பிரபல நடிகர்களின் வாரிசுகள் இன்ஜினியர், டாக்டர் என படித்தாலும் கடைசியில் வருதென்னவோ சினிமாவுக்குத்தான். பெரும்பாலும் நடிகராக.. இல்லையென்றால் டைரக்டராக… மலையாள மெகாஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் இப்போது முன்னணி இளம் ஹீரோவாக நடித்து வருகிறார். இதுவரைக்கும் நான்கைந்து படங்களில் மட்டுமே நடித்திருக்கும் துல்கர் தான் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் இதயத்தில் ஒரு இடத்தை பிடித்து அமர்ந்துவிட்டார்.
அதேபோலத்தான் சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் தனது மகன் ப்ரணவை ஹீரோவாக ஆக்கப்போகிறார் என்றும் மணிரத்னம் அடுத்து தான் இயக்கவிருக்கும் படத்தில் ப்ரணவை ஹீரோவாக அறிமுகப்படுத்த இருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் மோகன்லாலோ தனது மகனுக்கு நடிப்பதில் விருப்பம் இல்லை என்றும் படிப்பதிலும் பல இடங்களுக்குச் சென்று சுற்றிவருவதிலும் தான் ஆர்வமாக இருக்கிறார் என்றும் கூறி தற்சமயம் அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
ஆனால் நம்மவர்கள் அத்துடன் விட்டுவிடுவார்களா என்ன? இப்போது மோகன்லாலின் மகளான விஸ்மாயா பக்கம் பார்வை திருப்பியுள்ளார்கள். சினிமாவில் நடிப்பதற்குரிய அழகான முகத்தோற்றத்துடன் இருக்கும் விஸ்மாயாவை கதாநாயகியாக நடிக்க சிலர் கேட்டு வருகிறார்களாம். இதற்கு முன்னுதாரணமாக கமல், அர்ஜூன் ஆகியோரின் மகள்கள் நடிப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்களாம். ஆனால் இப்போதுதான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் விஸ்மாயாவின் படிப்பை மனதில்கொண்டு இந்த பேச்சுக்களில் மோகன்லால் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்றும் அவருக்கு நெருக்கமான சிலர் சொல்கிறார்கள்.