கெமிஸ்ட்ரி ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் மட்டும்தான் வொர்க் அவுட் ஆக வேண்டுமா? ஒரு டைரக்டருக்கும் ஹீரோவுக்கும் ஆகக்கூடாதா என்ன? அப்படி இல்லாமலா எம்.ஜி.ஆரும் டைரக்டர் ப.நீலகண்டனும் 17 படங்களில் சேர்ந்து பணியாற்றினார்கள். ரஜினியை வைத்து எஸ்.பி.முத்துராமன் 26 படங்களை இயக்கினார்?. நிச்சயம் இதுவும் ஒரு வகையான கெமிஸ்ட்ரிதான்.
இப்போதிருக்கும் சூழலில் ஒரு இயக்குனரும் ஹீரோவும் மூன்று படங்களில் சேர்ந்தாற்போல வேலை பார்த்தார்கள் என்றால் அது ஆச்சர்யமான விஷயம் தான். அத்தகைய ஒரு புரிதல் உணர்வோடு மீண்டும் கைகோர்க்கிறார்கள் இயக்குனர் ராதாமோகனும் நடிகர் பிருத்விராஜும். ராதாமோகன் இயக்கிய மொழி படத்தில் நடித்த பிருத்விராஜ் தொடர்ந்து அபியும் நானும், பயணம் என ராதாமோகனின் படங்களில் அது கெஸ்ட் ரோல் என்றாலும் இடம்பிடித்து வந்தார்.
இப்போது இருவரும் மீண்டும் ஒரு படத்தில் நான்காவது முறையாக கைகோர்க்கிறார்கள். ஆனால் இந்தமுறை இவர்கள் இணைவது தமிழில் அல்ல.. மலையாளத்தில். ஆம் இந்தமுறை மலையாளத்தில் படம் இயக்கும் முடிவுடன் கதையை தயார் செய்துவிட்டார் ராதாமோகன். தமிழிலேயே மலையாள நடிகரான பிருத்விராஜை நடிக்கவைத்தவர், மலையாளத்தில் நடிக்க வேறு ஆளையா தேடுவார்?
இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க லட்சுமி மேனனை அணுகியிருக்கிறார்கள். இவர்கள் தவிர ராதாமோகனின் ஆஸ்தான நடிகர்களுக்கும் இதில் ஒரு பங்கு நிச்சயம் உண்டு. ராதாமோகனின் முந்தைய படங்களைப்போல இதுவும் ஒரு ‘ஃபீல் குட்’ படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.