மோகன்லால் மகனை அறிமுகப்படுத்துகிறார் மணிரத்னம்?

84

பிரபல நடிகர்களின் வாரிசுகள் இஞ்சினியர், டாக்டர் என படித்தாலும் கடைசியில் வருவதென்னவோ சினிமாவுக்குத்தான். பெரும்பாலும் நடிகராக.. இல்லையென்றால் டைரக்டராக. மலையாள மெகாஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் இப்போது முன்னணி இளம் ஹீரோவாக நடித்துவருகிறார். இதுவரைக்கும் நான்கைந்து படங்களில் மட்டுமே நடித்திருக்கும் துல்கர் தான் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் இதயத்தில் ஒரு இடத்தை பிடித்து அமர்ந்துவிட்டார்.

அதேபோலத்தான் சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் தனது மகன் ப்ரணவை ஹீரோவாக களம் இறக்க சரியான தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார். அதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். மணிரத்னம் அடுத்து தான் இயக்கவிருக்கும் படத்தில் ப்ரணவை ஹீரோவாக அறிமுகப்படுத்த இருக்கிறார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மோகன்லாலின் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கிறது. காரணம் மலையாளத்தில் மட்டுமே நடித்துக்கொண்டிருந்த மோகன்லாலை இருவர் படம் மூலம் தமிழில் அறிமுகம் செய்ததும் அவருக்கு ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யாராயை அறிமுகப்படுத்தியதும் மணிரத்னம் தான்.

தான் சில மாதங்களுக்கு முன் கடைசியாக இயக்கிய கடல் படத்தில் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கையும், ராதாவின் மகள் துளசியையும் அறிமுகப்படுத்தினார். கடல் படம் சரியாக போகாவிட்டாலும் இப்போது கௌதம் கார்த்திக்கின் கைவசம் நிறைய படங்கள் இருக்கின்றன. அதனால் தனது மகனும் மணிரத்னம் படத்தில் அறிமுகமாவதுதான் சரியாக இருக்கும் என மோகன்லாலும் நினைக்கிறாராம். விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளிவரலாம்.

Leave A Reply

Your email address will not be published.