இயக்குனர் பாண்டிராஜ் பெயரில் மோசடி – போலீஸில் புகார் அளித்தார்

84

ஆசை இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்களும் இருக்கத்தான் செய்வார்கள் என்பதற்கு இயக்குனர் பாண்டிராஜின் பெயரை வைத்து நடந்துவரும் மோசடியை சமீபத்திய உதாரணமாக சொல்லலாம். இயக்குனர் பாண்டிராஜ் தனது படங்களில் புதுமுகங்களுக்கும் குழந்தை நட்சத்திரங்களுக்கும் அதிக அளவில் வாய்ப்பு தருபவர். இதனால் சினிமா ஆசையில் இருக்கும் பலர் அவரிடம் வாய்ப்பு பெற முயற்சி செய்வதும் வாடிக்கையான ஒன்றுதான்.

ஆனால் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த மோசடிக்கும்பல் ஒன்று இதுபோல நடிக்கும் ஆர்வம் உள்ள சிலருக்கு போன் செய்து, இயக்குனர் பாண்டிராஜ் போலவே பேசி, அவர்களுக்கு தனது படத்தில் வாய்ப்பு தருவதாகவும் அதற்காக நடிகர் சங்கத்தில் தானே அவர்களை உறுப்பினராக சேர்த்து விடுவதற்கு ரூ.49,000 பணத்தை தான் சொல்லும் வங்கிக்கணக்கில் செலுத்துமாறும் சொல்லுகிறார்களாம்.

இயக்குனர் பாண்டிராஜ் தான் பேசுகிறாரோ என இதை நம்பி பலர் பணம் கட்டி ஏமாந்துள்ளனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைந்த பாண்டிராஜ் நேற்று விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை அளித்து அந்த மோசடிக்கும்பலை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இதுபற்றி பாண்டிராஜ் கூறும்போது, “நான் யாருக்காவது வாய்ப்பு தருவதாக இருந்தால் அவர்களை தனது அலுவலகத்துக்கே நேரடியாக வரவழைத்து பேசுவேனே தவிர தொலைபேசி மூலமாகவோ அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவோ வாய்ப்பு தருவதாக கூறுவதில்லை. குறிப்பாக எனது ‘பசங்க புரடக்ஷன்ஸ்’ நிறுவனத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக சில விஷமிகள் இதுபோல செய்து வருகிறார்கள். அதனால் யாரும் இதுபோன்று ஏமாற வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.