தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. தூத்துக்குடியில், மண்ணையும் மக்களையும் அதிக பாதிப்பிற்குள்ளாக்கிவரும் இந்த ஸ்டெர்லைட் ஆலையை விரிவுபடுத்த, ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டது. இதற்கு ஸ்டெர்லைட் ஆலையின் அருகே உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணி தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதனை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதை எதிர்த்து இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்த 47 நாட்களாகத் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள். ஆனால், இன்றுவரை அரசு சார்பில் யாரும் வந்து மக்களை சந்தித்துப் பேசவில்லை. இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக சூப்பர்ஸ்டார் ரஜினி குரல் கொடுத்துள்ளதுடன் தமிழக அரசின் மெத்தனை போக்கையும் சாடியுள்ளார்.
“ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களாக அவதிப்பட்டு போராடிக் கொண்டிருக்கும்போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

Comments are closed.