சூப்பர்ஸ்டார் ரஜினி தமிழில் வெளியாகும் சில படங்களை எப்படியாவது நேரம் ஒதுக்கியாவது பார்த்து விடுவார். அந்த லிஸ்ட்டில் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘இவன் வேற மாதிரி’ படமும் சேர்ந்திருக்கிறது.
பிரபுவின் மகன் நடித்திருக்கும் படம் என்பதற்காக மட்டும் இந்தப்படத்தைப் பார்க்கவில்லை ரஜினி. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று கும்கி’யில் அறிமுகமான விக்ரம் பிரபு இதில் எப்படி தன்னை மாற்றிக்கொண்டுள்ளார் என்பதற்காகவும் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தன்னை ஈர்த்த இயக்குனர் சரவணனின் அடுத்த படம் என்பதாலும் தான் இந்தப்படத்தை பார்த்தார்.
படம் பார்த்துவிட்டு ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இவன் வேற மாதிரி’ படத்தைப் பார்த்தேன். ஒரு கிளாஸான ஆக்ஷன் படம். இதுவரைக்கும் எந்த படத்திலும் பார்த்திராத படத்தின் உச்சகட்ட காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. நல்ல பொழுதுபோக்கு படம். இந்தப் பட வெற்றிக்கு என் வாழ்த்துகள்” என்று மனம் விட்டு பாராட்டியுள்ளார். ஒரு நல்ல படத்திற்கு இதைவிட வேறென்ன அங்கீகாரம் வேண்டும்.?