மாலை 6 மணிக்கு மேல் தன்னால் வீட்டை விட்டு வெளியே வர முடியாது, எனவே அந்த நேரத்தில் நாம் சந்திக்க இயலாது. இதற்கு சம்மதம் என்றால் காதலிக்கலாம், என்ற நிபந்தனை விதிக்கிறார்.
வர்டிகாவின் காதலில் சொக்கிய ரியோ, அவரது நிபந்தனையை எந்தவித யோசனையும் இன்றி ஏற்றுக் கொண்டு காதல் வானில், தடை இன்றி பறக்கவும் செய்கிறார். இதற்கிடையே, வர்டிகாவின் மாலை 6 மணி நிபந்தனை ரியோவின் காதல் பயணத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்த, அந்த 6 மணி ரகசியம் பற்றி அறிந்துக் கொள்வதென்று முடிவு செய்கிறார். அவரைப் போல் ரசிகர்களும், ஆவலோடும், பலவிதமான யூகங்களும் அந்த ரகசியம் பற்றிய அறிய காத்துக் கொண்டிருக்க, அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் உரைய வைக்கும் விதமான ஒரு காரணத்தை நாயகி வர்டிகா சொல்கிறார்.
நாயகி வர்டிகாவின் அந்த பிரச்சனை என்ன ? என்பது பற்றி ரியோவுடன் ஒட்டு மொத்த திரையரங்கமே அதிர்ச்சியில் ஆழ்ந்துப் போக, அதன் பிறகும் அவரது காதல் கைகூடியதா?, அவருக்கு கல்யாணம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கல்யாணத்திற்காக ஏங்கும் இளைஞர் ராம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரியோ, காமெடி கலந்த நடிப்பால் புதுவிதமான ரியோவை வெளிக்காட்ட முயற்சித்திருக்கிறார். பெண்கள் உலகம் பற்றி தெரியாத அப்பாவியாக வலம் வருபவர், தனது ஒவ்வொரு அசைவுகள் மூலமாகவும் பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். அதில் பெரும்பாலான சில்மிஷங்கள் மற்றும் செயல்களில் சிவகார்த்திகேயனின் ஆரம்பக்கட்டத்தை நினைவுப்படுத்துகிறது. காதலுக்காக ஏங்குவது, எதிர்பார்க்காத பிரச்சனை, அந்த பிரச்சனையை தீர்க்க போராடுவது என்று திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் ரியோவின் நடிப்பு இருந்தாலும், பல இடங்களில் கொஞ்சம் ஓவர் டோஸாகவும் இருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை வர்டிகா அழகாக இருக்கிறார். கனமான கதாபாத்திரம் என்றாலும், அவருக்கு ஹீரோ அளவுக்கு நடிக்க வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவரை ஒரு அழகு சிலையாக காட்டுவதற்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சேத்தன், அம்மாவாக நடித்திருக்கும் மாளவிகா அவினாஷ், தங்கையாக நடித்திருக்கும் தாஃபியா அபு, மாமனாக நடித்திருக்கும் முனீஷ்காந்த், நண்பராக நடித்திருக்கும் பாலாஜி தியாகராஜன் தயாளன், நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் தீபா வெங்கட், மாமனாக நடித்திருக்கும் மாகாபா, தாத்தாவாக நடித்திருக்கும் காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மல்லிகார்ஜுன், காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். குறிப்பாக நாயகியை அழகாகவும், பளிச்சென்றும் காட்டுவதில் அதிகம் மெனக்கெட்டிருப்பவர் படம் முழுவதையும் பளிச்சென்று படமாக்கி காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார்.
அன்கிட் மேனனின் இசையில் பாடல்கள் அனைத்தும் மாண்டேஜாக இடம் பெற்றிருந்தாலும், திரும்ப திரும்ப கேட்கும்படி இருப்பதோடு, ரீல்ஸ் வீடியோவுக்கானதாகவும் இருக்கிறது. பின்னணி இசை பாடல்களைப் போல் மெலோடி பாணியில் இதமாக பயணிக்கிறது.
படத்தொகுப்பாளர் ஒய்.என்.சி.சிவா, முதல் பாதியை சற்று மெதுவாக நகர்த்தி சென்றாலும், இரண்டாம் பாதியை வேகமாக நகர்த்துவதோடு, நகைச்சுவை காட்சிகளை சரியான முறையில் தொகுத்து படத்தை கலகலப்பாக நகர்த்திச் செல்கிறார்.
வித்தியாசமான படம், வித்தியாசமான முயற்சி என்று பல படங்களை குறிப்பிட்டிருக்கிறோம். ஆனால், உண்மையிலேயே வித்தியாசமான கதைக்களம் மற்றும் முயற்சி என்றால் இந்த படம் தான். இதனை யோசித்ததோடு மட்டும் இன்றி, அதை காமெடியாக சொல்லி ஒட்டு மொத்த திரையரங்கையே கலகலப்பில் ஆழ்த்தியிருக்கும் இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன், தனது வித்தியாசமான முயற்சிக்கான பின்னணியையும் மிக சாமர்த்தியமாக சொல்லி ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறார்.
மாலை 6 மணிக்கு மேல் நாயகியை சந்திக்க முடியாததற்கான காரணம் என்ன ? என்ற ஒற்றைக் கேள்வியை வைத்துக் கொண்டு, காதல் மற்றும் காமெடி உணர்வை அள்ளித்தெளித்திருக்கும் இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன், சில தடுமாற்றங்களோடு சொன்னாலும், தான் சொல்ல நினைத்ததை சரியான முறையில் சொல்லி இளைஞர்களை குஷிப்படுத்தியிருக்கிறார்.
ரேட்டிங் 3.5/5
Comments are closed.