‘படையப்பா இரண்டாம் பாகம்’ – ரஜினி வீட்டில் நடந்த டிஷ்கஸன் – பூங்கதவே தாழ் திறவாய்…. / பகுதி 04

85

போயஸ் கார்டனில் ரஜினியுடன் நடந்த சந்திப்பை விலாவாரியாக எழுதி அது குமுதம் ரிப்போர்ட்டரில் அசத்தலாக வந்திருந்தது. தமிழ்நாடு முழுக்க போஸ்டர்களில் ரஜினி சிரித்தது பரபரப்பை கிளப்பியது. இவ்வளவு பரபரப்பை நானே எதிர்பார்க்கவில்லை. அதுதான் ‘ரஜினி ரகசியம்’.

இப்படியொரு அட்டைப்பட தகவலைதான் பத்திரிகையாசிரியர்கள் விரும்புவார்கள். அதைத்தேடி கொடுக்கவேண்டியது நிருபர்களின் கடமை. இதில் நான் எப்போதும் உண்மையாக நடந்து கொள்வேன். அப்படி ஒரு ரஜினி சம்பவத்தை சொல்லிவிட்டு மெயின் மேட்டருக்கு வருகிறேன். நான் இதழில் சேர்ந்த புதிது. இங்கும் செல்லமாய் ராகிங் நடக்கும் ஆனால் அது அறிவுப் பூர்வமாக இருக்கும். சேர்ந்த புதிதில் என்னையும் என் நண்பரையும் அப்போது தலைமை நிருபராக இருந்தவர் ஆளுக்கொரு சிறுகதை எழுதுங்கள் என்றார். எழுதினோம்.

அதேபோல் புகைப்படக் கலைஞர்களுக்கும் அப்படிதான் அசைண்மெண்ட் என்றால் லேசில் வரமாட்டார்கள். அதற்குப் பிறகு கட்டி உருண்டு கன்னத்தில் முத்தமெல்லம் வெச்சுக்குவோம் அது வேற. அப்படி ஒரு நாள் ஜீனியர் விகடனில் படப்பை பக்கத்தில் ஒரு ஆஷ்ரமத்திற்கு ரஜினி வந்து போகிறார் என்ற தகவல் வந்திருந்தது. எனக்கு அந்த ஆஷ்ரமத்திற்கு போய் வந்து எழுதினால் என்னவென்று தோன்றியது. அலுவலகத்தில் கேட்டபோது “ஓ.கே” என்றார்கள். போட்டோகிராபர்களிடம் கேட்டபோது ஆளுக்கொரு வேலை இருப்பதாக சொன்னார்கள். அந்த இடத்தை முதலில் கண்டுபிடிச்சுட்டு வாங்க வர்றோம் என்றார்கள். எனக்கு உள்ளுக்குள் ரோஷம் வந்தது. நேராக போய் எடிட்டரிடம் “சார் நானே கேமரா கொண்டுபோய் எடுத்துட்டு வர்றேன். ஆனால் கட்டுரையில் படங்கள், செய்தின்னு போட்டு என் பேர் வரணும்.” என்றேன்.

எடிட்டர் சிரித்துக் கொண்டே “ஓகே. பாஸ் வேலையை முடிங்க” என்றார். தங்கர்பச்சனிடம் உதவி கேமராமேனாக இருந்த தம்பி தமிழ்ச்செல்வனை அழைத்துக்கொண்டு அவனுடைய வண்டியிலேயே படப்பை கிராமத்தை நோக்கிப் போனோம். ஆனால் அந்த ஆஷ்ரமம் இருப்பது படப்பை இல்லை என்கிற தகவல் அங்குள்ளவர்கள் மூலம் கிடைத்தது. போறோம்…போறோம்.போய்கிட்டேயிருக்கோம். ஏரிக்கரையில் நாலு கிலோ மீட்டர். ஒத்தையடிப்பாதையில் மூணு கிலோ மீட்டர், புழுதி காட்டில் ரெண்டு கிலோ மீட்டர்னு வண்டி பறந்தது. கடைசியில் காஞ்சிபுரம் போற வழியில் இருந்தது அந்த ஆஷ்ரமம். டெவலப் ஆகாத ஒரு சின்ன கிராமம் அது ஒரு மலையடிவாரத்தில் இருந்த தோட்டத்துப் பகுதியில் அமைந்திருந்தது. எங்கும் அமைதி..அமைதி. இன்னும் கற்பழிக்கப்படாத காற்று மண்டலம். ஜில்லென்றிருந்தது. அங்கு வந்து ரஜினி தனது நண்பர் ஹரியுடன் உலவிக்கொண்டருப்பார். அங்குள்ள காய்கறி தோட்டத்தில் சில நேரங்களில் மண்வெட்டியுடன் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு களப்பணியில் இறங்கிவிடுவாராம். அதோடு அங்குள்ள வயதான தொழிலாளர் இருவருக்கு தானே காய்கறிகளை பறித்தும் கொடுத்திருக்கிறாராம். இதை அங்குள்ள அந்த தொழிலாளர்களே சொன்னதை கேட்டு வியந்து போனேன். பிறகு தமிழ்ச்செல்வன் வளைத்து வளைத்து ஆஷ்ரமத்தை கேமராவிற்குள் சுருட்டினார். அங்கிருந்து புறப்பட்டு வீடு வந்து சேர்ந்தேன். மறுநாள் நான் கேட்டது போலவே படங்கள், கட்டுரை தேனி கண்ணன் என்று போட்டு விட்டு “வெல்டன் கண்ணன் சொன்னபடியே முடிச்சிட்டீங்க”. என்று கைக்கொடுத்தார் எடிட்டர். இனி ரஜினி சந்திப்பிற்கு போவோம்.

வண்டியில் வரும்போதே போஸ்டர்களைப் பார்த்தபடியே ஆபீஸ் வந்து சேர்ந்தேன். சரியாக ஒன்பது மணி. போன் அடிக்கிரது. ரஜினி சாரின் வீட்லருந்து தான். “கண்ணன் சார்….தலைவர் உங்ககிட்ட பேசனும்ங்கிறார்.” என்றார் ஒருவர். ரஜினி சார் என்னிடம் பேசுறதுக்கு முன்னால் அவர் வீட்டில் நடந்த உரையாடலை சொல்லி விடுகிறேன்.

அந்த சந்திப்பின் போது தெரிந்த ஒரு விஷயம், ரஜினி ஒரு புத்தக பிரியர் என்பதுதான். மகாபாரதத்தின் புதிய பதிப்பை வாங்கி வைத்து அப்போது படித்துக்கொண்டிருந்தார். அதனால் பாரதத்தில் அவருக்கு பிடித்தமான கதாபாத்திரங்களை பற்றி பேசினார். அந்த கதாபாத்திரத்தை பற்றிய தன்னுடைய அபிப்ராயத்தையும் தெரியப்படுத்தினார். ஆன்மீகத்தின் அடிவேர் வரை அவர் பேசியது பிரமிப்பை ஏற்படுத்தியது. சில நேரங்களில் சென்னையில் நடக்கும் கம்பன் கழக விழாக்களில் அறிவிக்காமலே வந்து அமர்ந்திருப்பார். அதன் காரணம் இப்போது புரிந்தது. இலக்கியம், புராண இதிகாசங்களில் அவருக்கு இருந்த ஆளுமையைப் பார்த்தால் அடுத்த வருடம் கம்பன் விழாவில் சூப்பர் ஸ்டாரையே ஒரு தலைப்பில் பேசவைக்கலாம் என்று தோன்றியது. அப்படியொரு விளக்கம், தெளிவு இருந்தது அவரிடம்.

ரஜினியின் சிறப்பு மலருக்காக டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களை சந்தித்துப் பேசினேன். அப்போது அவர் படையப்பா படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார். “படையப்பா படம் நாங்க நினைச்சதை விட சிறப்பா வந்திருந்தது கண்ணன். என்ன ஒரு சிக்கல்னா படத்தின் நீளம் 22 ரீலாக இருந்தது. எதை வெட்டுறது எதை எடுக்குறதுன்னே தெரியல. திடீர்னு ரஜினி “படத்தை அப்படியே வெளியிடலாம் ரவி இரண்டு இடைவேளை விட்டுடலாம்.”னு சொன்னார். அந்தளவுக்கு நேர்த்தியா இருந்தது படம். ஆனால் அவர் சொன்ன மாதிரி வெளியிட முடியாது. சாத்தியமில்லாத செயல் ஆனால் சார் பிடிவாதமாக இருந்தார். அப்புறம் வீட்டுக்குப் போயி கமல் சாருக்கு போன் பண்ணி கேட்டிருக்கார். கமல்தான் “தப்பு பண்ணிடாதீங்க ரஜினி 16 ரீலுக்கு படத்தை ட்ரிம் பண்ணுங்கனு சொல்லியிருக்கிறார்.” என்றார்.

இந்த உரையாடலை நான் அப்படியே ரஜினிசாரிடம் சொன்னேன், ”நீங்க ஏன் படையப்பா படத்தின் இரண்டாம் பாகமா அந்த மிச்சம் உள்ள படத்தை வெளியிடக்கூடாது.?” இப்படி நான் கேட்கவும், ஒரு முறை என்னை கூர்ந்து பார்த்து விட்டு, “நல்ல ஐடியாவா இருக்கே என்று சிறிது நேரம் கண்மூடி யோசிக்கிறார். பிறகு பேச்சு தொடர்கிறது. அந்த பரவசமான சந்திப்பு நிறைவுக்கு வர, எல்லோரும் ரஜியோடு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். நான் கிளம்பும் போது “படையப்பா ரெண்டாம் பாகத்தை காட்டிருங்க சார்.” என்றேன். தோளில் கைபோட்டு சிரித்து தலையாட்டியபடி விடைகொடுத்தார் சூப்பர் ஸ்டார்.

இப்போது ஆபீஸில் ரஜினியுடன் பேச இரைச்சல் இல்லாத இடமாக தேடி ஓடினேன். “தலைவர் லைனில் இருக்கார் பேசுங்க கண்ணன்.” என்றதும் “வணக்கம் சார்.” என்றேன். “என்ன கண்ணா எப்டி இருக்கீங்க நாம சும்மாதான் சந்திச்சு பேசினோம். நாம பேசினது எல்லாம் வரப்போகுதா.” என்றார் ”இல்ல தலைவா சுவராஸ்யமான சில விஷயங்கள் மட்டும்தான் வரும்.. வேற எதுவும் இல்ல நீங்க வொரி பண்ண வேணாம் தலைவா.” என்றேன். “சரி கண்ணா பார்த்துக்கோங்க.” என்று போனை வைத்தார். (எல்லோரையும் செல்லமாய் “கண்ணா” என்று அழைப்பதுதானே ரஜினி ஸ்டைல். அப்படிதான் அழைத்தாரே தவிர, என் பெயரைச்சொல்லி அல்ல)

இந்த சம்பவத்திற்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமாருக்கு ரஜினி போன் பண்ணி படையப்பா படத்தின் இரண்டாம் பாகம் பற்றி பேசியிருக்கிறார். ஆனால் “அந்த நெகடிவ் எல்லாம் நாம அப்பவே தூக்கிப் போட்டுட்டோம் சார் இனி அது கிடைப்பது கஷ்டம்.” என்று பதில் சொல்லியிருக்கிறார் ரவிக்குமார். இதனால் ரஜினியின் பெரிய ஆசை நிறைவேறாமலே போனது.

இந்த இரண்டாம் பாகத்தின் ஆசையினால்தான் சந்திரமுகியின் அடுத்த பாகத்தில் தனக்கு நேரம் இல்லாததால் அந்த கதையை அஜித்திற்கு சிபாரிசு செய்தார், சூப்பர் ஸ்டார். பல பெரிய நடிகர்கள் இருந்த போதும் அந்த படத்திற்கு அஜித்தை தேர்ந்த்தெடுத்ததற்கு முக்கிய காரணம் இருக்கிறது. அதுதான் பாசாங்கு இல்லாமல் பழகும் அஜித்தின் குணம். நட்பிற்கு அவர் தரும் மரியாதை. இது எல்லாமெ ரஜினியிடம் இருக்கும் குணம். அதே போல் ரஜினியை பற்றி பேசினால் அஜித்திடம் அப்படியொரு பணிவு, மரியாதையைப் பார்க்கலாம். அப்படியொருநாள் அஜித்தை சந்திக்கப் போயிருந்தபோது அதை காண நேர்ந்தது. அப்போது ரஜினி பற்றி அஜித் என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்களை அடுத்த வாரம் பார்க்கலாம்.

(தாழ் திறக்கும்)
தேனி கண்ணன்.

Leave A Reply

Your email address will not be published.