இல்லாத பாடல் வந்தது… அது எம்ஜிஆர் அன்பாய் தந்தது…. – பூங்கதவே தாழ் திறவாய்…. / பகுதி 07

99

கவிஞர் மு.மேத்தா அவர்கள் அரைமணி நேரத்தில் எழுதிய பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது என்று கடந்தவாரம் சொல்லியிருந்தேன் அல்லவா அது பற்றி பார்ப்போம்.

’பாரதி’, படத்திற்குதான் அவசரமான பாடல் தயாராகிக்கொண்டிருந்தது. மேத்தா சார் இசைஞானியை சந்தித்து விட்டு டியூன் கேசட்டோடு வெளியே வந்தார். பக்கத்தில் டைனிங் ஹால் இருந்தது அங்கேயே உட்கார்ந்து எழுத ஆரம்பித்து விட்டார். 35 நிமிடங்கள் ஓடியது. பாட்டு தயாராகியிருந்தது. அந்த பாட்டுதான் ‘மயில்போல பொண்ணு ஒண்ணு குயில்போல பாட்டு ஒண்ணு’. இந்த பாடலை பாடிய பவதாரணிக்கு தேசிய விருது கிடைத்தது.

அதே போல் ‘பிதாமகன்’ படத்தில் ‘அடடா அகங்கார அரக்கர் கைகளில் உலகிங்கே’ என்ற பாடலை எழுதி முடித்து விட்டு மறுநாள் கலசா ரெக்கார்டிங் தியேட்டருக்கு போனபோது. அங்கே இசைஞானி படத்தின் அவசியத்திற்காக டியூனை மாற்றியிருந்தார். கவிஞர் அங்கேயே அவருடைய காருக்குள் உட்கார்ந்து அந்த பாடலை எழுதிக்கொடுத்தார். இப்படி நிறைய இனிமையான அனுபவங்கள். அவர் எழுதி முடித்த டியூனை நான் என் ரூமில் வந்து நானாக ஒரு பாடலை எழுதி பார்ப்பேன். இதுபோல் இசைஞானிக்கு தெரியாமலேயே அவர் இசையில் நான் பாட்டெழுதியிருக்கிறேன். இப்படி கவிஞர் மு.மேத்தா அவர்கள் என் வாழ்க்கையில் எனக்கு எல்லாமுமாக இருந்திருக்கிறார்.

இவரைப்போல இன்னொரு முக்கியமான கவிஞர் முத்துலிங்கம்..இனி அவரைப்பற்றி பார்ப்போம். சுமார் 1500 திரைப்படப்பாடல்களை எழுதியவர். எஸ்.எம்.சுப்பையாநாயுடு, கே.வி.மகாதேவன், வேதா, எம்.எஸ்.வி., இளையராஜா, தேவராஜ் மாஸ்டர், தேவேந்திரன் உட்பட பல இசையமைப்பாளர்களிடம் பாடல்கள் எழுதியவர். 1984 ல் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 1987 ல் அரசவை கவிஞராகவும் இருந்தவர். தமிழக அரசின் கலைமாமணி, பட்டத்தையும், பாரதிதாசன் விருதையும் பெற்றவர். இப்படிபட்ட மாமனிதர் ஒரு பள்ளித்தோழன் போல என்னோடு பழக்கூடியவர். வாரத்தில் நான்கு நாடகள் நாங்கள் சந்தித்துப் பேசிவிடுவோம்.

மேத்தா ஐயா போல எனக்கு வழிகாட்டியாகவும், நெருக்கமான நண்பராகவும் இரக்கக்கூடியவர் கவிஞர் முத்துலிங்கம். இவர் எழுதிய பல பாடல்களை நான் பள்ளி நாட்களில் பாடி பரிசு வாங்கியிருக்கிறேன். அதில் ஒரு பாடல் ‘நதிக்கரை ஓரத்து நாணல்களே என் நாயகன் புகழை பாடுங்களேன்’ என்ற பாடல். ’காதல் கிளிகள்’ படத்தில் இடம் பெற்ற பாடல் அது. அதேபோல் ‘பொன்மானைதேடி நானும் பூவோடு வந்தேன்’, ’இதயம் போகுதே’ போன்ற பாடல்களை என் பள்ளி நண்பர்கள் பாடச்சொல்லி கேட்பார்கள். பள்ளியில் இரவு நேரத்தில் தங்கி படிக்கும் போது, படிப்பு நேரத்திற்குப் பிறகு பாட்டுக் கச்சேரிதான். பள்ளி வாட்ச்மேனும் பாட்டு ரசிகர் என்பதால் எந்த புகாரும் எங்கள் மேல் வராது. இப்படி ரசித்து பாடிய பாடல்களை எழுதிய கவிஞரோடு நெருக்கமாக இருப்போம் என்று அப்போது நினைக்கவில்லை. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரோடு நெருக்கமாக இருந்தவர், அவருக்காக பல பாடல்களை எழுதியவர்.. என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இவர் போன்ற மூத்த படைப்பாளிகளை பற்றி எத்தனை முறை பதிவு செய்தாலும் தவறில்லை. காரணம். பல பத்திரிகையாளர்களுக்கே இவர் போன்றவர்களின் சாதனைகள் தெரியாமல் இருப்பது வேதனை.. அதனால் இந்த பதிவு முக்கியமாகிறது.

1974 அலையோசை’ பத்திரிகை வேலையை விட்டு விலகியிருந்தார் முத்துலிங்கம். எம்.ஜி.ஆருக்கு எதிராக செய்திகளை வெளியிட ஆரம்பித்திருந்ததால் அப்படியொரு முடிவை எடுத்திருந்தார் முத்துலிங்கம். ஒரு நாள் தற்செயலாக புரட்சித்தலைவரை பார்க்க தி.நகர் ஆற்காட் ரோட்டிற்கு வந்திருக்கிறார். (இப்போது அது எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாகியிருக்கிறது) அன்று வீட்டிலிருந்த குஞ்சப்பன் என்பவர் முத்துலிங்கம் வந்திருக்கும் தகவலை இண்டர்காம் மூலம் மாடியிலிருந்த எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கிறார். உடனே போனில் முத்துலிங்கத்திடம், அலையோசையிலிருந்து விலகியது பற்றி “விஷயத்தை கேள்விபட்டேன் முத்துலிங்கம் குஞ்சப்பணிடம் கொஞ்சம் பணம் கொடுத்திருக்கிறேன் வாங்கிக்கோ” என்று சொல்ல, “இல்லைங்க தலைவரே எனக்கு பணம் வேண்டாம் வேலை கொடுங்க.” (பாடல் எழுதும் பணி) என்று கவிஞர் சொல்கிறார். “வேலை குடுக்கும்போது குடுக்குறேன் இப்ப பணத்தை வாங்கிக்க.” இது தலைவர். “இல்லங்க தலைவரே வேலை தான் வேணும் பணம் வேண்டாம். நான் புறப்படுறேன்.” என்று சொல்லி விட்டு கிளம்புகிறார் முத்துலிங்கம். அவர் காலத்தில் புரட்சித்தலைவரிடம் உதவி பெறாத கட்சிக்காரர்களே இல்லை எனலாம். ஆனால் எம்.ஜி.ஆரிடமே வாங்க மறுத்த மாண்பு கவிஞருக்கு மட்டுமே உண்டு. இந்த சம்பவத்தை மனதில் வைத்திருந்த எம்.ஜி.ஆர். முதல்மைச்சராக வந்த பிறகு அந்த ஆண்டின் பாவேந்தர் பாரதிதாசன் விருதை முத்துலிங்கத்திற்கு வழங்கினார்.

அப்போது மேடையில் பேசிய எம்.ஜி.ஆர். தி.நகர் சம்பவத்தை குறிப்பிட்டு, “உழைக்காமல் யாரிடமும் பணம் வாங்கக்கூடாதுனு சுயமரியாதையோடு இருக்கும் முத்துலிங்கத்திற்கு பாரதிதாசன் விருதை கொடுப்பதுதான் பொருத்தமானது.” என்று பலத்த கரவொலிகளுக்கிடையில் பேசுகிறார் முதல்வர் எம்.ஜி.ஆர்.

இன்னொரு சம்பவம். எப்போதும் போல் எம்.ஜி.ஆரை சந்திக்க சத்யா ஸ்டுடியோவிற்கு போகிறார் முத்துலிங்கம். மதியம் 12 மணி. மீனவ ’நண்பன்’ படப்பிடிப்பில் இருக்கிறார் தலைவர். செட்டிலிருந்து வெளியே வந்த எம்.ஜி.ஆருக்கு வணக்கம் வைக்கிறார் கவிஞர். சிரித்தபடியே வந்து அமர்ந்த எம்.ஜி.ஆர்.
முத்துலிங்கத்தையும் உட்கார சொல்கிறார். “இந்த படத்துல நீ என்ன பாட்டு எழுதியிருக்க.” விசாரிக்கிறார். “இதுல நான் ஒண்னும் எழுதலையே.” “ஏன் நான் உன்னை எழுத வைக்க சொன்னேனே.” “எனக்கு யாரும் சொல்லல தலைவரே” கொஞ்சம் மெதுவாகவே சொல்லியிருக்கிரார் முத்துலிங்கம். உடனே கோபத்துடன் பக்கத்திலிருந்த தயாரிப்பு நிர்வாகியைப் பார்த்து, “ஸ்ரீதர் படம்னு கொஞ்சம் சலுகை குடுத்தா எதையும் என்கிட்ட சொல்லக்கூடாதுன்னு அர்த்தமா? டைரக்டரையும், சானாவையும் வரச்சொல்லு.” என்று சொன்னபோது கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரரான எம்.ஜி.ஆரின் கண்களும் சிவந்திருந்தது. பதட்டத்துடன் அங்கு வந்தனர் ஸ்ரீதரும், சடையப்ப செட்டியாரும். (மரியாதை நிமித்தமாக அவரை சானா என்று அழைக்கிறார் எம்.ஜி.ஆர்.)
“முத்துலிங்கத்தை வெச்சு பாட்டெழுத சொன்னேனே ஏன் செய்யல.” கோபம் குறையாமல் கேட்கிறார். “நாங்கள் தேடும்போது அவர் ஊரில் இல்ல. அதான்” என்று சானா தயங்க, கவிஞர் பக்கம் திரும்பிய தலைவர் “நீ ஊரில் இல்லையா” எனக, “ஆமாம் தலைவரே வெளியூர் போயிருந்தேன்” என்று சொல்ல, “இந்த மாதிரி வெளியூர் போறதா இருந்தா என்கிட்ட சொல்லிட்டுப் போகனும்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன். என்று கவிஞரையும் கடிந்து கொள்கிறார்.

அப்பாடா நிம்மதி என்று ஸ்ரீதரும், சானாவும் நிம்மதி பெருமூச்சுவிடுகிறார்கள். ஆனால் புரட்சித்தலைவர் விடவில்லை.

“சரி..சரி இப்பதான் வந்துட்டாரே பாட்டு எழுதவைங்க” என்று சொல்ல,” இருவரும் அமைதியாக நின்றிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். அவர்கள் இருவரையும் பார்க்க, “படத்தில் எல்லா சிச்சுவேஷனும் முடிஞ்சு போச்சு. இன்னொரு பாட்டு எழுத சிச்சுவேஷன் இல்ல.” என்று ஸ்ரீதர் சொல்கிறார். “அப்ப கனவு பாட்டு ஒன்னு சேர்த்துடுங்க. அன்பே வா படத்துல ‘ராஜாவின் பார்வை பாட்டையும், உரிமைக்குரல் படத்துல விழியே கதை எழுது பாட்டையும் சிச்சுவேஷனோடவா போட்டோம். சிச்சுவேசனே இல்லாத சிசுவேஷன் தான் கனவு பாட்டு. அதனால் இதிலும் ஒரு கனவு பாட்டு வைங்க. இனி அடுத்த சூட்டிங் முத்துலிங்கம் பாட்டு சீன்தான்.” என்று கோபத்தோடு சொல்லி விட்டு விருட்டென்று எழுந்து சென்று விட்டார் புரட்சித்தலைவர்.

இப்படி தன்னை நம்பி இருப்பவர்கள் எந்த விதத்திலும் கஷ்டப்படக்கூடாது என்று நினைக்கும் புனித உள்ளம் கொண்டவரின் இதயத்தில் இடம் பெற்றவர் முத்துலிங்கம். ஒருவருக்கு உதவ வேண்டும் முடிவெடுத்து விட்டால் எத்தனைபெரிய தடைகளையும் தன் கருணை கரத்தால் உடைத்து நொறுக்குகிறார் பாருங்கள் எம்.ஜி.ஆர். அவரின் நிழல் பட்ட மனிதரின் நட்பை எனக்கு பொன்மனத்தலைவன் அனுப்பிய பொக்கிஷமாகவே நினைக்கிறேன்.

தங்கத்தலைவன் தனக்காக வாதிட்டு பாடலை எழுதவைத்த அந்த சம்பவம் கவிஞரின் நெஞ்சில் படிய, அந்த நன்றியை அவர் எழுதிய பாடலில் வரிகளாக்கிக் காட்டுகிறார். அதுதான் ஒரு படைப்பாளியின் ஆளுமை என்பது. ’மீனவ நண்பன்’ படத்தில் இடம் பெற்ற ‘தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து” பாடல்தான் முத்துலிங்கம் எழுதியது. இது ஒரு காதல் பாடல். இதில் இரண்டாவது சரணத்தில் புரட்சித்தலைவருக்காக இப்படி எழுதுகிறார்.

“எந்தன் மனக்கோவிலில் – தெய்வம்
உனைக்காண்கின்றேன்
உந்தன் நிழல் போலவே – வரும்
வரம் கேட்கிறேன்”
என்று கதாநாயகி பாடுவதாக வரும் வார்த்தைகளில் தலைவனுக்கு நன்றி தெரிவிக்கிரார் கவிஞர். இவரின் இன்னொரு சிறப்பு, வாலி ஒரு கவிதையையோ, கட்டுரையையோ எழுதி முடித்தவுடனேயே அதை படித்து காண்பிப்பது முத்துலிங்கத்திடம் தான். அத்தனை இலக்கியச் செழுமையுள்ளவர்.

அதேபோல் கமல்ஹாசன் மேடைகளில் இப்பவும் வியந்து பேசும் பாடல் விருமாண்டி படத்தில் இடம் பெற்ற பாடலைதான். ‘மாடவிளக்க யாரு தெருவோரம் ஏத்துனது’ என்ற பாடலில் ‘ஆறாக நீ ஓட உதவாக்கரை நானு….ஈரமில்லா நெஞ்சானாலும் ஊத்துதடி கண்ணு’ என்ற வரியை சிலாகித்து பேசுவார் அந்த உதவாக்கரையின் விளக்கத்தை முத்துலிங்கம் கமலுக்கு தனியே விவரித்தது தனிக்கதை.. முந்தையகாலத்தில் எழுத்தாணி கொண்டு எழுதியது நமகெல்லாம் தெரியும், அந்த எழுத்தாணி பிடித்து எழுதிய கடைசி மனிதர் முத்துலிங்கம் அவர்கள்தான். இது இவரின் தனிச்சிறப்பு இந்த மாமனிதரின் நட்பை நான் பெரிதும் போற்றுகிறேன். இப்படிபட்ட மனிதர்தான் ஒரு பொது மேடையில் எனக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார். அதுவும் நான் பணிபுரிந்த குமுதம் அலுவலக மேடையில் வைத்து அப்படியொரு நிகழ்ச்சி நடந்தது. அது பற்றி அடுத்த வாரம் சொல்றேன்.

(தாழ் திறக்கும்)
தேனி கண்ணன். 9840515216

Leave A Reply

Your email address will not be published.