‘ஸ்மர்ஃப்ஸ்-2’ ஹாலிவுட் படம் !
– குழந்தைகளுக்கும் குழந்தை மனம் கொண்டவர்களுக்கும்!
குழந்தைகளுக்கான படங்கள் தயாரிப்பது நம்நாட்டில் குறைவு தான். ஆனால் ஹாலிவுட்டில் கணிசமான அளவில் தயாரிக்கப்படுகின்றன.
குறிப்பாக அனிமேஷன் படங்கள் நல்ல வசூல் செய்து வருகின்றன. ‘ஸ்மர்ஃப்ஸ்’ என்கிற படம் முதல்பாகம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இப்போது ‘ஸ்மர்ஃப்ஸ்-2’ வருகிறது.
சின்ன சின்ன உருவங்களில் சிகரம் தொட்ட இப்படம், ஒரு அமெரிக்கன் ஆக்ஷன் சாகசம் மற்றும் நகைச்சுவைப் படம்.
சின்ன சின்ன உருவ ‘ஸ்மர்ஃப்ஸ் கேரக்டரின் பூர்வீக நாடு பெல்ஜியம்.1958-ல் காமிக்ஸ் புத்தகங்களில் பிரபலமானது.பியோ என்கிற ஓவியர்தான் இதன் தோற்றத்தை வடிவமைத்து காமிக்ஸில் கலக்கியவர். பிறகு 1981ல் தொலைக்காட்சித் தொடரின் மூலம் விஸ்தாரமான அளவில் ரசிகர்களைக் கவர்ந்தது. புத்தகங்கள், டிவி சீரியல் விளம்பரங்கள் வீடியோ கேம்ஸ், பொம்மைகள், தீம்பார்க் என்று புகழ்பெற்ற இந்த ‘ஸ்மர்ப்ஸ்’ திரைப்படமாகவும் வந்து கலக்கியது.
முதல் பாகம் கொடுத்த வசூலிலும் மகிழ்ச்சியிலும் அடுத்த பாகம் நம்பிக்கையுடன் உருவாகியுள்ளது . கடந்த இரண்டு வருடத்துக்கு முன் வெளியாகி வெற்றி பெற்ற ‘தி ஸ்மர்ஃப்ஸ்’ என்ற அனிமேஷன் படத்தின், இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது. சோனி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. முதல் பாகத்தை இயக்கிய ராஜா கோஸ்நெல் ‘ஸ்மர்ஃப்ஸ் 2’ இயக்கியுள்ளார்.
நீல் பேட்ரிக்,ஜெய்மா மேய்ஸ், கேட்டி பெர்ரி, ஹங்க் அஜாரியா உட்பட பலர் நடித்துள்ளனர். மேலை நாடுகளில் பிரபலமான ஸ்மர்ஃப்ஸ் கேரக்டரை வைத்துக்கொண்டு பேமிலி காமெடி படமாக இதை 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கி உள்ளனர். முதல் பாகத்தில் கணவன் மனைவியாக நடித்த நீல் பேட்ருக்கும் ஜெய்மாவும் இதிலும் அப்படியே நடித்துள்ளனர். அனிமேஷன் கேரக்டர்கள் செய்யும் லூட்டிகள் கிராபிக்ஸ் பிரமாண்டத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது .
படத்தில் வரும் ஸ்மர்ஃப்ஸ் அதற்கான உலகத்திலிருந்து பூமிக்கு வருகின்றது. இதை இங்குள்ள ஒரு மந்திரவாதி தவறாக பயன்படுத்திக் காரியங்களைச் சாதிக்க முயல்கிறான். அவனுடைய மாயவித்தை ஸ்மர்ஃப்ஸ்களிடம் என்னென்ன செய்கிறது?கடத்தப்பட்ட ஸ்மர்ஃப்ஸ் என்னாகிறது என்கிற சிறிய கதைதான்.ஆனால் 3டி அனிமேஷன். தொழில்நுட்பத்தில் கலக்குகிற அசத்தல் அனைவரையும் கவரும்படி இருக்கும்.
‘ஸ்மர்ஃப்ஸ்.2’ நேற்று அமெரிக்காவில் வெளியாகியுள்ளது. விமரசனங்களில் பரவலான வரவேற்பு பெற்றுள்ளது. விமர்சனத் தாக்குதல் நடத்தும் பத்திரிகைகள் கூட குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனாலும் குறை சொல்ல ஒன்று மில்லை என்று கூறியுள்ளன.இந்தப் படம் குழந்தைகளுக்கும் குழந்தை மனம் கொண்டவர்களுக்கும் பிடிக்கும் என்று பல்வேறு ஊடகங்கள் கூறுகின்றன.
குழந்தைகளும் குழந்தை மனம் கொண்டவர்களும் பார்க்க வேண்டிய படம். குழந்தைகளோடு வாருங்கள்; வந்து குழந்தைகளாக மாறுங்கள்.