ரஜினிக்கு எப்போதுமே அஜித் மீது தனி பாசம் உண்டு. இதற்கு நடிப்பை முதலீடாக வைத்து அரசியலுக்குப் போகும் ஆசை அஜித்திற்கு கிடையாது என்கிற நல்லெண்ணமே காரணமாக இருக்கலாம். அந்த வாரம் அஜித்தின் பேட்டி வேண்டும் என்பதற்காக அவரை சந்திக்கக் கிளம்பினேன். அஜித்தை பொறுத்தவரை அவரை பற்றி வெளி வராத ’கர்ண பரம்பரை’ கதைகள் நிறைய உண்டு. அவர் வீடு வரும் வரைக்கும் அப்படிப்பட்ட கதை ஒன்றை சொல்லி விடுகிறேன். தன்னிடம் வேலை செய்பவர்கள் நலனில் எப்போதும் அக்கறையோடு இருப்பார் அஜித்.
ஒரு நாள் திருவான்மியூரில் இருக்கும் அவர் வீட்டில் முன் பகுதியில் கற்பலகைகள் பதிக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. அதை செய்து கொண்டிருந்தவருக்கு ஐம்பது வயது இருக்கலாம்,. மெலிந்த தேகம். ஒவ்வொரு கல்லாக எடுத்து வைத்துகொண்டிருந்தவர் வெய்யிலின் உக்கிரம் தாங்காமல் சுவர் ஓரமாக சிரிது நேரம் ஒதுங்கி உட்கார்ந்திருக்கிறார். அப்போது வீட்டிற்குள் இருந்த அஜித் வெளியே வர, பெரியவர் பதறி “இதோ முடிச்சிடுறேன் சார்” என்றிருக்கிறார். உடனே அஜித், “ஐயா நீங்க உட்காருங்க” என்று சொல்லி விட்டு அவரே ஒவ்வொரு கல்லாக எடுத்து பதிக்க ஆரம்பித்து விட்டார். ”தம்பி உங்களுக்கு எதுக்கு இந்த வேலை“ என்று அந்த பெரியவர் எவ்வளவோ தடுத்தும் எல்லா கற்களையும் பதித்து விட்டுதான் நிறுத்தியிருக்கிறார். பெரியவருக்கு உரிய சம்பளத்திற்கும் மேலாக கொடுத்து அனுப்பியிருக்கிறார் அஜித். அதே போல் வீட்டில் வழக்கமாக வீட்டு வேலை செய்ய வரும் பெண் ஒரு நாள் தாமதமாக வந்திருக்கிறார். ”ரெண்டுநாளா உடம்புக்கு சரியில்லைய்யா அதான் வர லேட்டாகிடுச்சு” என்றிருக்கிறார். இதை வீட்டிற்குள்ளிருந்து கேட்டுகொண்டிருந்த அஜித், “இன்னைக்கு நீங்க இங்கேயே ஒரு இடத்தில் உட்காருங்க என்று அவருக்கு சுடச்சுட டீயை போட்டுக்கொடுத்து விட்டு, மள மள வென்று சமையல் வேலையிலும் இறங்கி விட்டாராம். மதியம் அந்த வேலைக்கார அம்மாவுக்கு அஜித்தே பரிமாறி சாப்பிட வைத்து அனுப்பியிருக்கிறார்.
இதோ அவர் வீடே வந்து விட்டது அவரை பார்த்து விட்டு இன்னும் ஒரு கதையை சொல்றேன். நண்பர் சுரேஷ் சந்திரா என்னை வரவேற்று அஜித்தின் தனி அறைக்குள் அமரவைக்கிறார். அது ஒரு மினி தியேட்டர் போலிருக்கிறது. சிறிது நேரத்தில் கருப்பு டிஷர்ட், ஷாட்ஸ் போட்டு அறைக்குள் வந்தார். “வாங்க பாஸ்” என்றபடி கைகுலுக்கினார். “என்ன சாப்பிடுறீங்க காஃபி, டீ” என்று அவரே சாய்ஸ் கேட்கிறார். நான் தயங்கியபடி அமைதியாக இருந்தேன். “ஏன் பாஸ் தயங்குறீங்க என்ன வேணும் சொல்லுங்க” என்று மறுபடியும் கேட்க, “எனக்கு மோர் வேணும் கிடைக்குமா” என்றதும், ஒரு நிமிடம் என்னை பார்த்து சிரித்து விட்டு, “இதுதான் எனக்கு பிடிக்கும் நமக்கு என்ன வேணும்கிறதை நாமதான் தீர்மானிக்கனும்” என்று விருட்டென்று எழுந்து ஃபிரிட்ஜை திறந்து அவரே மோர் கலக்க ஆரம்பித்தார். ”இன்னொரு க்ளாஸ் வேணுமா கண்ணன்.” என்று கேட்டார் ”போகும்போது குடிச்சுக்கிறேன்” என்றேன். ”பேட்டியை ஆரம்பிக்கலாமா சார்” “எதுக்கு கண்ணன் பேட்டியெல்லாம் சும்மா பேசிக்கலாம்.” என்று சொல்லவும் நானும் அதை ஏற்றுக்கொண்டேன்.
பில்லா 2 படத்தில் ஒரு ஹெலிகாபட்டர் ஷாட்டில் அதன் கதவை திறந்து வைத்து வாசலில் நின்றபடி பறப்பார். “ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்குறீங்க.” என்று கேட்டேன். இந்த கேள்வியை வேறு ஒரு ஹீரோவிடம் கேட்டிருந்தால் ”ஆமாம் சார் ரிஸ்க் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி” என்று பீற்றிக்கொண்டிருப்பார். ஆனால் அஜித், ”ஷேப்டிக்கு இடுப்பில் கம்பி கட்டியிருந்தேன் பாஸ். ஆனால் படத்தில் அது தெரியாது. இந்த காட்சியை க்ராஃபிக்ஸில் கூட எடுத்திருக்கலாம் ஆனால் படம் பார்க்க வரும் என் ரசிகர்களை திருப்தியாகனும், அந்த திரில்லிங்கை அவங்களும் அனுபவிக்கனும அதுக்காகதான் அந்த ரிஸ்க்கை எடுத்தேன்.” என்றார். சட்டென்று “நீங்கள் ஹெல்மெட் போடுறீங்களா” என்றார் “இல்லை” என்றேன். “அப்ப நீங்களும் ரிஸ்க் எடுக்குறீங்கனுதான் அர்த்தம். இனிமேல் ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்க. எதுல இல்ல ரிஸ்க்” என்று அக்கறைபட்டவரிடம் ‘ஏன் எப்பொதும் தனிமையிலே இருக்கீங்க?” என்றேன்.
“நானும் ஒரு காலத்தில் நண்பர்களோடு இருந்தவன்தான் ஆனால் அதெல்லாம் ஒருகாலம். இப்போ எனக்கு நானே நண்பன். சினிமா இல்லைன்னாலும் இந்த அஜித் இருப்பான்னு நம்புற என்னை புரிஞ்சவங்க சிலர் இருக்காங்க. அது போதும் வாழ்க்கை நல்லபடியாக போய்கிட்டிருக்கு. சினிமா இல்லைன்னா எத்தனையோ வேலைகள் இருக்கு அதை செய்து பிழைச்சுக்குவான் இந்த அஜித். என்று சொல்லிவிட்டு மௌனம்காத்தார். பிறகு அவரே எழுந்து மீண்டும் எனக்கு பிடித்த மோரை கலந்து கொடுத்தார். நான் குடித்துக்கொண்டே, “எப்படி சார் ரஜினி உங்ககிட்ட இவ்வளவு அன்பாக இருக்கார்.” என்றேன். இப்படிக்கேட்டதும் மெதுவாக தலையாட்டிக் கொண்டே “அது எங்க அம்மா அப்பா செய்த புண்ணியம் பாஸ். என்னை பொருத்தவரை ரஜினி சார் எனக்கு கடவுள் மாதிரி. அவர் எனக்கு சில விஷயங்களில் வழிகாட்டியா இருக்கார். என் வாழ்க்கையில் முக்கியமானவர்.” என்று அவர் சொல்லிகொண்டிருக்க அவர் கை தானாக கும்பிடுகிறது. “தயவுசெய்து இந்த விஷயத்தை பேட்டியில் எழுதாதீங்க பாஸ். அவரை எனக்காக விளம்பரத்துக்கு பயன்படுத்திக்கறதா யாரும் நினைச்சிடக்கூடாது.” என்று கேட்டுக்கொண்டார். அவர் சொன்னதுபோலவே நான் அந்த விஷயத்தை பேட்டியில் எழுதவில்லை. இப்போதுதான் எழுதுகிறேன். அதை நான் எழுதியிருந்தால் அஜித் சொன்னது போல ரஜினி பற்றிய டைட்டிலைதான் அட்டையில் போட்டு கட்டுரை வந்திருக்கும். அப்படி வராததில் அஜித்திற்கு ரொம்பவே திருப்தி. அதை பிறகு ஒருநாள் நான் அவரிடம் பேசும்போது தெரிந்துகொண்டேன்.
இப்படி விளம்பரத்தை விரும்பாத மனிதராக அஜித் இருக்கும் சினிமாவில்தான் அதற்கு எதிர்மாறான எண்ணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அதற்கு ஒரு சம்பவத்தை சொல்கிறேன். அப்போது குங்குமம் இதழில் வேலைசெய்துகொண்டிருந்தேன். ஒரு அரசியல் தலைவர் ஹீரோ போல் ஒரு படத்தில் நடித்துகொண்டிருந்தார். படம் மெதுவாக வளர்ந்து கொண்டிருந்தது. படத்திற்கு ஒரு பெரிய விளம்பரத்தை எதிர்பார்த்த இயக்குனர் அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். அவர் எனக்கும் நண்பர்தான். ஒருநாள் எனக்கு போன் வந்தது. “கண்ணன் நான் சொல்றதை கவனமா கேளுங்க. என்னை ஒரு கும்பல் கடத்தி சாலிகிராமத்துல இருக்குற ஒரு லாட்ஜில் அடைச்சு வெச்சிருக்காங்க. நான் அவங்களுக்கு தெரியாமல் போன் பண்றேன். நீங்க ரூம் நம்பர் 201 க்கு எப்படியாவது சரியா 3.30 மணிக்கு வந்து காப்பாத்துங்க.” என்று ரகசிய குரலில் பேசி போனை வைத்தார். நான் பரபரப்பானேன். ஆனால் லேசான சந்தேகம். இருந்தாலும் அவர் என் நணபர் லாட்ஜை கண்டுபிடிக்கனுமே என்று அவர் குறிப்பிட்ட நேரத்திரற்கு முன்பே அந்த இடத்துக்கு நான் சென்று விட்டேன்.
சாலிகிராமம் முழுதும் அந்த லாட்ஜ் இருக்கும் இடத்தை தேடி அலைந்து ஒரு வழியாக கண்டுபிடித்துவிட்டேன். இரண்டு மணிக்கே அங்கிருந்தேன். பக்கத்தில் இருக்கும் டீக்கடையிலிருந்து லாட்ஜை நோட்டம் விடலாம் என்று நினைத்து டீக்கடைக்குப் போனேன். டீக்கடையில் அந்த காட்சியைப் பார்த்து ஷாக் ஆகிவிட்டேன். பின்னே, தன்னை கடத்திட்டதா சொன்ன அந்த இயக்குனர் லுங்கியை கட்டிக்கொண்டு டீக்கடையில் ஹாயாக பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் அவருக்குப் பெரிய ஷாக். ’3.30 மணிக்குதானே வரச்சொல்லியிருந்தோம் இவ்வளவு சீக்கிரமா வந்துட்டானே’ என்று அவர் முகத்தில் அதிர்ச்சியும் குழப்பமும் கூடவே அசடும் வழிந்ததை பார்க்க முடிந்தது. அவர் எண்ணமெல்லாம் அன்று மாலை செய்திதாளில் ’அரசியல் தலைவர் நடிக்கும் படத்தின் இயக்குனர் கடத்தல்’ என்ற செய்தி வந்துவிடும் அவருடைய தொண்டர்கல் எல்லாம் தமிழ் நாடு முழுதும் மறியல், கடையடைப்பு என்று இறங்கி விடுவார்கள் இந்த விளம்பரமே போதும் படத்தை ரிலீஸ் செய்துடலாம் என்பதுதான். ஆனால் எனக்கு ஏற்பட்ட சின்ன சந்தேகத்தால் அலுவலகத்திலோ, தினகரன், தமிழ்முரசு அலுவலகத்திலோ சொல்லாமல் முதலில் நாம் சென்று பார்த்துவிடலாம் என்று களமிறங்கினேன். பெரிய விளம்பர யுக்தி பலிக்காமல் போனது அவருக்கு தோல்வி. எனக்கு வெற்றி.
இப்போது அஜித் விஷயத்திற்கு வருவோம். இப்போதும் அவர் ஒரு படம் நடித்து முடித்ததும் நண்பர் சுரேஷ் சந்திரா மூலம் பல்வேறு அனாதை ஆஷ்ரமங்களுக்கு செக் மூலம் தொகைகளை கொடுத்து அனுப்புவார். இது பற்றி யாருக்கும் சொல்லகூடாது என்றும் சொல்லிவிடுவார். இப்படி அவர் செய்த தர்மம்தான் ’ஆரம்பம்’ படத்தின் தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்தினத்தை காக்கும்படி வசூலை வாரி குவித்திருக்கிறது.
வசூல் என்றவுடன் ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. கவிஞர் மு.மேத்தா அவர்களிடம் நான் பணியாற்றியபோது நடந்தது. அவர் அப்போது ’காஷ்மீர்’ என்ற படத்திற்கு பாட்டு எழுதி கொடுத்திருந்தார். நான் அதை எடுத்துக்கொண்டு அந்த கம்பெனிக்கு போனேன். படத்தில் வேறு பல கவிஞர்களும் பாடல்கள் எழுதியிருந்தார்கள். அதில் ஒரு பாடலை அப்போது பரபரப்பாக பேசப்பட்டு வந்த சிம்பு, ஐஸ்வர்யா ஆகிய இருவரையும் பாடவைக்க முடிவாகியிருந்தது. நான் போன நேரத்தில் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் அவர்கள் இருவரும் பாடிவிட்டுப் போனதை சொன்னார்கள். ”ஸாரி..ஆண்டி ஸாரி அங்கிள்….” என்ற அந்த பாடல் படம் வெளிவந்திருந்தால் பெரிய பரபரப்பை கிளப்பியிருக்கும். ஆனால் ’காஷ்மீர்’. என்றாலே பிரச்சனைதானே படம் வெளிவரவில்லை பாடலுக்கான தொகையை வாங்குவதற்காக தயாரிப்பு மேலாளரிடம் பேசினேன். நாளை வரசொன்னார். ஆனால் அவர்கள் பணம் தராமல் சமாளிக்கவேண்டும் என்ற முடிவிலிருந்தார்கள் என்பதை நண்பர் மூலம் தெரிந்து கொண்டேன். ஆனால் அந்த பணத்தை வாங்க நான் ஒரு பக்கா ஐடியா செய்தேன். அது அடுத்த வாரம்.
(தாழ் திறக்கும்)
தேனி கண்ணன் – 9840515216