சின்னத்திரையில் மட்டுமே கோலோச்சிக்கொண்டு இருந்த ராதிகா ஏதாவது நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் மட்டுமே வெள்ளித்திரையில் தலைகாட்டுவார். சில மாதங்களுக்கு முன் வெளியான ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் பிரகாஷ்ராஜின் மனைவியாக நடித்திருந்தார் ராதிகா.
இப்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் ராதிகாவை தேடி வந்திருக்கிறது. அருண் தேஷ்யம் என்பவர் இயக்கும் இந்தப்படத்தின் பெயர் ‘உண்டிலே மஞ்சி காலம் முண்டு முந்துன’. ஒரு காலத்தில் ராதிகாவும் தெலுங்கில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா என சூப்பர்ஸ்டார்களுடன் பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்தவர்தான். கமலுடன் இவர் தெலுங்கில் நடித்த ‘ஸ்வாதி முத்யம்’ படம்தான் தமிழில் ‘சிப்பிக்குள் முத்து’ என்ற பெயரில் வெளியானது.
1999ல் ராம்கோபால் வர்மா டைரக்ஷனில் வெளியான ‘பிரேம கதா’ படம்தான் தெலுங்கில் அவர் கடைசியாக நடித்தது. இந்தப்படம்தான் ஆந்திராவின் மிக உயர்ந்த விருதான நந்தி விருதையும் அவருக்கு பெற்றுத் தந்தது. இப்போது கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து மீண்டும் தெலுங்கில் கால்பதிக்கிறார் ராதிகா.